ஒருவித ஆச்சரியத்தோடு அவர்களின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த மித்ராவை கண்ணாடி வழியே பார்த்தபடி, “ம்ம்..” என்றான் கீதன்.
அவன் மைக்கில் உரையாடிக் கொண்டிருப்பதை அறியாதவளோ, “நான் சொல்கிறேன் என்று கோபிக்காதீர்கள் அண்ணா. இதைச் சொல்லலாமா கூடாதா என்றும் தெரியாது. ஆனாலும் சொல்லிவிடுகிறேன். அண்ணி பாவம் அண்ணா. எனக்கு அவரை மட்டும் தான் அண்ணி என்று அழைக்கப் பிடித்திருக்கிறது. யமுனாக்காவை நீங்கள் கட்டக்கூடாது. அவர்களிடம் நல்ல சீதனம் வாங்கலாம் என்றுதான் அம்மா யமுனாக்காவை உங்களுக்குக் கட்டிவைக்கவேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறார். மற்றும்படி வேறு எதற்காகவும் இல்லை.” என்று லக்ஷ்மி அம்மாளின் பெரும் ரகசியத்தைப் போட்டுடைத்தாள் பவித்ரா.
அதைக் கேட்டுக்கொண்டிருந்த யமுனாவின் முகம் ஆத்திரத்திலும் அவமானத்திலும் செக்கச் சிவந்து, அதில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
இன்னும் எதையாவது பவித்ரா வாயை விடமுதல் தடுக்க எண்ணி, “நான் உனக்குப் பிறகு அழைக்கிறேன் பவி.” என்றுவிட்டு உடனேயே செல்லை அணைத்தான் கீர்த்தனன்.
மித்ராவோ பவித்ராவின் அண்ணி என்கிற அழைப்பிலும் அவளது அன்பிலும் நெகிழ்ந்து போயிருந்தாள்.
மீண்டும் அமைதி!
கார் ஜெர்மனிக்குள் நுழைந்து அவர்களின் இடத்தை நெருங்க நெருங்க, பிரிவை எண்ணி தரையில் விழுந்த மீன்குஞ்சாய் துடித்தாள் மித்ரா.
‘இன்னும் கொஞ்ச நேரத்தில் இறக்கிவிடப் போகிறானே.. அவளை விட்டுவிட்டுப் போகப் போகிறானே..!’
இனி பழையபடி காலையில் எழுந்து வேலைக்குப் போவதும், மாலையில் வந்து எதையாவது செய்து பசிக்காக விழுங்குவதும், மகன் நேரத்துக்கே உறங்கிவிடத் தனி வீட்டில் தன்னந் தனியாகக் கொட்டக் கொட்ட முழித்திருந்து பழங்கணக்குப் பார்ப்பதும் என்று சலிப்பான, கொடுமையான, அவள் முற்று முழுதா வெறுக்கும் அதே பழைய வாழ்க்கை.
முடிவே இல்லாத தனிமை! துணையே இல்லாத கொடுமை!
நினைக்கவே நெஞ்சு வெடிக்கும் போலிருந்தது. இதோ அவளது கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் உயிரானவனை அருகிருந்து பார்க்கும் பாக்கியமும் இனி அவளுக்கில்லை.
ஒரே அறையில், அருகில் அவன் உறங்குகிறான் என்கிற நிம்மதியோடு சீராக ஏறியிறங்கும் அவனது மார்ப்பை பார்த்தபடி படுத்துக்கிடந்த நிமிடங்கள் அவள் வாழ்க்கையில் என்றைக்குமே திரும்பி வராது!
தாங்க முடியாமல் நெஞ்சு துடிக்க, அவளையும் மீறி நாசி விடைத்துக்கொண்டு கண்ணீர் பெருகவும் விழிகளை இறுக மூடிக்கொண்டாள். ஆனாலும் கண்ணோரம் கசிந்துவிட்ட நீரை, கீழே குனிவதுபோல் குனிந்து துடைத்துகொண்டாள்.
அவ்வப்போது அவள்மீது பார்வையைப் பதித்தபடி ஓடிக்கொண்டிருந்த கீர்த்தனன், அதைக் கவனித்துவிட்டு அடுத்துவந்த பார்க்கிங்கில் காரை நிறுத்தினான்.
யமுனாவைப் பார்த்து, “கொஞ்சத்தூரம் நடந்துவிட்டு வா..” என்றான்.
அவமானத்தில் குன்றிப்போனாள் யமுனா. இதற்கு ‘நாங்கள் தனியாகக் கதைக்கவேண்டும். நீ கொஞ்சம் அந்தப்பக்கம் போ’ என்று முகத்துக்கு நேராகவே சொலியிருக்கலாம்.
எரிச்சலோடு சிவுக்கென்று காரில் இருந்து இறங்கியவள் அவர்களிடம் இருந்து விலகி நடந்தாள்.
மித்ராவின் முகம் பார்த்துப் பேச வசதியாகத் திரும்பி அமர்ந்துகொண்டு, “என்ன?” என்று கேட்டான் கீர்த்தனன்.
என்னவென்று சொல்வாள் அவள் நெஞ்சத்து வேதனையை? துயர் துலங்கும் விழிகளால் அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு, ஒன்றுமில்லை என்பதாகத் தலையை மட்டும் அசைத்தாள்.
“எதற்கு அழுதாய்?” கூர் விழிகள் அவளைத் துளைக்க அவன் கேட்டபோது, அவன் மார்பில் விழுந்து கதறத் துடித்த மனதையும் நடுங்கும் இதழ்களையும் கட்டுப்படுத்திக்கொண்டு, மடியில் கோர்த்திருந்த கரங்களில் பார்வையைப் பதித்தபடி, “இ..ல்லையே.. நா…ன் அழவில்லையே..” என்றாள்
“நீ அழுதாயா என்று நான் கேட்கவில்லை. ஏன் அழுதாய் என்றுதான் கேட்டேன்.” என்றான் அவன் அழுத்தமாக.
சொல்லாமல் விடமாட்டான் என்பது விளங்க, “இல்லை.. திரும்ப அதே பழையவாழ்க்கை என்று.. அதுதான்..” என்றாள் மித்ரா திக்கித் திணறி.
அது அவனுக்கும் தானே!
சட்டென மூண்ட கோபத்தோடு, “இந்த நிலையை உருவாக்கியவள் நீதானே!” என்று அவளைக் குற்றம் சாட்டினான் கீர்த்தனன்.
அடிபட்ட வலியோடு அவனைப் பார்த்தாள் மித்ரா. தன் பார்வையை விலக்கிக்கொண்டான் கீர்த்தனன்.
எங்கோ வெறித்தபடி இருந்துவிட்டு, “மாற்றுவதற்கு வழியில்லை எனும்போது வருவதை எதிர்கொள்ளத்தானே வேண்டும்.” என்றான் பொதுவாக.
தனக்கும் சேர்த்து சொல்லிக்கொண்டானோ!
அதன் பிறகான மிகுதி பயணமும் அமைதியிலே கழிய, அவளையும் மகனையும் இறக்கி விட்டுவிட்டு பிறகு யமுனாவை விடப் போவானாக்கும் என்று மித்ரா நினைத்திருக்க, யமுனாவின் வீட்டுக்கு காரை விட்டான் கீர்த்தனன்.
“உங்களின் உதவிக்கு நன்றி!” என்று, வேண்டா வெறுப்பாகச் சொல்லிவிட்டு இறங்கிக்கொண்டாள் யமுனா.
இனி அவளையும் இறக்கிவிட்டு அவன் போய்விடுவான்.. இன்னும் ஒன்றரை மணிநேரம் தான் அவள் அவனோடு இருக்கப் போவது.
சூழ்ந்துவிட்ட இருள் கொடுத்த தைரியத்தில் ஏக்கத்தோடு அவனையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள் மித்ரா.
கார் அவள் வீட்டுப் பார்க்கிங்கில் வந்து நின்றது.
காரிலிருந்து இறங்கிய மித்ரா மகனை தூக்கப் போக, “முதலில் நீபோய்க் கதவை திற.” என்றான் கீர்த்தனன்.
மகனை தானே தூக்கிக்கொண்டு வந்து சோபாவில் கிடத்திவிட்டு, திரும்பப்போய் அவளது பெட்டியை எடுத்துக்கொண்டு அவன் வந்தபோது தூக்கம் கலைந்திருந்த சந்தோஷ் சிணுங்கிக் கொண்டிருந்தான்.
“சந்துக்குட்டி ஏன் அழுகிறான்?” என்ற தந்தையின் குரல் கேட்டதும் அவனிடம் தாவினான் மகன்.

