தனிமைத் துயர் தீராதோ 19 – 2

காரில் தமையனின் அருகில் அமர்ந்துவந்த பவித்ராவுக்கும் அதே யோசனைதான் ஓடிக்கொண்டிருந்தது.

 

அதைப்பற்றித் தமையனிடம் பேச எண்ணி அவன் புறமாகத் திரும்பியவள், சுளித்திருந்த புருவங்களையும் இறுகியிருந்த அவன் முகத்தையும் பார்த்துவிட்டு அந்தப் பேச்சை அப்போதைக்குக் கைவிட்டாள்.

 

ஆனால், அவளின் அசைவை அவன் உணர்ந்துகொண்டான் போலும். “என்ன பவி?” என்று கேட்டான்.

 

“அது.. இப்போது நாம் போகிறோமே.. அவர்களை உங்களுக்கு எப்படிப் பழக்கம்?”

 

“முதல் நான் வேலை செய்த இடத்தில் தான் அர்ஜூனும் வேலை செய்தான். அப்போதுதான் பழக்கம். அவன் தங்கைதான் அஞ்சலி. அவர்களுக்கு அம்மா அப்பா இல்லை. ஊரிலேயே இறந்துவிட்டார்கள். அப்போதெல்லாம் பொல்லாத வாய்காரி அவள். இப்போது நன்றாக வளர்ந்திருப்பாள் என்று நினைக்கிறேன். உன்னைவிட ஒன்றிரண்டு வயது சின்னவளாகத்தான் இருப்பாள்..”

 

“அப்போதெல்லாம் என்றால்? இப்போது நீங்கள் அவர்கள் வீட்டுக்கு போவதில்லையா அண்ணா?”

 

சற்று நேரம் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியவில்லை அவனால். அர்ஜூனின் இருபத்தியெட்டாவது பிறந்தநாள் அன்றுதான கீதனின் தலையில் இடி விழுந்தது. அதன்பிறகு இவனால் அர்ஜூனின் முகம் பார்க்கவோ, அவர்களின் வீட்டுக்குப் போகவோ முடிந்ததில்லை.

 

ஆனாலும், இவனது ஒதுக்கத்தை மனதில் வைக்காமல் நேரம் கிடைக்கும்போதெல்லாம் அழைத்துப் பேசுவான் அர்ஜூன். பவித்ரா வரப்போகிறாள் என்று தெரிந்ததில் இருந்து அவளைக் கூட்டிக்கொண்டு வரச்சொல்லி எத்தனையோ தடவைகள் சொல்லிவிட்டான். அந்த அன்பை உதாசீனம் செய்யமுடியாமல் தான் இன்று பவியோடு கிளம்பியிருந்தான்.

 

அதோடு, அண்ணனாக இருந்தாலும் இளம் பெண்ணான பவியின் அத்தனை தேவைகளையும் அவனால் தீர்த்துவைக்க முடியாது. மொழி தெரியாதவளை, நீயே போய் வாங்கிவா என்று அனுப்பவும் வழியில்லை. அதற்கு ஒரு பெண் தேவை. அப்போதுதான் அஞ்சலியின் நினைவு வந்தது.

 

அதையெல்லாம் அவளிடம் சொல்ல முடியாமல், “வேலையோடே நேரம் ஓடிவிடும் பவி. பிறகு எங்கே போவது?” என்றான் பொதுவாக.

 

இந்த நான்கு நாட்களில் தமையனின் வேலைப் பளுவை அறிந்திருந்தவளும் அதற்குமேல் ஒன்றும் கேட்கவில்லை.

 

ஒருவழியாக அர்ஜூனின் வீடும் வந்துவிட, கார் பார்க்கிங்குக்கு வந்தே வரவேற்றான் அர்ஜூன்.

 

என்னதான் அவன் அனைத்தையும் மறந்து மலர்ச்சியோடு வரவேற்ற போதிலும், முகம் கன்றுவதையும் அவமானத்தில் சிவப்பதையும் தடுக்க முடியாமல் திணறினான் கீர்த்தனன்.

 

நண்பனின் நிலையை நொடியில் கணித்த அர்ஜூன், “டேய் தனா!” என்றபடி அவனை அணைத்துக்கொண்டான்.

 

பவித்ராவை பார்த்து அன்போடு முறுவலித்து, “உள்ளே வாம்மா..” என்று வரவேற்கவும் தவறவில்லை.

 

அவர்கள் வீட்டுக்குள் நுழையவும், “அங்கேயே நிற்கலாம்!” என்று ஒரு குரல் கிறீச்சிட்டது.

 

அதுவரை முகத்தில் இருந்த சங்கடம் விலக, மலர்ந்த புன்னகையோடு சத்தம் வந்த பக்கம் திரும்பினான் கீதன். பவித்ராவும் தமையனை தொடர்ந்து பார்க்க, மாடிப்படியின் முடிவில் தொளதொள கால்சட்டையும் குட்டைக்கை ப்ளவுசும் அணிந்த இளம் பெண்ணொருத்தி நின்றிருந்தாள்.

 

குழந்தைத் தனம் மாறாத அந்த அழகிதான் அஞ்சலி என்று பார்த்ததுமே தெரிந்தது பவித்ராவுக்கு. அஞ்சலியோ தன் பெரிய கரு விழிகளை உருட்டி கீதனை பார்த்துப் பயங்கரமாக முறைப்பதாகப் பாவனைச் செய்ய, அதைப் பார்த்த பவித்ரா ‘க்ளுக்’ என்று சிரித்துவிட்டாள்.

 

அஞ்சலி அவள் புறம் திரும்பவும் சட்டெனத் தன் சிரிப்பை வாய்க்குள்ளேயே அடக்கிக்கொண்டாள். பின்னே அவளையும் பார்த்து அதே முறைப்பை சிந்தினால் யாரால் சிரிப்பை அடக்க முடியும்?

 

“இவ்வளவு நாட்களும் என்னைப் பார்க்க வராதவருக்கு இங்கே என்ன அலுவலாம்?” கையை மார்புக்கு குறுக்காகக் கட்டிக்கொண்டு, முகத்தை அடுத்தப் பக்கம் தூக்கி வைத்துக்கொண்டு கேட்டாள் அஞ்சலி.

 

“நீயும் தான் என்னைத் தேடி வரவில்லை?” புன்னகையோடு கீதன் சொல்ல, “அதெப்படி? எப்போதும் நீங்கள் தானே வருவீர்கள்?” என்று இன்னும் முறுக்கினாள் அந்தச் சின்னப்பெண்.

 

“எப்போதும் வரும் அண்ணாவை காணவில்லை என்று நீ தேடவில்லையே..” என்றவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்துவிட்டு, “அது.. அது எனக்குப் படிப்பு அது இது என்று ஆயிரம் வேலை இருக்கும். உங்களுக்கு அப்படியா?” என்று ஒருவாறு சமாளித்தாள்.

 

“உனக்கே ஆயிரம் வேலை என்றால் அவனுக்கு இரண்டாயிரம் வேலை இருக்கும்.” என்று நடுவே புகுந்தான் அவளின் தமையன்.

 

அவனையும் அவள் ‘முறைக்க’ பவித்ரா தான் சிரிப்பை அடக்கப் படாத பாடுபட்டாள்.

 

“சரி விடு. இதோ நானே திரும்ப அஞ்சுகுட்டியை தேடி வந்துவிட்டேனே.” என்ற கீதன் தன் ஜாக்கெட் பக்கெட்டில் இருந்து ஒரு ‘ரஃபெல்லோ’ பெட்டியை எடுத்து நீட்டினான்.

 

error: Alert: Content selection is disabled!!