தனிமைத் துயர் தீராதோ 16 – 1

கவிதா வீட்டு ஹாலில் அமர்ந்திருந்தான் கீர்த்தனன்.

 

முதல் நாளிரவு மனம் சஞ்சலத்தில் இருந்ததில் அவன் உறங்கவே நடுநிசியைத் தாண்டியிருந்தது. இதில் முதல்நாள் செய்த பயணத்தினால் உண்டான களைப்பும் மனதிற்கு இனியவளின் அருகில் உறங்கியதுமாக ஆழ்ந்து அயர்ந்து உறங்கிப்போயிருந்தான்.

 

நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்த நிம்மதியான உறக்கம் தானாகக் கலைந்து அவன் எழுந்து பார்த்தபோது பொழுது மதியத்தைத் தொடத் தொடங்கியிருந்தது.

 

மித்ராவும் சந்துக்குட்டியும் எழுந்தது கூடத் தெரியாமல் உறங்கி இருக்கிறோமே என்று யோசிக்கையிலேயே, யன்னல்களின் ஷட்டர்கள் தூக்கப்படாமல் இருப்பதும், பூட்டியிருந்த கதவும் மித்ராதான் அவனது தூக்கம் கலையாமல் இருக்க அப்படிச் செய்திருக்கிறாள் என்று ஊகித்துக்கொண்டான். அவளின் அனுசரணையில் உள்ளத்தில் இதம் பரவிய அதே நேரம் இதையெல்லாம் இழந்து நிற்கிறோமே என்று எண்ணியதில் ஒருவித ஏக்கமும் பரவியது.

 

ஒருவழியாக எழுந்து குளித்துவிட்டு அவன் கீழே வந்தபோது சேகரனும் தாமோதரனும் வெளியே சென்றிருந்த செய்தி கிட்டியது. காலை உணவை முன் மதியப்பொழுதில் முடித்துக்கொண்டு, அவர்கள் வரும்வரை தொலைக்காட்சியைப் பார்க்கலாம் என்று ஹால் சோபாவில் அமர்ந்துகொண்டான். அது பெயருக்குத்தான். சங்கரிக்கு உதவிகள் செய்தபடி இருந்த மித்ராவைத்தான் கவனித்துக்கொண்டே இருந்தான்.

 

அவன் பெற்ற மகனோ, தகப்பன் என்று ஒருவன் இருப்பதையே மறந்து அம்மாவோடும் புதிதாகக் கிடைத்த அம்மம்மாவோடும் ஐக்கியமாகிப் போயிருந்தான். கையில் ஒரு காரட் வேறு! அதை எலி கடிப்பதுபோல் கடித்துத் தின்னும் அழகு வேறு பெற்றவனின் மனதை கரைத்துக் கொண்டிருந்தது.

 

ஹாலையும் சமையலறையையும் இடுப்பளவிலான சுவரே தடுத்து நின்றதில், ஹாலில் இருந்தே சமையலறையில் நடப்பதை கவனித்தபடி இருந்தான் கீர்த்தனன்.

 

மகளைப் பார்க்கிறேன் என்கிற சாட்டில் கவிதாவும், அவளுக்கு உதவுகிறேன் என்கிற பெயரில் லக்ஷ்மியும், தோழியாக யமுனாவும் கவியின் அறைக்குள் அடைக்கலமாகியிருந்தனர்.

 

சதியாலோசனை நடக்கிறது போலும்! கீதனின் உதடுகள் ஏளனமாக வளைந்தது!

 

அங்கே அடுப்பில் எதையோ கிளறிக் கொண்டிருந்த சங்கரி, “மித்ரா, அங்கே பார் கத்தரிக்காய் இருக்கிறது. அதை எடுத்து மெல்லிய நீட்டு நீட்டு துண்டுகளாக வெட்டம்மா. உப்பு, மஞ்சள், தூள் போட்டுப் பிரட்டிவிட்டுப் பொரித்தால் எல்லோருக்கும் பிடிக்கும்.” என்றார் அடுப்பில் கவனமாக.

 

காரட் அறிந்துகொண்டிருந்த மித்ராவோ அதைக்கேட்டுத் திருத் திரு என்று முழித்தாள்.

 

எப்போதுமே அவளுக்குக் கத்தரிக்காய், வாழைப்பூ போன்றவைகள் வெட்டவோ அரியவோ பிடிப்பதில்லை. எவ்வளவுதான் கவனமாக வெட்டினாலும் அதில் இருக்கும் கறை அவள் கைகளில் படிந்துவிடும். கீதனோடு இருந்த காலங்களில் அவனுக்குப் பிடிக்கும் என்பதால் அவற்றைச் சமைக்கப் பழகியிருந்தாலும், அவன்தான் அவற்றை அவளுக்கு வெட்டிக் கொடுப்பது வழமை. அதன்பிறகோ அவனுக்குப் பிடித்த உணவை அவன் இல்லாமல் உண்ணப் பிடிக்காமல் அவற்றைச் சமைப்பதையே விட்டிருந்தாள்.

 

இப்போது சங்கரி அம்மா வெட்டச் சொல்லிவிட்டாரே. எப்படி மறுப்பது? தன்னை அறியாமலேயே கீதனைப் பார்த்து அவள் பரிதாபமாக விழிக்க, அவன் விழிகளிலோ குறும்பு பளிச்சிட்டது. அடக்கப்பட்ட புன்னகையில் உதடுகள் துடிக்க அவளைப் பார்த்தான்.

 

அவளுக்கும் புன்னகையை அடக்க முடியவில்லை. தன்னை மறந்து சுட்டு விரலை நீட்டி செல்லமாக மிரட்டினாள்.

 

கருவண்டு விழிகளை உருட்டி, செம்பவள இதழ்களைச் சுளித்து, வெண்டைப் பிஞ்சு விரல் அவனிடம் கவனம் காட்டிய அழகில் மனம் கொள்ளை போனவனின் பார்வை மாறியது. சில கணங்கள் அவளிடமிருந்து விழிகளை அகற்ற முடியாமல் தவித்தவன், அங்கே சங்கரியும் இருப்பதை உணர்ந்து வேகமாகப் பார்வையை விலக்கிக்கொண்டான்.

 

அதுவரை இருந்த மாயையில் இருந்து வெளிவந்த மித்ராவும் வெடவெடத்துத்தான் போனாள். என்ன காரியம் செய்துவிட்டாள்? சும்மாவே அவளைப்போட்டு வறுத்தெடுப்பவன், அதிகமாக எதற்கும் ஆசைப்பட்டு விடாதே என்று எச்சரித்தவன் இப்போது அவளைப்பற்றி எவ்வளவு கேவலமாக நினைப்பான்?

 

நினைக்கவே மேனியெல்லாம் கூச, கண்களில் நீர் கோர்த்தது.

 

“என்ன மித்ரா அப்படியே நிற்கிறாய்? விரைவாகக் கத்தரிக்காயை வெட்டிக் கொடம்மா. சமையலை முடித்துவிட்டால் நிம்மதியாக இருக்கலாம்..” என்ற சங்கரியின் பேச்சில் பெரும் சிரமப்பட்டுத் தன்னை மீட்டவள், கத்தரிக்காயை கையில் எடுத்தாள்.

 

அதைப் பார்த்த கீதனுக்கு, சற்று முன் அவனுக்குக் கவனம் காட்டிய அந்த மெல்லிய நீண்ட தளிர் விரலில் கறை படிவதை கற்பனையில் கூடக் காணப் பிடிக்கவில்லை. சட்டென்று எழுந்து சமையலறைக்குச் சென்றான்.

 

“எனக்கும் ஏதாவது வேலை தாருங்களேன் மாமி. சும்மா இருக்க அலுப்பாக இருக்கிறது.” என்றான் சங்கரியிடம்.

 

“சமையலறையில் நீ செய்ய என்ன இருக்கிறது தனா. எப்போதும் வேலை வேலை என்று ஓடுகிறவன் இங்காவது சும்மா இரு. ஓய்வாக இருந்தால் உடம்புக்கும் நல்லதுதானே.”

 

“பரவாயில்லை மாமி. இந்தக் கத்தரிக்காயையாவது வெட்டுகிறேன்.” என்றவன், மித்ராவிடம் இருந்து வாங்கி வெட்டத் தொடங்கினான்.

 

நிமிர்ந்து பார்த்தால் அவனுடைய இளக்காரனமான பார்வையைச் சந்திக்க நேர்ந்துவிடுமோ என்று பயந்து, அவன் பக்கமே திரும்பாமல் அங்கிருந்த பாத்திரங்களைக் கழுவி வைக்கத் தொடங்கினாள் மித்ரா.

 

error: Alert: Content selection is disabled!!