சூட்கேசில் உடைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் மித்ரா. ஒவ்வொரு உடையாக எடுத்து வைக்க வைக்க மனதின் கனம் அதிகரித்துக்கொண்டே சென்றது. அவளின் கீதனுடனான ஏழு நாள் வாழ்க்கை அன்றோடு முடிவுக்கு வரப்போகிறதே!
இந்த ஏழு நாட்களில் இன்பம், துன்பம், சந்தோசம், மகிழ்ச்சி, நெகிழ்ச்சி, ஏக்கம், கண்ணீர் என்று எத்தனையோ உணர்வுகள் அவளைப் போட்டுப் புரட்டி எடுத்துவிட்டன. அதில் மனம் இன்னுமே பலகீனப் பட்டும் போயிருந்தது.
இனி அவனை இப்படியெல்லாம் அருகிருந்து பார்க்க முடியாதே என்று அழும் மனதை என்ன சொல்லிச் சமாதானப்படுத்துவாள்?
கண்கள் கலங்க, கைகள் நடுங்க மகனதும் தனதும் உடைகளை அடுக்கி பெட்டியை மூடி வைத்தாள்.
அங்கே கிடந்த கீதனின் பெட்டியும் கண்ணில்பட, என்ன சொல்வானோ என்று தோன்றினாலும் மனம் கேட்காமல் அவனது உடைகளையும் எடுத்துவைத்தாள்.
ஒவ்வொரு உடைகளையும் தொடத்தொட பரவசத்துக்கும் பரிதவிப்புக்கும் இடையில் கிடந்து தள்ளாடினாள். முதல்நாள் அவன் அணிந்திருந்த சட்டையைக் கண்டதும், அதை மென்மையாக எடுத்து தடவிக்கொடுத்தாள்.
அவனை அண்டி, அவனது அருகாமையில் வாழும் பாக்கியம்தான் அவளுக்கு இல்லை. அந்தச் சட்டையாவது கடைசிவரை அவளோடு இருக்கட்டுமே என்றெண்ணியவள் அதை எடுத்து தன்னுடைய பெட்டிக்குள் அடியில் வைத்துக்கொண்டாள்.
அப்போதுதான் மனம் சற்றே அமைதியடைந்தது.
அவள் கீழே இறங்கிச் சென்றபோது, “மதிய உணவை முடித்துக்கொண்டு கிளம்பு தனா..” என்று சொல்லிக்கொண்டிருந்தார் சங்கரி.
அவன் அப்போதே புறப்பட வேண்டும் என்று சொல்லியிருந்தான். சங்கரி அம்மா சொல்வதுபோல் செய்தால் அவனோடு அவள் இருக்கப்போகும் நேரம் சற்று நீளுமே… ஆர்வத்தோடு கீதனைப் பார்த்தாள் மித்ரா.
அவனும் அவள் முகத்தை ஒருமுறை விழிகளால் அளந்துவிட்டு, “சரி மாமி..” என்றான்.
மித்ராவின் முகமோ பூவாய் மலர்ந்தது.
“அப்போ என்னைக் கொஞ்சம் கடைவரைக்கும் கூட்டிக்கொண்டு போ தனா..” என்றார் சங்கரி.
“நான் சும்மா தானேம்மா இங்கே இருக்கிறேன். பிறகு ஏன் அவனைக் கூப்பிடுகிறீர்கள்?” என்றான் அங்கிருந்த சேகரன்.
“ஏன், நீயிருந்தால் நான் அவனோடு போகக் கூடாதா? நீ காரை எடு தனா!” என்றார் சங்கரி.
கீதனின் முகம் சற்றே யோசனையைக் காட்டினாலும், சட்டென எழுந்து, “வாருங்கள் மாமி..” என்றபடி, அவரோடு நடந்தான்.
சற்றுத் தூரம் சென்றதும் வீதியின் ஓரமாகக் காரை நிறுத்திவிட்டு, “சொல்லுங்கள் மாமி. என்னோடு தனியாக என்ன கதைக்கவேண்டும்?” என்று கேட்டான்.
அவன்பால் மெச்சுதலான ஒரு பார்வையைச் செலுத்திவிட்டு, “கெட்டிக்காரன்தான். ஆனால், இதே கெட்டிக்காரத் தனத்தை நீ ஏன் உன் வாழ்க்கையில் காட்டவில்லை?” என்று அவருமே நேரடியாக விசயத்துக்கு வந்தார்.
இந்தக் கேள்வியை அவன் ஊகித்தான் தான். என்றாலும் எதுவாக இருந்தாலும் அவரிடம் இருந்தே வரட்டும் என்று எண்ணியவனாக, கேள்வியோடு அவரை ஏறிட்டான்.
“மித்ராவுக்கும் உனக்கும் என்ன பிரச்சனை?”
என்னதான் ஊகித்து இருந்தாலும் மெல்லிய அதிர்ச்சிதான் அவனிடத்தில். வேகமாக அதை மறைத்துக்கொண்டு, “ஒன்றும் இல்லையே மாமி. ஏன் இப்படிக் கேட்கிறீர்கள்?” என்று கேட்டான்.
“இல்லை! என்னவோ இருக்கிறது. ஒரு கணவன் மனைவிக்குள் இருக்கும் அன்னியோன்யம் உங்களுக்குள் இல்லை. ஏன் சாதரணமாக ஒரு பேச்சு, சிரிப்பு என்று எதுவுமே இல்லையே!”
பிறந்தநாள் பரபரப்பில் இதையெல்லாம் கவனிக்கமாட்டார் என்று எண்ணினானே..
“அது… நாங்கள் எபோதும் அப்படித்தான்..”
பதிலேதும் சொல்லாமல் அவனை நேர்ப்பார்வை பார்த்தார் சங்கரி. அதை எதிர்கொள்ள முடியாமல் பார்வையை அவன் விலக்கிக்கொள்ள, அவர் முகம் சிந்தனையில் ஆழ்ந்தது.
“அதைச் சொல்வதால் கவிக்கு ஏதாவது பிரச்சனை ஆகிவிடுமோ என்று நினைக்கிறாயா?” என்று நேரடியாக அவர் கேட்டபோது, வியப்போடு அவரைத் திரும்பிப் பார்த்தான் கீர்த்தனன்.
அவனை உணர்ந்து கொண்டவராய், “வேறு காரணம் இல்லையே நீ இந்தளவு தயங்குவதற்கு..” என்றார்.
“என்னைப் பார்த்தால் அந்தளவுக்குப் பொல்லாத மாமியாராகவா தெரிகிறது?” என்று தொடர்ந்து அவர் கேட்டபோது, “சேச்சே! அப்படியெல்லாம் இல்லை மாமி. நீங்கள் மிகவும் நல்லவர்.” என்றான் கீர்த்தனன் மனதிலிருந்து.
“பிறகு ஏன் இவ்வளவு தயக்கம்?” என்று விடாமல் கேட்டவர்,
“இதை உன் மன நிம்மதிக்காகச் சொல்கிறேன். கவி என் மருமகள். அவளைப் பற்றி எனக்குத் தெரியும். அதனால் எந்தச் சந்தர்ப்பத்திலும் அவளுக்குப் பிரச்சனை வராது.” என்று உறுதியளித்தார்.
அதற்கு மேலும் அவரிடம் மறைக்கத் தோன்றாமல், அதுநாள் வரை மறைத்ததே தப்பென்று உணர்ந்து, “நாங்கள் பிரிந்துவிட்டோம் மாமி..” என்றான் கீர்த்தனன், கவனமாக உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட குரலில்.
“என்ன தனா சொல்கிறாய்?” அதிர்ந்தே போனார் சங்கரி.
அவர்களுக்குள் என்னவோ பிணக்கு என்பதை ஊகித்தார் தான். ஆனாலும், இந்தளவு தூரத்துக்கு எதிர்பார்க்கவில்லை என்பது அவரது முகத்திலேயே தெரிந்தது.

