யமுனா புருவங்கள் சுருங்க அவரைப் பார்ப்பது புரிய, “தேவை இல்லாததுகளைப் பேசாதே அண்ணா. நாம் இப்போது கதைப்பது உன் திருமணத்தைப் பற்றி. எதற்காக யமுனாவை வேண்டாம் என்கிறாய் நீ? திரும்பவும் அந்த ஒழுக்கம் கெட்டவள் பின்னாலேயே போகப் போகிறாயா?” என்றாள் கவிதா கோபத்தோடு.
“வாயை மூடு!” அடிக்குரலில் சீறினான் கீர்த்தனன்.
வெலவெலத்துப்போனாள் கவிதா. “இனிமேலும் அவளைப்பற்றி ஏதாவது ஒருவார்த்தை பேசினாய் என்று வை, தொலைத்துக் கட்டிவிடுவேன் ராஸ்கல்!” என்றான் கடித்த பற்களுக்கிடையில் கடுமையான குரலில்.
அங்கிருந்த மூன்று பெண்களுக்குமே மேனி சில்லிட்டது. உள்ளுக்குள் ஒருவித குளிர் பரவியது. அந்தளவுக்குக் கடுமையாக இருந்தது அவன் குரல்.
அச்சத்தோடு மூவரும் அவனைப் பார்க்க, “நன்றாகக் கவனி கவிதா! உன் வாழ்க்கையில் எந்தப் பிரச்சனையும் வந்துவிடக் கூடாது என்றுதான் எந்தக் கட்டாயமும் இல்லாதபோதும் அவள் இங்கே வந்திருக்கிறாள். அதை உணராமல் அவளைப் பற்றிக் கேவலமாகப் பேசுகிறாய் நீ. அவள் இங்கிருக்கும் நாட்களில் அவளுக்கு ஏதாவது தீங்கு செய்வாயாக இருந்தால், எதைப்பற்றியும் யோசிக்காமல் எனக்கு விவாகரத்தானதை மாமியிடம் சொல்லிவிடுவேன். பிறகு உன் நிலை என்ன என்று நீயே யோசித்துக்கொள்.” என்றான் அழுத்தமான குரலில் தங்கையிடம்.
அன்று, அவன் மித்ராவையும் கூட்டிக்கொண்டு வரவேண்டும் என்பதற்காக அவள் பயன்படுத்திய அதே அஸ்திரத்தை இன்று அவன் பயன்படுத்தவும் சர்வமும் ஒடுங்கிப்போனாள் கவிதா.
“தங்கையின் வாழ்க்கையையே கெடுக்கப் பாக்கிற நீயெல்லாம் ஒரு தமையன்?”
மகளின் கலங்கிய தோற்றத்தைப் பார்க்க முடியாமல் கொதித்தார் லக்ஷ்மி. அவரை அவன் சட்டையே செய்யவில்லை.
மாறாக, “நேற்று இரவு நீங்கள் மூவரும் பேசியதை எல்லாம் நான் கேட்டுக்கொண்டுதான் இருந்தேன். உங்களின் திட்டம் என்றைக்குமே நடக்காது! என் வாழ்க்கையைப் பார்த்துக்கொள்ள எனக்குத் தெரியும். அதில் இனியும் நீங்கள் தலையிடுவீர்களாக இருந்தால் இனிமேல் ஒரு ரூபாயும் உங்களுக்கு அனுப்ப மாட்டேன். கவிதாவுக்குத் திருமணம் முடித்துக் கொடுத்தாயிற்று. பவி எப்படியும் என்னிடம் வந்துவிடுவாள். இனி நீங்களும் அப்பாவும் தான். உங்கள் செலவை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று விட்டுவிடுவேன் சொல்லிவிட்டேன்!” என்று லக்ஷ்மியிடம் அவன் சொன்னபோது, திகைத்து வாயடைத்துப் போனார் அவர்.
“என்றைக்குமே யாரும் மித்ராவோடு எந்தப் பிரச்சனைக்கும் போகக் கூடாது! எனக்குத் தெரியாமல் எதையாவது செய்ய நினைத்தால் பிறகு அம்மா, தங்கை என்று பார்க்க மாட்டேன். நீங்கள் நடப்பதை பொறுத்துத்தான் இருக்கிறது நான் என்ன செய்வேன் என்பது.” என்று அழுத்தமாக அவன் சொன்னபோது, அங்கிருந்த மூவருக்குமே வாயடைத்துப் போனது.
இனி எந்தப் பக்கமும் திரும்ப முடியாது!
கவிதா சுண்டுவிரலை தன்னும் அசைக்க மாட்டாள். பின்னே, அவளுக்கும் சேர்த்து சமைத்துபோடும் அருமையான மாமியார், பெற்ற மகள்போல் நடத்தும் மாமனார், உழைக்க என்றே பிறந்த நல்ல கணவன் என்று அமைந்த குடும்பத்தை அவளால் இழக்க முடியுமா? நாத்தனார் பூத்தனர் என்று யாருமில்லா பிக்கள் பிடுங்கல் இல்லாத குடும்ப வாழ்க்கை. அருமையாக அமைந்த வாழ்க்கையில் பிரச்னையை உண்டுபண்ணி, தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்ள அவள் என்ன விசரியா?
மகளின் வாழ்க்கைக்கு ஒன்று என்றால் லக்ஷ்மி அம்மாள் பல்லு பிடுங்கிய பாம்புதான். அதோடு செலவுக்கு அனுப்பும் பணத்தை வேறு நிறுத்திவிடுவேன் என்று சொல்லிவிட்டானே. சொன்னதைச் செய்கிறவன் அவன்! சர்வமும் அடங்கிப்போனார் அவர்.
யமுனாவின் பிரச்சனையும் தீர்ந்தது.
நிம்மதியாக உணர்ந்தான் கீதன். மற்ற மூவரும் உணவை அளைந்து கொண்டிருக்க அவனோ வயிறு நிறைய நன்றாக உண்டான்.
அதன் பிறகு, மகளுக்கு ஏதாவது நகை வாங்கவேண்டும் என்று கவிதா சொல்ல, அதையும் வாங்கிக்கொடுத்து அவர்களைக் கூட்டிக்கொண்டு அவன் வீடு சென்றபோது பொழுது மாலையைத் தொட்டிருந்தது.
கைகள் நிறையப் பைகள் இருந்தாலும் பெண்கள் மூவரினதும் முகங்கள் மட்டும் இறுகிப்போயிருந்தது. கீதனின் முகத்தில் மட்டும் அலைந்ததில் உண்டான களைப்பையும் மீறி ஒருவிதத் தெளிவு.
உடனேயே அந்த நேரத்துக்கு இதமாகத் தேநீர் தயாரித்து, சங்கரி அம்மா ஏற்கனவே செய்து வைத்திருந்த முறுக்கோடு கொண்டுவந்து கொடுத்தாள் மித்ரா.
ஒருவாய் பருகிய கீதனின் தொண்டையை இதமாக நனைத்தது தேநீர். அவனுக்குப் பிடித்த சூட்டில் அவனுக்குப் பிடித்த அளவில் இனிப்பும் சேர்ந்து அமிர்தமாய் இருந்தது தேநீர்!
எத்தனை நாட்களாயிற்று இப்படி அருந்தி?! ஒவ்வொரு துளியையும் ரசித்து ருசித்துக் குடித்தான்.
கவிதா, தமையன் வாங்கித் தந்ததாகச் சொல்லி தான் வாங்கிய சேலைகளை மாமியாருக்குக் காட்டினாள். அதோடு, திவ்யாவுக்கு, அவளது கணவனுக்கு, தாமோதரனுக்கு, சங்கரிக்கு என்று எடுத்த அனைத்தையும் காட்டினாள்.
தன்னுடையதையும் யமுனாவுக்கு எடுத்ததையும் காட்டிய லக்ஷ்மி, “உனக்குத்தான் வாங்க முடியவில்லை. அதற்குள் திவிக்குட்டி அங்கே இருக்க விடவே மாட்டேன் என்று அழத்தொடங்கிவிட்டாள்.” என்றார் மித்ராவிடம்.

