அவனது அக்காவை பிரிந்தது மகா குற்றம் என்கிறான். அவன் மட்டும் என்ன, இதோ சந்தர்ப்பம் கிடைத்துவிட்டது என்று துள்ளிக் குதித்துக்கொண்டா பிரிந்தான்? இன்றுவரை உயிரைப் பிரிந்த வேதனையோடு உயிப்பற்றுக் கிடக்கிறதே அவன் வாழ்க்கை!
நெஞ்சத்தில் பாரமேற கையிலிருந்த கைபேசியை அவன் விரல்கள் அழுத்தமாகப் பற்றியதில், அதன் பட்டன் அழுத்த பட்டுவிட, சந்தோஷோடு இருக்கும் கீர்த்தனன் அதில் சிரித்துக் கொண்டிருந்தான்.
அதைப் பார்த்ததும் உள்ளூர வியப்புற்றுப் போனான் கீர்த்தனன்.
இப்படி ஒரு போட்டோவை எப்போது எடுத்தாள்? அதை உன்னிப்பாகக் கவனித்த போதுதான், அது அவனது வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் பார்க் என்று பின்னணி காட்சியில் புரிந்தது.
உள்ளே ஒருவித பரபரப்புத் தொற்றிக்கொள்ளக் கைபேசியை இயக்கி கலரிக்குள் சென்றான். அங்கே அவனுக்குப் பல இனிமையான அதிர்ச்சிகள் காத்திருந்தது.
ஆமாம்! பல புகைப்படங்கள்! அவனும் சந்தோஷும்.. சிலதில் அவன் மட்டும்..
மக் டோனல்ஸ், பார்க், ரெஸ்டாரென்ட் என்று வழமையாக அவன் மகனோடு செல்லும் இடங்களில் எடுக்கப் பட்டிருந்தது.
சந்தோஷின் ஒரு வயதில் இருந்து இன்று வரைக்குமான போட்டோக்கள் அவை இன்று நேற்று எடுக்கப்பட்டவை அல்ல என்பதை உணர்த்தின. எல்லாவற்றிலும் முதன்மையாகக் கீர்த்தனன் இருந்தான்.
நெஞ்சின் உள்ளே வலித்தது. இன்று இப்படித் தவிப்பவள் அன்று ஏனடி அப்படியெல்லாம் நடந்துகொண்டாய்? என்னை ஏனடி இப்படி உயிரோடு வதைக்கிறாய்? மனதால் மட்டுமே அவனால் அவளோடு சண்டையிட முடிந்தது!
அவள் குளித்து முடித்த அரவம் கேட்கவும், அந்த நேரத்தில் அவளை எதிர்கொள்ள முடியாமல் சட்டென்று எழுந்து வெளியே சென்றான் கீர்த்தனன்.
அன்று திவ்யாவின் பிறந்தநாள். தலைக்குக் குளித்துவிட்டு மித்ரா வெளியே வந்தபோது, மயில் நீலத்தில் தங்க ஜரிகையிட்ட அழகான பட்டுச் சேலையும் அதற்குப் பொருத்தமாக மயில் வடிவிலான நெக்லஸ் செட்டும் கட்டிலில் வீற்றிருந்தது. அதோடு சந்தோஷுக்கும் கறுப்பு நிறத்திலான கோர்ட் சூட்டும், சங்கிலியும்.
குழந்தைக்கு மிட்டாய் கொடுத்துச் சமாதானம் செய்வதுபோல், அன்று அவனுடைய தாய் காட்டிய புறக்கணிப்புக்கு இன்று இவன் சமாதானம் சொல்கிறானா?
அதைத் தொட்டும் பாராமல், அவள் ஜெர்மனியில் வாங்கிவந்த சேலையை எடுத்து அணிந்தவளுக்கு, முந்தானையை ஒழுங்காக மடிப்பெடுத்து ஊசியினால் குற்றிக்கொள்ள முடியாமல் இருந்தது.
கீதனோடு வாழ்ந்த நாட்களில், அவனது ஆசைப்படி எத்தனையோ நாட்கள் சேலை கட்டியிருக்கிறாள் தான். ஆனாலும், அப்போதெல்லாம் அவன்தான் பின் பண்ணிவிடுவான். இப்போது யாரை கேட்பது?
சங்கரியை தேடிச் சென்று, அவரிடம் கொடுத்து முந்தானையை அழகாக மடிப்பெடுத்துப் பின் செய்துகொண்டு அவள் வெளியே வந்தபோது, சேகரனோடு உள்ளே வந்துகொண்டிருந்தான் கீர்த்தனன்.
ஆர்வத்தோடு அவள்மீது பதிந்தன அவன் விழிகள். வேறு சாரி என்றதும் ஏமாற்றத்தோடு முகத்தைத் திருப்பிக்கொண்டான். உள்ளம் படபடத்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் மேலே தங்களுடைய அறைக்குள் புகுந்துகொண்டாள்.
அவள் தலையை வாரத் தொடங்குகையில் உள்ளே வந்தான் கீர்த்தனன்.
கட்டிலில் அவன் வைத்த இடத்திலிருந்து சற்றும் அசையாமல் இருந்த சேலையைக் காட்டி, “இதை ஏன் கட்டிக்கொள்ளவில்லை?” என்று கேட்டான்.
ஒன்றுமே சொல்லாமல் அமைதியாக நின்றாள் மித்ரா. அதைக் கட்டக்கூடாது என்று நினைத்தாள் தான். ஆனாலும், அதற்கான சரியான காரணம் அவளிடமும் இல்லை.
அன்றே அவன் அவளுக்கு வாங்கி வரவில்லை என்கிற கோபமா? அல்லது எதற்கும் அதிகமாக ஆசைப்பட்டு விடாதே என்று சொன்னவனிடம் இருந்து எதையும் வாங்கிக்கொள்ளக் கூடாது என்பதா? அல்லது அவனோடு சுவிஸ் வந்ததற்கான விலை என்று சொல்லிவிடுவானோ என்கிற பயமா?
ஏதோ ஒன்று.. ஆனால் அந்தச் சேலையை அவளால் கட்டமுடியாது!
அது மட்டும் தெளிவாகத் தெரிந்தது. அதை வாய்விட்டுச் சொல்லும் தெம்பின்றி அமைதியாக நின்றவளிடம் இருந்து பார்வையை அகற்றவில்லை அவன்.
அவளுடைய பதிலுக்காகக் காத்திருக்கிறானம்!
“அதுதான்.. உங்களிடம் எதையும் நான் எதிர்பார்க்கவில்லை என்று சொன்னேனே..” என்றாள் மெல்லிய குரலில்.
“நீ எதிர்பார்த்தாய் என்று நானும் சொல்லவில்லையே..” என்றான் அவனும் விடாமல்.
சற்றுத் தயங்கியபோதும், “எனக்கு இதுவே போதும்..” என்றாள் தான் அணிந்திருந்ததைக் காட்டி.
முதன் முறையாகத் தன்னிடம் மறுப்பைக் காட்டும் அவளிடம், ஏனோ எப்போதும்போலக் கோபத்தைக் காட்டமுடியவில்லை அவனால். ஏன், கோபம் வரவே மறுத்தது.
எனவே, “சந்துவுக்காவது அதைப் போட்டுவிடு.” என்றான் தணிந்த குரலில்.
“அவனுக்கும் நான் வாங்கிவந்ததைப் போட்டுவிட்டேன்.”
வேக மூச்சொன்றை இழுத்துவிட்டவன், “அவன் எனக்கும் பிள்ளை தானே. அவனுக்குக் கூட நான் வாங்கியதை போடக்கூடாது என்கிற அளவுக்கு உனக்கென்ன பிடிவாதம்?” என்றான் ஆத்திரத்தோடு.
திடீரென அவன் காட்டிய அந்தக் கோபத்தில் நடுங்கி, பயத்தில் விரிந்த விழிகளோடு அவனைப் பார்த்தாள் மித்ரா.

