நடந்த சம்பாசனைகளை எல்லாம் கேட்டபடி மகளுக்குப் பால் கரைக்க அங்கே வந்த கவிதாவுக்குத் தமையன் மித்ரா நிற்கும் இடத்தில் நிற்பதை பார்க்கவே எரிச்சலாக இருந்தது.
இதை விடக்கூடாது என்று நினைத்து, “அண்ணா என்னைக் கடைக்குக் கூட்டிக்கொண்டு போகிறாயா? திவிக்கு ஒரு சட்டை பார்த்து வைத்தேன். எடுக்கவேண்டும். இவர் இப்போது வருவார் போல் தெரியவில்லை.” என்றாள்.
இரவு நடந்த பேச்சுக்கள் நினைவில் வர, உள்ளே எழுந்த வெறுப்பில் சூடாகக் கேட்கத் துடித்த நாவை சங்கரியை எண்ணி அடக்கிக்கொண்டு சம்மதித்தான்.
தன்னோடு மித்ராவையும் கூட்டிக்கொண்டு போகவேண்டும் என்று அவன் எண்ணிக்கொண்டிருக்க, “நாங்கள் தயார். வாண்ணா போகலாம்..” என்றபடி கவிதா மகளோடு வர, அவளோடு யமுனாவும் அவனது அன்னையும் சேர்ந்தே வந்தனர்.
பார்த்த நொடியே அவர்களின் இன்றைய குறி மித்ரா அல்ல தான்தான் என்பது விளங்க, ஒரு முடிவோடு அவனும் புறப்பட்டான். நடப்பதையெல்லாம் கவனித்தும் கவனிக்காததுபோல் மித்ரா நடமாடிக்கொண்டிருக்க, சங்கரியின் விழிகள் யோசனையோடு அவள் மீது படிந்தது.
“நீயும் போய் நம்மூர் கடைகளைப் பார்த்துக்கொண்டு வரலாமே.” என்றார் அவளிடம்.
“நான் ஜெர்மனியிலேயே எங்களுக்குத் தேவையானவைகளை எடுத்துவிட்டேன்.” என்றாள் அவள்.
கீர்த்தனன் காரை எடுக்கவும் திவ்யா, கவிதா, லக்ஷ்மி மூவரும் பின்னால் அமர்ந்துகொள்ள யமுனா அவனருகில் அமர்ந்துகொண்டாள்.
முதல்நாள் அப்படி அவள் அமர்ந்ததை இலகுவாக எடுத்துக்கொண்டவனால் இன்று அது முடியவில்லை. ஆனாலும் பொறுத்துக்கொண்டான். என்னதான் நடக்கிறது என்று பார்ப்போமே!
கடைக்குள் நுழைந்ததுமே, “அண்ணா, நாங்கள் திவிக்குப் பார்த்த சட்டையை அவளுக்குப் போட்டுப் பார்க்கப் போகிறோம். நீ யமுனாவை கூட்டிக்கொண்டுபோய் அவளுக்கு ஏதாவது வாங்கிக்கொடு. நம் வீட்டு விசேசத்துக்கு வந்திருக்கிறாள் இல்லையா..” என்றாள் அவனது அன்புத் தங்கை.
தங்கையையும் தாயையும் பார்வையால் அளந்தவன், ஒன்றும் சொல்லாமல் யமுனாவை அழைத்துக்கொண்டு செல்ல, தாய் மகள் இருவரினதும் முகத்தில் வெற்றிப் புன்னகை.
பெண்களின் சேலைப் பகுதிக்குச் சென்றதும், “உங்களுக்குப் பிடித்ததாய் ஒரு சேலை எடுத்துத் தாருங்கள் தனா.” என்றாள் யமுனா.
“ஏன், அதை நானா கட்டப் போகிறேன்?”
“கேலி செய்யாதீர்கள் தனா. நான்தான் கட்டப் போகிறேன். அது உங்களுக்குப் பிடித்ததாக இருக்கவேண்டும்.”
“எனக்குப் பிடித்ததை நீ எதற்குக் கட்டவேண்டும்?”
“உங்களுக்குப் பிடித்தமாதிரி நடந்துகொள்ளத்தான் எனக்குப் பிடிக்கிறது.”
“எனக்குப் பிடித்தமாதிரி நீ எதற்கு இருக்கவேண்டும்?”
“ப்ச் தனா! என்ன இது? எதைச் சொன்னலும் அதற்கு ஒரு கேள்வியைக் கேட்கிறீர்கள்? ஒன்றுமே தெரியாதவர் மாதிரி விளையாடாதீர்கள்!”அவளது உரிமையான பேச்சு எரிச்சலைக் கிளப்ப, அதுவரை இழுத்துப் பிடித்திருந்த அவனது பொறுமை பறந்தது.
“உன் மனதில் நீ என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறாய்?” என்று கடுமையாகக் கேட்டான்.
“உன்னைக் கட்ட முடியாது. வேறு திருமணம் செய்துகொள் என்று சொன்னபிறகும் இப்படி வெட்கமில்லாமல் என் பின்னாலேயே அலைகிறாயே, கொஞ்சம் கூடவா உனக்குச் சூடு சுரணை இல்லை?” கடுமையான குரலில் அவன் கேட்டுவிடக் கலங்கிப்போனாள் அவள்.
“இதென்ன பேச்சு தனா? அ..லைவது அது இது என்று…” வார்த்தைகள் வராமல் தடுமாறினாள்.
“அலையாமல் வேறு என்ன செய்கிறாய்? ஒரு அந்நிய ஆணிடம் வந்து சேலை எடுத்துத் தாருங்கள் என்றால் அதன் அர்த்தம் என்ன? ஒரு பிள்ளைக்குத் தகப்பனிடம் வந்து இப்படிக் கேட்க வெட்கமாக இல்லையா உனக்கு?”
“எதற்கு வெட்கம்? ஒரு காலத்தில் நீங்களும் என்னை விரும்பியவர் தானே?”
“அப்படி என்று என்றாவது நான் உன்னிடம் சொன்னேனா? எங்கள் வீட்டுக்கு நான் அழைக்கும் நேரமெல்லாம் வந்துநின்று பல்லைக் காட்டினால் எந்த ஆணாக இருந்தாலும் பார்ப்பான் தான். அதற்காக நீ என்ன வேண்டுமானாலும் கற்பனை செய்வாயா? அதைவிட, அம்மா உன்னை மணந்துகொள்ளச் சொல்லிக் கேட்டபோது மாட்டேன் என்று சொல்லிவிட்டுத்தானே மித்ராவை மணந்தேன். பிறகும் எதற்கு ‘விடாது சனி’ போல் என்னையே துரத்துகிறாய்?”
அவள் சனியனா? அவனிடம் பல்லைக் காட்டினாளா? எவ்வளவு கேவலமாகப் பேசுகிறான்?
விக்கித்துப்போய் அவள் நிற்க, “அல்லது உன் அண்ணாக்கள் தான் என் பின்னால் சுற்றி என்னைப் பிடிக்கச் சொல்லி உன்னை அனுப்பி வைத்தார்களா? அதனால் தான் கொஞ்சம் கூட உறுத்தலே இல்லாமல் ஒரு இளம்பெண்ணை இவ்வளவு தூரம் தனியாக அனுப்பி இருக்கிறார்கள் போல. நல்ல அண்ணாக்கள் நல்ல தங்கை!” என்றான் இளக்காரமாக.
“தேவையில்லாமல் என் அண்ணாக்களை இழுக்காதீர்கள். அவர்களுக்கு இதில் கொஞ்சம் கூட விருப்பமில்லை. இரண்டாம் தாரமாக ஒருவரை ஏன் கட்ட நினைக்கிறாய் என்று கேட்டார்கள். நான்தான்..” என்று அவள் சொல்லி முடிக்க முதலே,
“அவர்கள் சொல்லியும் கேட்காமல் இங்குவரை வந்திருக்கிறாய் என்றால், யார் பேச்சையும் கேட்காத அடங்காப்பிடாரியா நீ? பெண் என்றால் கொஞ்சமாவது அடக்க ஒடுக்கம் வேண்டும். நீயும் இருக்கிறாயே.. ச்சேய்! இனியும் என்னைத்தான் கட்டுவேன் அது இது என்று சொல்லிக்கொண்டு என் பின்னால் அலைந்தாய் என்று வை, என்ன நடந்தாலும் சரி என்று உன் அண்ணாக்களுக்குப் போனைப் போட்டு நான் கேட்கிற கேள்வியில் அவர்களே உனக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையாகப் பார்ப்பார்கள். செய்யவா?” என்று உறுமினான் கீர்த்தனன்

