தனிமைத் துயர் தீராதோ 18 – 3

 

அன்று அவளும் இதையே சொல்லித்தானே அழுதாள்! அதெல்லாம் தெரியாமல் செய்கிற பிழையா?

 

“என்ன தனா? ஒன்றுமே சொல்ல மாட்டேன் என்கிறாய். இதை நான் அவளுக்காக மட்டுமில்லை உனக்காகவும் தான் சொல்கிறேன். நம் வாழ்க்கையில் கடந்து போகிற எந்த நாளும் திரும்பி வராது. இளமையும் அப்படித்தான். அதனால் இருக்கிறபோது சந்தோசமாக நிறைவாக வாழவேண்டும். நீ உன்னையே நினைத்துப்பார். பதினாறு வயதில் வெளிநாடு வந்தவன் உன் வாழ்க்கையில் என்ன சுகத்தைக் கண்டாய்? உனக்கென்று யார் இருக்கிறார்கள்? அவளுக்கும் தான் யார் துணை சொல்லு? இளமையும் துடிப்பும் இருக்கையில் பிடிவாதமும் வீம்பும் சரியாகத்தான் தெரியும். வயது போனபிறகு அன்று கொஞ்சம் விட்டுக்கொடுத்து நடந்திருக்கலாமோ என்று தோன்றும். ஆனால், அப்போது எல்லாமே கைமீறிப் போயிருக்கும். அதனால் சொல்கிறேன், தயவுசெய்து அவளை ஏற்றுக்கொள்வதைப் பற்றி யோசி.” என்றார் சங்கரி.

 

இதெல்லாம் அவன் சிந்திக்காததா? நாசமாய்ப் போன அவன் மனம் அவளை நோக்கி அடியெடுத்து வைக்கவும் மறுத்தது! அவளை விலக்கியும் போக மறுத்தது!

 

“சரி மாமி..” அவரின் மனதை நோகடிக்கப் பிடிக்காமல் சொன்னான்.

 

“கட்டாயம் யோசி தனா. யோசித்து நல்ல முடிவாக எடு.” என்றவர், “சரிப்பா காரை எடு. நேரமாகிறது.” என்றார்.

 

மதிய உணவு முடிந்ததுமே எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பினான் கீர்த்தனன்.

 

யமுனா எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு காரை நோக்கி நடக்க, அவளோடு கூடவே கவியும் லக்ஷ்மியும் சென்றனர்.

 

மித்ராவுக்கோ அந்த வீட்டை விட்டுப் போகவே மனமில்லை. “போய் வருகிறோம் அம்மா..” என்றாள் தழுதழுத்த குரலில்.

 

சொந்தப்பெண் போல அந்த வீட்டில் வளைய வந்தவள் போவது சங்கரிக்கும் கஷ்டமாகத்தான் இருந்தது. “சரிம்மா. கவனமாகப் போய்வாருங்கள். குட்டிப்பையன் கவனம்.” என்றபடி வாஞ்சையோடு அவளின் தலையைத் தடவிக்கொடுத்தார்.

 

அதில் உடைந்தாள் மித்ரா.

 

சின்ன விம்மலோடு அவரை அணைத்துக் கன்னத்தில் முத்தமிட்டு, “நா..ன் நான் எப்போதாவது உங்களோடு கதைக்கலாமா அம்மா..?” என்று கேட்டபோது, சங்கரி அம்மாவே உடைந்துதான் போனார்.

 

எந்தளவுக்கு அன்புக்கு ஏங்கியிருந்தால் இப்படிக் கேட்பாள்?

 

“ப்ளீஸ்மா மறுக்காதீர்கள். வா..ரத்தில் ஒருநாள் ஒரு.. ஒரு ஐந்து நிமிடம் மட்டும் என்னோடு கதைக்கக் முடியுமா? அப்பா ப்ளீஸ்பா..” என்று அவள் கேட்டபோது, “அசடு!” என்றபடி அவளை அணைத்துக்கொண்டார் சங்கரி.

 

“வாரத்தில் ஒருநாள் என்ன, நீ தினமும் என்னோடு கதைக்கவேண்டும். இல்லையானால் உன் வீட்டுக்கே வந்து சண்டை பிடிப்பேன்.” என்று சொல்வதற்குள் அவர் பெரும் சிரமப்பட்டுப் போனார்.

 

“உன் அம்மாவோடு மட்டும் தான் கதைப்பாயா மித்ரா? என்னோடெல்லாம் கதைக்க மாட்டாயா?” என்று அருகில் நின்ற தாமோதரன் கேட்க, “அப்பா..” என்றழைத்து கண்ணீரோடு சிரித்தவள், உரிமையோடு அவர் தோளில் சாய்ந்துகொண்டாள்.

 

ஒருவித அதிர்ச்சியோடும் அடிபட்ட வேதனையோடும் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு கீதன் நிற்க, அவனைக் கண்டனத்தோடு பார்த்தார் சங்கரி.

 

ஒருவழியாகக் கீதனின் கார் புறப்பட்டது.

 

வரும்போது போலவே இப்போதும் யமுனா முன்னால் அமர்ந்தாலும், பின்னுக்கு மித்ராவோடு இருக்கப் பிடிக்காமல் மட்டுமே முன்னால் வந்திருக்கிறாள் என்று அவள் அமர்ந்திருந்த விதத்திலேயே தெரிந்தது.

 

காருக்குள் மெலிதாக ஒலித்துக்கொண்டிருந்த பாடலையும், சந்தோஷின் சத்தத்தையும் தவிர அமைதியாகக் கழிந்துகொண்டிருந்த பயணத்தில், கீர்த்தனனின் கைபேசி அதனது தாங்கியில் வீற்றிருந்தபடி ஒலியெழுப்பியது.

 

பவித்ரா அழைக்கிறாள் என்று தெரிய, அதை ஆன் செய்தான். கார் ஓடிக்கொண்டு இருந்ததால் அதுவும் அதிவேக வீதியில் என்பதால் மைக்கை அழுத்தி, “சொல்லு பவி..” என்றான், வீதியில் கவனத்தை வைத்தபடி.

 

“எனக்கு விசா தந்துவிட்டார்கள் அண்ணா..” என்று அந்தப்புறத்தில் இருந்து உற்சாகக் குரலில் துள்ளிக்குதித்தாள் பவி.

 

“ஹேய்! உண்மையாகவா?” கீர்த்தனனுமே இவ்வளவு விரைவாகக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.

 

“உண்மையாகத்தான் அண்ணா. டிக்கெட் போட்டுக்கொண்டு வரச் சொன்னார்கள். நாம் டிக்கெட் போடும் நாளிலிருந்து விசா குத்தித் தருவார்களாம். அதுதான் அப்பா எப்போது டிக்கெட் போடட்டும் என்று உங்களிடம் கேட்கச் சொன்னார்.”

 

“உனக்கு அங்கே ஏதாவது அலுவல்கள் இருக்கிறதா பவி?”

 

“எனக்கு என்னண்ணா அலுவல்? நான் வந்தால் அப்பா தனியாக இருப்பார் என்பதுதான். அம்மா இங்கு வர இன்னும் இரண்டு வாரம் இருக்கிறதே. அதற்குப் பிறகு போடவா?”

 

“ம் சரி. அப்படியே செய்.” என்றான் கீர்த்தனன்.

 

“சரிண்ணா. அம்மாவிடம் செல்லைக் கொடுக்கிறீர்களா? அவரிடமும் சொல்லவேண்டும். விசா ஓகே என்றதும் நான் உங்களுக்குத்தான் முதலில் அழைத்தேன்.” என்றவளின் குரலில் குதூகலம் இன்னுமே மட்டுப்படவில்லை.

 

“நாங்கள் இப்போது ஜெர்மனிக்குத் திரும்பிக்கொண்டு இருக்கிறோம் பவி. நீ கவிக்கு அழைத்து அம்மாவோடு கதை.”

 

“சரிண்ணா..” என்றவள், “அண்ணா அண்..ணி உங்களோடுதான் வருகிறாரா?” என்று தயக்கத்தோடு விசாரித்தாள்.

 

error: Alert: Content selection is disabled!!