தனிமைத் துயர் தீராதோ 19 – 3

அதைக் கண்டதும், “தனாண்ணா என்றால் தனாண்ணா தான்!” என்று துள்ளிக்கொண்டு வந்து அதை வாங்கியவளின் கோபம் அடுத்த நாட்டுக்கே பறந்திருந்தது.

 

“இந்தாருங்கள் பவிக்கா..” என்று ஒன்றை மட்டும் எடுத்து நீட்டிவிட்டு, “உங்கள் இருவருக்கும் வயது போகிறது. சுகர் வந்துவிடும். அதனால் நீங்கள் சாப்பிடக் கூடாது.” என்றவள் மிகுதியை மின்னல் வேகத்தில் உண்டு முடித்தாள்.

 

“பாருடா இந்தக் குட்டிப்பிசாசின் பேச்சை..” என்றான் அர்ஜூன்.

 

“விடுடா அவள் சொல்வதிலும் ஏதோ ஒரு நியாயம் இருக்கிறதுதான். அதுசரி, எங்கே அருணா?” என்று அர்ஜூனின் மனைவியைப் பற்றி விசாரித்தான் கீதன்.

 

“மாமாவுக்குக் கொஞ்சம் உடம்புக்கு முடியவில்லை. அதுதான் அங்கே போய்விட்டாள். பின்னேரம் தான் வருவாள்.” என்றவர்களின் பேச்சு கலகலப்பாக எங்கெங்கோ சுற்றிவர, அப்படியே மதிய உணவையும் முடித்தனர்.

 

“அஞ்சலி, பவிக்குக் கொஞ்சம் ஷாப்பிங் செய்யவேண்டும். எங்களோடு வருகிறாயா?” என்று கீதன் கேட்டு முடிக்க முதலே, துள்ளிக்கொண்டு தயாராகி வந்தாள் அஞ்சலி.

 

கடைக்குச் சென்றாலோ, ஏன்டா இந்த அஞ்சலியை கூட்டிக்கொண்டு வந்தோம் என்றாகிவிட்டது கீதனுக்கு. அந்தளவுக்கு அங்கிருந்த அத்தனை கடைகளுக்கும் ஏறி இறங்கினாள் அவள்.

 

“போதும் அஞ்சு, வா போகலாம்.” என்று பவித்ரா சொல்லியும் மறுத்துவிட்டாள்.

 

“உன் தனாண்ணா பாவம் தானே அஞ்சும்மா. நான் வேண்டுமானால் காசு தருகிறேன், நீ பிறகு பவித்ராவோடு வந்து வாங்கிக்கொடேன்.” என்று கெஞ்சிய கீதனைப் பார்த்து மீண்டும் தன் விழிகளை உருட்டினாள் அஞ்சலி.

 

முறைக்கிறாளாம்!

 

கீதனுக்கு எப்போதும்போல் சிரிப்பு வர, அதைக் கவனியாதவளோ அவர்கள் நின்றிருந்த கடைக்கு நேரெதிரே தெரிந்த ஹோட்டலைக் காட்டி, “அங்கே போய் உங்களுக்குப் பிடித்த மில் கபேயில் ஒரு ஏழெட்டை வாங்கிக் குடியுங்கள். நாங்கள் வாங்க வேண்டியதுகளை எடுத்துவிட்டுக் கூப்பிடுகிறோம். வந்து காசைக் கொடுங்கள்.” என்றாள் உத்தரவாக.

 

அந்த மட்டிலாவது தான் தப்பியதை எண்ணி மகிழ்ந்தவன், தங்கையை ஒரு பரிதாபப் பார்வை பார்த்துவிட்டு ஹோட்டலுக்கு நடந்தான்.

 

 

சுவிஸ் போய்விட்டு வந்ததில் இருந்து மித்ராவை வேலை போட்டுப் பிடுங்கி எடுத்தது. விடுமுறை எடுத்திருந்த நாட்களில் சேர்ந்துவிட்ட வேலைகளையும் சேர்த்துச் செய்து களைத்தே போயிருந்தாள்.

 

வித்யாவோ, சத்யனும் இல்லாமல், ஒரு வாரமாக மித்ராவும் இல்லாமல், சுவிஸ் போய் வந்த பிறகும் தமக்கை வேலை வேலை என்று ஓடியதில் எரிச்சல் உற்றிருந்தாள். அதில், “களைப்பாக இருக்கிறது வித்தி. இன்னொருநாள் போகலாமே..” என்று கெஞ்சிய தமக்கையை விடாமல் வற்புறுத்தி, அன்று ஹோட்டலுக்கு அழைத்து வந்திருந்தாள்.

 

சுவிஸ் பயணத்தைப் பற்றித் தூண்டித் துருவி வித்யா கேட்டுக்கொண்டு இருந்ததில், உணவு உண்டு முடிந்த பிறகும் அங்கேயே இருந்து கதைத்துக்கொண்டு இருந்தனர் சகோதரிகள் இருவரும்.

 

“அந்தக் குரங்கு யமுனா எப்படியக்கா இருந்தாள்?” தமக்கையின் வாயிலிருந்து நடந்தவைகளை அறிந்து கொண்டவள் பல்லைக் கடித்துக்கொண்டு கேட்க,

 

“அடுத்த வீட்டுப் பெண்களை இப்படியெல்லாம் கதைக்கக் கூடாது வித்தி.” என்று மித்ரா சொல்லிக்கொண்டு இருக்கையிலேயே, “ஹேய் ஏஞ்சல்..” என்று உற்சாகமும் துள்ளலும் நிறைந்த குரல் திடீரெனக் கேட்டது.

 

ஆச்சரியத்தோடு திரும்பிப்பார்த்த மித்ராவை ஓடிவந்து அணைத்துக்கொண்டான் நீக்கோ.

 

நீண்ட நாட்களுக்குப் பிறகு அவனைக் கண்டதில் மகிழ்ந்தாலும் அவனது அணைப்பில் விதிர்விதிர்த்துப் போனவளின் மேனி, அந்நியன் ஒருவனின் தொடுகையை ஏற்க முடியாமல் விறைப்புற்றது.

 

அவன் உணராத வகையில் அவன் பிடியிலிருந்து நழுவிக்கொண்டு, “எப்படி இருக்கிறாய் நீக்கோ?” என்று வரவழைத்துக்கொண்ட புன்னகையோடு கேட்டாள்.

 

“நான் நன்றாக.. மிக மிக நன்றாக இருக்கிறேன்.” என்றவன், அவளுக்கு அருகிலேயே நெருக்கியடித்து அமர்ந்துகொண்டு, அவள் தோளைச் சுற்றிக் கையைப் போட்டபடி, “நீ எப்படி இருக்கிறாய் ஏஞ்சல்? நன்றாக மெலிந்து விட்டாயே.. உன் கணவன் உன்னைக் கவனிப்பது இல்லையா?” என்று அவள் முகத்திலேயே பார்வையைப் பதித்து விசாரித்தான்.

 

நான்கு வரிசைகளில் மேசைகள் போடப்பட்டிருந்த அந்தப் பெரிய ஹாலில், தொந்தரவுகள் இன்றிப் பேசியபடி சாப்பிடுவதற்கு ஏதுவாகச் சுவர் பக்கமாக இருந்த நால்வர் அமரக்கூடிய மேசையை மித்ரா தான் தெரிவு செய்திருந்தாள். அதில் சுவர் ஓரமாய் ஒரு பக்கம் மித்ராவும் அவளைப் பார்த்தபடி எதிர்பக்கம் வித்யா சந்தோஷை மடியில் வைத்துக்கொண்டும் அமர்ந்திருந்தனர்.

 

மித்ராவின் அருகில் நீக்கோ அமர்ந்ததும், அவனது கை வளைவுக்குள் இருந்து வெளிவர முடியாத நிலை மித்ராவுக்கு. எந்தவித கல்மிஷமும் இல்லாமல் நட்போடு அணைத்தவனிடம் அதை வாய்விட்டு சொல்லவும் முடியாமல், இயல்பாக ஏற்கவும் முடியாமல் தடுமாறிய மித்ரா, “நான்.. நன்றாகத்தான் இருக்கிறேன்..” என்று சிரமப்பட்டு ஒவ்வொரு வார்த்தைகளையும் உதிர்த்தாள்.

 

 

error: Alert: Content selection is disabled!!