தனிமைத் துயர் தீராதோ 18 – 5

உள்ளறையில் இருந்து மகனுக்கான மாற்றுடையோடு வந்த மித்ரா மகனை அழைக்க, அவனோ தகப்பனிடம் இருந்து வரமாட்டேன் என்று நின்றான்.

 

“என்னிடம் தா..” என்று அதைவாங்கி, மாற்றத் தொடங்கினான் கீதன்.

 

மித்ராவோ மகனுக்குப் பால் காய்ச்சும் சாட்டில் சமையலறைக்குள் புகுந்துகொண்டாள். அவள் மனமோ அவன் செயல்களைப் புரிந்துகொள்ள முடியாமல் படபடத்துக் கொண்டிருந்தது.

 

இதமான சூட்டில் ஆற்றிய பாலை அவனிடம் நீட்டினாள் மித்ரா.

 

அடுத்து எதுவும் செய்யத் தோன்றாமல் ஒரு ஓரமாய் அங்கேயே நின்றவளின் விழிகள், மகனை கனிவோடு மடியில் ஏந்தி பாலைக் கொடுக்கும் அவன்மீது அவ்வப்போது ஏக்கத்தோடு படிந்து மீண்டன.

 

மெல்ல மெல்ல சந்தோஷ் உறங்கிவிட, அவனைத் தூக்கிக்கொண்டுபோய் அன்று போலவே இன்றும் கட்டிலில் கிடத்தினான் கீதன்.

 

ஐயோ.. அந்தப் போட்டோ இன்னும் அங்கேயே இருக்கிறதே. பார்த்துவிட்டு வந்து திரும்பவும் அவளைக் குதறப் போகிறானே என்று, பயத்தில் நெஞ்சம் நடுங்க நின்ற இடத்திலிருந்து அசையமுடியாமல் அப்படியே நின்றாள் மித்ரா.

 

மகனைக் கிடத்திவிட்டு வந்தவனின் விழிகளில், அவளது பதட்டமும் பயமும் நிறைந்த முகம் பட, முதலில் புரியாமல் புருவங்களை நெரித்தவன், புரிந்ததும் ஒருகணம் அசைவற்றுப் போனான்.

 

அடுத்தக் கணமே அவளிடமிருந்து பார்வையை விலக்கிக்கொண்டு, வாசலை நோக்கி நடந்தான்.

 

இங்கேயே எங்களோடு இருந்துவிடுங்களேன் என்று ஊமையாய் கதறிய மனதோடு அவன் பின்னால் சென்றாள் மித்ரா.

 

வாசலருகில் சென்றவனை அவளது கதறல் சென்றடைந்ததோ.. ஒருவித தவிப்போடு திரும்பி, “இருந்துகொள்வாய் தானே..” என்று இன்னதென்று பிரித்தறிய முடியாத குரலில் கேட்டான்.

 

‘இல்லை மாட்டேன். நீங்களும் என்னோடு இருங்கள்’ என்று கதறியது உள்ளம்.

 

அதைக் காட்டாது, இதோ இதோ என்று தளும்பப் பார்த்த கண்ணீரை விழிகளை விரித்து அடக்கியபடி தலையை மேலும் கீழுமாகச் சின்னதாக அசைத்தாள் மித்ரா.

 

பரிதவிக்கும் அந்த விழிகளையும், நடுங்கும் இதழ்களையும் ஒருகணம் பார்த்துவிட்டு, “எனக்கொரு கப் கபே தரமுடியுமா?” என்று கேட்டான் கீர்த்தனன்.

 

சட்டென முகமும் அகமும் மலர, “இதோ.. ஒரு நிமிடத்தில் கொண்டு வருகிறேன்.” என்றவள், சமையலறைக்குள் ஓடிப்போகத் திரும்பவும் வந்து சோபாவில் அமர்ந்துகொண்டான் கீதன்.

 

கரங்களைத் தலைக்குப்பின்னால் கோர்த்துச் சோபாவில் தலையைச் சாய்த்துக்கொண்டவனின் விழிகள் மூடிக்கொண்டன.

 

அவளைப் பிரியவும் முடியாமல், அவள் படும் பாட்டைப் பார்க்கவும் முடியாமல், அவளோடு இருக்கவும் முடியாமல் இதென்ன நரக வேதனை?

 

காபியை கையில் ஏந்தி வந்தவள் அவன் நிலையைப் பார்த்து அப்படியே நின்றுவிட்டாள்.

 

அன்று முழுவதும் காரோடிய களைப்பு முகத்தில் தெரிந்தாலும், அதைத் தாண்டி அவனிடம் தெரிந்த தவிப்பும் வேதனையும் அவளால் அல்லவா!

 

நெஞ்சம் கனக்க கப்பை அவள் மேசையில் வைக்க, அந்தச் சத்தத்தில் விழிகளைத் திறந்தவன் அமைதியாக அதை எடுத்து அருந்தினான்.

 

வெறும் கப்பை மேசையில் வைத்தவனுக்கு அங்கிருந்து எழுந்துகொள்ளவே முடியவில்லை.

 

“நாளைக்கு வேலையா?” என்று கேட்டான்.

 

“ம்..” என்றவள், “பத்து மணிக்குத்தான் போகவேண்டும்.” என்றாள் அவசரமாக.

 

அவன் விழிகள் அங்கே சுவரில் தொங்கிக்கொண்டிருந்த மணிக்கூட்டுக்கு தாவியது.

 

நேரம் நள்ளிரவை தொட்டுக்கொண்டிருப்பதைக் கண்டவன், அதற்குமேலும் அங்கிருந்து நேரத்தை நீட்டிக்க முடியாமல் ஒரு நெடிய மூச்சுடன் எழுந்து, புறப்பட்டான்.

 

error: Alert: Content selection is disabled!!