அவனையும் மீறி உள்ளம் துடிக்க, “என்ன?” என்றான் தவிப்போடு.
தன் மோனநிலை கலையாமல், “நம் பிள்ளை பாவம் இல்லையா கீதன்…” என்று துயரத்தோடு சொன்னாள்.
“ஏன்? அவனுக்கு என்ன?” என்றான் புரியாமல்.
“இல்லை.. இன்று திவியின் பிறந்தநாளை எவ்வளவு சந்தோசமாகக் கொண்டாடினார்கள். அவளுக்குத் தேவையானதை பார்த்துப் பார்த்துச் செய்ய எத்தனை பேர் இருந்தார்கள். அம்மா அப்பா, அப்பப்பா அப்பம்மா, அம்மம்மா, மாமா மாமி என்று எத்தனை உறவுகள். ஆனால் நம் பிள்ளைக்கு? அப்படி யாரு…மே இல்லையே..” அதைச் சொல்லும்போதே தழுதழுத்தாள்.
அதிர்ந்துபோய் நின்றான் கீர்த்தனம். “இன்று நடந்த விழாவை வேடிக்கை பார்க்கிறான் என் பிள்ளை. அவன் இதையெல்லாம் அனுபவித்ததே இல்லையே! என் அம்மா அப்பா எனக்கு இப்படியெல்லாம் செய்யவே இல்லையே என்று வருந்தியிருப்பான் இல்லையா? எனக்குத்தான் ஒன்றுக்குமே கொடுப்பினை இல்லாமல் போனது என்று பார்த்தால் என் பிள்ளைக்கும் இல்லாமல் போயிற்றே. அதற்கு நானே காரணமாகிப் போனேனே. ” என்று, தன்னை மறந்து தன் வேதனைகளைக் கொட்டினாள் மித்ரா.
மூன்று வயதுகூட நிரம்பாத குழந்தைக்கு அவள் சொல்வதைப் போலெல்லாம் சிந்திக்கத் தெரியாது என்பதைக்கூட உணரமுடியாமல் தவித்தாள்.
“நான் செய்த பாவம் என் பிள்ளையின் சந்தோசத்தைப் பிடுங்கிக்கொண்டதே கீதன். என் வயிற்றில் பிறந்த பாவத்துக்கு அவன் எப்படியான வாழ்க்கையை இழந்துவிட்டான் என்று பாருங்கள். இப்படியெல்லாம் நடக்கும் என்று முதலே தெரியாமல் போய்விட்டதே. நல்லது கெட்டதை எனக்கு யாருமே சொல்லித் தந்தது இல்லையே கீதன். சொல்லித் தந்திருக்க நான் அப்படியெல்லாம் நடந்திருக்க மாட்டேனே. எல்லாமே நானாக அடிபட்டுக் கற்றுக் கொண்டதுதான். ஆனால், நான் பட்ட அடியெல்லாம் என் பிள்ளையையும் தாக்குவதைத்தான் என்னால் தாங்க முடியவில்லை.” என்றவள், வேதனை தாங்க முடியாமல் கைகளால் முகத்தை மூடிக்கொண்டு விம்மினாள்.
அவள் சொன்னதில் இருந்த உண்மை அவனையும் தாக்கிய போதிலும், கண்முன்னால் கண்ணீர் வடிப்பவளின் துயரை தாங்க மாட்டாமல் அவளருகில் விரைந்தான் கீர்த்தனன்.
“மித்து! இங்கே பார்! நம் மகனுக்கு ஒரு குறையும் இல்லை. அவனுக்கும் எல்லாச் சொந்தமும் இருக்கிறது..” என்றவனின் பேச்சு அவளது செவிகளை எட்டவே இல்லை.
தன் நிலையிலேயே மூழ்கியபடி கண்ணீர் உகுத்தவளின் நிலையைக் காணச்சகியாது, “மித்து!” என்கிற ஓங்கிய அதட்டலோடு அவளைப் பிடித்து உலுக்கினான் கீர்த்தனன்.
திடுக்கிட்டுத் திகைத்தவள் கன்னங்களில் வழிந்த கண்ணீரோடு தன் முன்னால் நின்றவனை அண்ணாந்து பார்த்து மலங்க மலங்க விழித்தாள்.
மெல்ல மெல்ல தன்னெதிரே நிற்பது யார் என்பதும், அவனிடம் என்ன சொல்லிக்கொண்டிருக்கிறோம் என்பதும் புரிய, பதறிப்போய்க் கட்டிலில் இருந்து எழுந்தவள், “இல்லை.. அது.. சந்தோஷ்..நான்..” என்று எதையும் கோர்வையாகச் சொல்லமுடியாமல் தடுமாறிப் பேச்சை நிறுத்தினாள்.
அதற்குமேல் என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தவள் வேகமாகக் குளியலறைக்குள் புகுந்துகொண்டாள்.
ஒரு பெருமூச்சுடன் மகன் அருகில் அமர்ந்து கொண்டான் கீர்த்தனம். அவளின் பேச்சில் இருந்த உண்மை பொட்டில் அறைந்தாற்போல் அவனுக்கும் அப்போதுதான் விளங்கியது.
இந்த வேதனையும் சோதனையும் தீர என்னதான் வழி? கைகளில் தலையைத் தாங்கியபடி இருந்தவனின் சிந்தனையைக் குளியலறையில் இருந்து வெளியே வந்த மித்ரா தடுத்தாள்.
நிமிர்ந்து பார்த்தவனின் புருவங்கள் சுருங்கின.
உடைமாற்றப் போகிறாள் என்று அவன் நினைத்திருக்க, முகத்தை மட்டும் கழுவிக்கொண்டு வந்தவள், அணிந்திருந்த சேலையோடு அறையை விட்டு வெளியே செல்ல முயல்வதைக் கண்டவன், “எங்கே போகிறாய்?” என்று கேட்டான்.
“சங்கரி அம்மாவிடம்..” என்றாள் முணுமுணுப்பாக.
“மாமி களைத்துப் போய்த்தான் வந்தார். இப்போது படுத்திருப்பாரே..”
இனி என்ன செய்வது என்று தெரியாமல் அவள் நிற்க, “என்ன? ஏதாவது வேண்டுமா?” என்று அவளின் தயக்கத்துக்கான காரணம் புரியாமல் கேட்டான் கீர்த்தனன்.
“அது.. அது.. சேலையில் குற்றியிருக்கும் ‘பின்’னைக் கழட்ட வேண்டும்..” திக்கித் திணறிச் சொன்னாள்.
சற்று நேரம் இருவரிடமுமே எந்தச் சத்தமும் இல்லை.
தொண்டையைச் செருமி, “வா.. நானே கழட்டி விடுகிறேன்.” என்று அவன் சொல்லி முடிக்க முதலே,
“இல்லையில்லை.. வேண்டாம்.” என்றாள் அவள் அவசரமாக.
அந்த அவசரமும் பதட்டமும் ஏன் என்று அவனுக்குத் தெரியாதா என்ன? அவள் சேலை கட்டிய ஒவ்வொரு நாட்களையும் மறக்க முடியாத நாட்களாக மாற்றியவன் அல்லவா அவன்!
“பரவாயில்லை வா. உனக்குச் சேலை கட்டப் பழக்கிய எனக்கு இந்தப் ‘பின்’னைக் கழட்டத் தெரியாதா?” என்று கேட்டுக்கொண்டு அவளை நெருங்கினான் கீர்த்தனன்.
அவளோ சிலையாகிப்போய் விழியகல அவனையே பார்த்துக்கொண்டு நின்றாள். இதயம் தொண்டைக் குழிக்குள் வந்து துடிக்கத் தொடங்க, கைகால்கள் நடுங்கின.
அருகில் வந்தவன், அவள் விழிகளோடு தன் விழிகளைக் கலந்தபடி, “திரும்பு..” என்றான். அபோதும் அசையாமல், அசைய முடியாமல் அவள் அப்படியே நிற்க, மென்மையாக அவள் தோள்களைப் பற்றித் திருப்பியவன் அவளது சேலையின் பின்னை கழட்டிவிட்டான்.
அவனது வலிய நீண்ட விரல்கள் தீண்டியது என்னவோ அவள் முதுகைத்தான். ஆனால் மேனியெல்லாம் சிலிர்த்தது. தேகமெல்லாம் புதுவித இரத்தம் பாய்ந்தது. உணர்வுகள் அத்தனையும் உயிர்த்துக்கொள்ள, தளிர் மேனி தள்ளாடத் தொடங்க அப்படியே அவன் நெஞ்சில் சாய்ந்துவிடத் துடித்தது அவளது உடலும் உயிரும்.
அந்தத் துடிப்பை, உணர்வுகளின் போராட்டத்தைத் தாங்கமுடியாமல் மேனி நடுங்கத் தொடங்கவும் விழியோரம் நனையத் தொடங்கியது அவளுக்கு.
கீழுதட்டைப் பற்களால் இறுகப் பற்றியபடி குனிந்த தலை நிமிராமல் அவள் நிற்க, ‘பின்’னை கழட்டிவிட்ட கீதன் மிக வேகமாய் அங்கிருந்து வெளியேறினான்.
கண்ணீர் கன்னங்களை நனைக்க, தேகத்தின் நடுக்கம் தீராமலேயே உடையை மாற்றிக்கொண்டவள் கட்டிலில் விழுந்தாள்.
அங்கே வீட்டின் வெளியே சென்றவனோ நவம்பர் மாதத்தின் இரவு நேரக் குளிர் உடலை ஊடுருவித் தாக்குவதைக் கூட உணரமாட்டாமல் தேகத்தின் சூடு அடங்க அப்படியே நின்றிருந்தான்.
பொன் வண்ண மேனி.. சாரி பிளவுஸின் வளைவு காட்டிய தங்கமெனத் தகதகத்த முதுகு. அவன் விரல் பட்டதும் சிலிர்த்துக்கொண்ட கழுத்தோர முடிகள், நடுங்கிய அவள் தேகம் என்று அனைத்தும் அவன் கண்முன்னால் மீண்டும் மீண்டும் வந்துநின்று, அவன் உணர்வுகளை உசுப்பிவிட்டுக் கொண்டிருந்தது.

