அப்படியே அவளை அள்ளியணைத்து ஆறுதல் சொல்லாத துடித்த கைகளைப் பெரும் பாடுபட்டு அடக்கிக் கொண்டவன், “சரிசரி விடு. உன் விருப்பப்படியே செய்.” என்றான் தணிந்த குரலில்.
“அவனுக்கு இதையே மாற்றிவிடுகிறேன்.” என்றாள் அவள் இப்போது.
“வேண்டாம் விடு. சும்மா சும்மா உடைகளை மாற்ற அவன் சினக்கப் பார்ப்பான்.” என்றுவிட்டு வெளியே செல்ல கதவை நோக்கி நடந்தான் கீர்த்தனன்.
“வந்து…” என்று இழுத்தாள் மித்ரா.
நின்று திரும்பி என்ன என்பதாகப் பார்த்தான்.
சற்றுத் தயங்கிவிட்டு, அங்கே அவளது கைப்பையில் இருந்த தாலிக்கொடியை எடுத்து காட்டி, “இதை நான் அணிந்துகொள்ளவா?” என்று கேட்டாள்.
அவளையே ஆழ்ந்து பார்த்தவன், “என் மனைவியாகத்தானே இங்கே வந்திருக்கிறாய்.” என்றுவிட்டு அறையை விட்டு வெளியேறினான்.
கைகள் படபடக்க, நெஞ்சம் தடதடக்க, அந்தத் தாலிக்கொடியை கழுத்தில் அணிந்து கொண்டவளின் மேனியெங்கும் சிலிர்த்தது.
சற்றுநேரம் அது தன் கழுத்தில் கிடக்கும் அழகை ரசித்துக் கொண்டிருந்தவள், வேகமாகத் தயாராகிக் கீழே சென்றாள்.
எல்லோரும் தயாரானதும், சேகரனின் காரில் கவிதா, திவ்யா, லக்ஷ்மி, யமுனா நால்வரும் ஏறிக்கொள்ள, கீதனின் காரில் மித்ரா, சந்தோஷ், தாமோதரன், சங்கரி எல்லோரும் ஏறிக்கொண்டனர்.
அவர்கள் மண்டபத்துக்குச் சென்றபோது அனைத்தும் தயாராக இருந்தது. மண்டப அலங்காரம் தொடங்கி, உணவுவகை முதல், விழா முடிந்தபிறகு மண்டபத்தை ஒதுக்குவது வரை என்று அனைத்து வேலைகளையுமே அதற்குப் பொறுப்பான நிறுவனம் ஒன்றிடம் பொறுப்புக் கொடுத்திருந்தான் சேகரன்.
ரோஜாவண்ண பிராக்கில் அந்த வானுலகத் தேவையெனத் திவ்யா ஜொலிக்க முதலில் கொழுக்கட்டை கொட்டும் வைபவத்தைத் தாய்மாமன் கீதன் நடத்திவைத்தான். திவ்யா முதன் முதலாக ஒரு கையில் பென்சிலையும் மற்ற கையில் காசையும் தூக்கிவிடத் தாய் தந்தையரின் முகத்திலோ பெருமை தாண்டவமாடியது. சங்கரிக்கோ சொல்லி மாளாத பூரிப்பு.
அடுத்து, திவ்யா அணிந்திருந்தது போலவே ரோஜாவண்ண பிராக்கில் இருந்த பார்பி பொம்மை கேக்கில் இருந்த, இலக்கம் ஒன்று மெழுகுதிரியை சேகரன் திவ்யாவின் கையைப் பற்றி ஏற்றினான். அதைத் திவ்யா தன் செப்பு இதழ்களைக் குவித்து ஊதி அணைத்தபோது, மண்டபத்தின் ஒரு மூலையில் இருந்து எல்லோரின் காதுகளையும் பிளந்துகொண்டு பிறந்தநாள் வாழ்த்து பாடல் ஒலித்தது. மேடையில் அவளைச் சுற்றியிருந்த அத்தனை சொந்தமும் பூரிப்பும் மகிழ்ச்சியுமாகக் கைதட்டி ஆரவாரிக்க, மண்டபத்தில் இருந்தும் கரகோஷம் எழும்பியது.
டிஸ்கோ லைட் மேடையில் பலவண்ண ஒளிகளைப் பாய்ச்ச, மேடையின் பின்பக்கத்திலிருந்து மெலிதாகக் கசிந்துவந்த வாசத்துடன் கூடிய புகை டிஸ்கோ லைட்டின் துணையோடு பல வர்ணங்களில் ஒளிர்ந்தது. அதே நேரத்தில் அவர்களின் தலைக்கு மேலே தொங்கிக்கொண்டிருந்த பலூன்கள் உடைக்கப்படவும் அதிலிருந்து பல வர்ணங்களில் இருந்து மின்மினித் துகள்கள் மழைத்துளிகளாய் கொட்டின.
அந்த விண்ணுலகத்தையே சிருஸ்டித்தது போலிருந்தது பார்ப்பவர்களுக்கு. சந்தோஷ் ஆர்வத்தோடு நடப்பதை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க அதேயளவு ஆர்வத்தோடு மித்ராவும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஆளாளுக்குத் திவிக்குட்டியை வாழ்த்திவிட்டு, பரிசில்களைக் கொடுத்துப் போட்டோக்களுக்கு நின்றார்கள். மக்கள் கூட்டத்தாலும், போட்டோ வெளிச்சத்துக்கு நெடுநேரம் நிற்கமுடியாமலும் திவ்யா சிணுங்கும் போதெல்லாம் அப்பப்பா, அப்பம்மா, அம்மம்மா, அப்பா, அம்மா, மாமன் என்று எல்லோரும் மாறி மாறித் தாங்குவதையும், ஒரு இளவரசியைப்போல் அவளைக் கவனிப்பதையும் பார்க்கப் பார்க்க, மித்ராவுக்குத் துக்கத்தில் தொண்டை அடைத்தது.
அதைத் தனக்குள்ளேயே அடக்கிக்கொண்டவள், காலையில் கீதன் கொடுத்த கோர்ட் சூட்டை அவனுக்கு மாற்றிவிட்டாள். அப்படியே அவன் வாங்கிக் கொடுத்திருந்த சங்கிலியையும் அணிவித்து விட்டாள்.
என்ன பிரச்சனையாக இருந்தாலும் அது அவளுக்கும் அவனுக்கும் இடையில் மட்டும் தான். சந்தோஷ் அவர்கள் இருவருக்கும் சொந்தமான பிள்ளை. அவன் மீது கீதனுக்கு இருக்கும் உரிமையைப் பறிக்கும் உரிமை இவளுக்கு இல்லையே!
புது உடையை அணிந்ததுமே தகப்பனிடம் ஓடிப்போய்க் காட்டினான் மகன். முகம் மலர மகனை தூக்கிக் கொஞ்சியவனின் விழிகள், அந்த மண்டபத்தில் மித்ராவை தேடி அலைந்து, அவளைக் கண்டுபிடித்து அவள் முகத்தில் நிலைத்தபோது, ஏனோ அவளுக்கு நெஞ்சு படபடத்தது.
துளைக்கும் அவன் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டாள்.
ஒருவழியாகப் பிறந்தநாள் விழா இனிதே நிறைவுற்று அவர்கள் வீடு திரும்பியபோது நள்ளிரவை தாண்டியிருந்தது நேரம்.
உறக்கத்தில் இருந்த மகனை தூக்கிக்கொண்டு வந்து கட்டிலில் கிடத்திவிட்டு, அவள் சேலையை மாற்றிக்கொள்ளட்டும் என்றெண்ணி அறையை விட்டு வெளியேறினான் கீர்த்தனன்.
சற்று நேரம் கழித்து உள்ளே வந்தவன், மித்ரா இருந்த நிலையைப் பார்த்து அதிர்ந்து அப்படியே நின்றுவிட்டான்.
உடை மாற்றியிருந்த சந்தோஷ் கட்டிலில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, சேலையை மாற்றாமல் இருந்த மித்ரா மகனருகில் அமர்ந்திருந்து அவன் குழல்களைக் கோதிவிட்டுக் கொண்டிருந்தாள்.
அவள் முகத்திலோ சொல்லொணா வேதனை.

