“பிரிந்துவிட்டோம் என்றால்…” நம்ப இயலாமால் மீண்டும் அவர் கேட்க, “சட்டப்படி பிரிந்துவிட்டோம்.” என்றான் அவன் எங்கோ பார்த்துக்கொண்டு.
“என்னது?? ஏன்? அப்படி என்ன நடந்தது?” அழகான இளம் குடும்பம் ஒன்று குலைந்துவிட்ட தவிப்போடு கேட்டார்.
அவனிடம் பதிலின்றிப் போக, அதற்காகக் காத்திருக்கும் பொறுமையின்றி, “பிறகு எப்படி இங்கே வந்தீர்கள்?” என்று அவதியாகக் கேட்டார்.
“கவிக்காக நான் வரச்சொல்லிக் கேட்டேன்.”
அப்போதுதான், அவனைக் குடும்பத்தோடு வரச்சொல்லி அவர் கட்டாயப்படுத்தியது நினைவில் வரவும், “ஓ…!” என்று கேட்டுக்கொண்டார்.
“ஆனால் ஏன் இந்த நிலை?” மனம் ஆறவே மறுத்தது அவருக்கு.
“நீயும் நல்லவன். அவளும் தங்கமான பெண். இருவரும் மற்றவர்மேல் இன்னும் பிரியத்தோடுதான் இருக்கிறீர்கள். பிறகும் ஏன் இப்படியானது?”
என்னவென்று சொல்வான்? முதலில் அதையெல்லாம் எப்படிச் சொல்லமுடியும் அவனால்?
“உன் குடும்ப விஷயத்தை அறிந்துகொள்ளவோ அதில் மூக்கை நுளைக்கவோ திரும்பத் திரும்பக் கேட்கவில்லை தனா. அழகான ஒரு குடும்பம் ஏன் உடைந்துபோனது என்கிற ஆதங்கத்தில் தான் கேட்கிறேன். அதோடு உங்கள் இருவருக்கும் புலப்படாத ஒன்று வெளியிலிருந்து பார்க்கும் எனக்குப் புலப்படலாம் இல்லையா. ஒன்றுமே இல்லாத விஷயங்கள் கூடச் சில நேரங்களில் பெரிதாகத் தெரியும்.” என்றார் அவர்.
ஒன்றுமே இல்லாத விசயமா அது? அவனது உயிரையே குடித்த விஷயம் அல்லவா!
“சரிப்பா.. உன்னால் சொல்ல முடியவில்லை என்றால் விடு. ஆனால் இப்படி விவாகரத்து செய்யும் அளவுக்குப் போகவேண்டுமா? எதுவாக இருந்தாலும் கொஞ்சநாட்கள் பிரிந்து இருந்துவிட்டு பிறகு சேர்ந்து இருக்கலாமே. உங்கள் இருவரையும் நம்பி ஒரு மகன் இருக்கிறானே. அவனைப் பற்றியாவது கொஞ்சம் யோசித்து இருக்கலாமே. ஏன் அவசரப் பட்டீர்கள்?”
“அது.. நான்தான்.. விவாகரத்துக் கேட்டேன்.”
“அந்தளவுக்கு அவள் என்னதான் செய்தாள்?”
ஒரு ஆண்மகனாய் நடந்ததைச் சொல்ல முடியாமல், அவமானக் கன்றளோடு அமர்ந்திருந்தான் கீதன்.
அவர் தன் பதிலுக்காகக் காத்திருப்பது விளங்க, “என்னை மன்னித்துவிடுங்கள் மாமி. அதை என்னால் சொல்ல முடியாது.” என்றான் இறுகிய குரலில்.
சற்று நேரம் சங்கரிக்குமே என்ன பேசுவது என்று தெரியவில்லை. அந்த ஒரு வாரமும் அம்மா அம்மா என்று அவர் பின்னால் சுற்றிய மித்ரா கண்ணுக்குள் வந்து நின்றாள்.
அதிர்ந்து பேசத் தெரியாதவள். ஆத்திரப்படத் தெரியாதவள். எல்லோரையும் அரவணைத்து, அனுசரித்துப் போகிறவள். மென்மை உள்ளம் கொண்ட அற்புதமான அருமையான அந்தப் பெண்ணோடு எந்தத் தப்பையும் இணைத்துப் பார்க்கவே முடியவில்லை அவரால்.
தலை இடமும் வலமுமாக மறுப்பாக அசைய, “இல்லை தனா! அவள் எந்தத் தப்பும் செய்திருக்க மாட்டாள்.” என்று உறுதியாக மறுத்தார் சங்கரி.
இவ்வளவு உறுதியோடு மறுக்கிறாரே என்கிற ஆச்சரியத்தோடு அவரைப் பார்த்தான் கீர்த்தனன்.
அவனிடம் திரும்பி, ”இதில் என்னவோ தப்பு நடந்திருக்கிறது. நீ எதையோ தவறாகப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். அல்லது யாரோ தவறான தகவலை உனக்குத் தந்திருக்க வேண்டும்.” என்றார் திரும்பவும் உறுதியாக.
அதைக் கேட்ட அவனாலேயே அவன் மனநிலையைக் கணிக்க முடியவில்லை. அவனும் இப்படித்தானே! என் மித்து அப்படியெல்லாம் நடந்துகொண்டிருக்க மாட்டாள் என்று மலைபோல நம்பினானே! அந்த நம்பிக்கையோடு அவளிடம் அவன் கேட்டபோது, நடந்தது உண்மைதான் என்று ஒத்துக்கொண்டு அவன் தலையில் இடியை அல்லவோ இறக்கினாள்!
நெஞ்சம் பாரமாகிக்கொண்டே போக, “இல்லை மாமி. அதற்கு வாய்ப்பே இல்லை!” என்றான் அவன்.
சங்கரிக்கு ஒருகணம் ஆத்திரம் தான் வந்தது. விசயத்தையும் சொல்ல மாட்டானாம். அவர் ஒன்று சொன்னால் அதை ஏற்றுக்கொள்ளவும் மாட்டானாம்.
அந்த எரிச்சலில், “வேறு யாரையாவது கட்டும் எண்ணத்தில் இருக்கிறாயா நீ?” என்று கேட்டார் அவனைக் கூர்ந்தபடி.
யமுனாவை மனதில் வைத்துக் கேட்கிறார் என்று புரியவும் அவன் இதழ்களில் வறட்சியான புன்னகை ஒன்று ஜனித்தது. “என் வாழ்க்கையில் இன்னொரு பெண்ணுக்கு இடமில்லை மாமி.” என்றான் கசந்த குரலில்.
ஒருமுறை பட்டதே போதும் என்றது மனது!
முகம் மலர, “பிறகு என்னப்பா? நீ சொன்னதுபோல அவள் தப்பு செய்தவளாகவே இருக்கட்டும். அவளை மன்னிக்கக் கூடாதா? மறக்கக் கூடாதா? அவளும் இன்னொரு வாழ்க்கையைத் தேடிச்செல்லும் ரகம் இல்லை. நீங்கள் இருவரும் திரும்ப இணைந்து வாழலாமே.” என்று ஆர்வத்தோடு கேட்டார் அந்த அன்பான பெண்மணி!
அதற்குச் சம்மதிக்க முடியாமல் எங்கோ வெறித்தான் கீர்த்தனன். அவளுக்காக அவனின் ஒவ்வொரு அணுவும் துடித்தாலும் அவளோடு இணைந்து வாழ்வதைக் கற்பனையில் கூட நினைக்க முடியவில்லையே!
இதென்ன நரக வாழ்க்கை?!
“எனுடைய அனுபவத்தை வைத்து நான் சொல்கிறேன் தனா. அவள் நல்ல பெண். உனக்கு ஏற்றவள். உனக்கு அவளைப்போல ஒருத்தி கிடைக்கமாட்டாள். அப்படியே அவள் பிழை செய்திருந்தாலும் தெரிந்து செய்திருக்க மாட்டாள்.” என்று அவர் அடித்துச் சொன்னபோது, அவனுக்குள் மீண்டும் வியப்புப் பரவியது.

