தனிமைத் துயர் தீராதோ 19 – 6

அவள் தெரியாது என்று தலை அசைக்கவும், “மீரா..” என்றான் புன்னகையோடு.

 

“அதுவும் உன் பெயர்தான். உன் பெயரை அப்படியே வைக்கத்தான் விருப்பம். ஆனால் பார் இப்போதும் ‘மிட்டுரா’ என்றுதான் என் வாயில் வருகிறது. என் மகளின் பெயரையும் நான் தப்பாகக் கூப்பிட, நீ எப்போதும் போல என் மண்டையில் குட்ட.. அதெல்லாம் எனக்குத் தேவையா சொல்? அதனால் உன் பெயரை சுருக்கி மீரா என்று வைத்துவிட்டேன். அதுவும் தமிழ் பெயர்தான் இல்லையா.. நெட்டில் பார்த்தேன்.”

 

அவன் பேசப்பேச மித்ராவுக்கு வாயடைத்துப் போனது என்றால் கீதனின் முகம் இறுகிக்கொண்டே போனது.

 

அங்கே சற்றுத் தள்ளியிருந்த மேசையில் இருந்து ஒருசிலர் இங்கே பார்த்துக் கையசைக்க, “நீக்கோ, அங்கே நம் நண்பர்கள் வந்துவிட்டார்கள்.” என்றாள் டியானா.

 

அங்கே திரும்பிப் பார்த்து தானும் கையசைத்தவன், “நான் ஏஞ்சலை கண்டதும் மற்றதை எல்லாம் மறந்தே போனேன். நீ அவர்களிடம் போ டியானா. நான் இதோ வருகிறேன்.” என்று அவளை அனுப்பிவிட்டு, “ஏஞ்சல் உன் கைபேசி எண்ணைத் தா. முதல் இருந்த எண்ணை மாற்றிவிட்டாய் போல. மெயில் ஐடியும் மாற்றிவிட்டாய். பேஸ்புக்கிலும் நீ இல்லை.” என்றவன், இலகுவாக அவள் மேசையில் வைத்திருந்த கைபேசியை எடுத்து தன் செல்லுக்கு அழைத்துவிட்டு, விடைபெற்று நடந்தான்.

 

பின்னர் ஏதோ நினைவு வந்தவனாகத் திரும்பி வேகமாக வந்தவன், “என் மகள் மீரா பிறந்ததும் எங்களின் திருமணத்தைச் செய்யத் திட்டமிட்டு இருக்கிறோம். அதற்கு நீங்கள் எல்லோரும் கட்டாயம் வரவேண்டும். நான் பிறகு உனக்கு அழைக்கிறேன் ஏஞ்சல். வருகிறேன் கீதன்.” என்றான்.

 

அப்போதும் இருந்த இடத்தில் இருந்து அசையாது அமர்ந்திருந்த மித்ராவின் முகத்திலேயே தன் பார்வையை நிலைக்க விட்டு, ”நீ முன்போல் இல்லை ஏஞ்சல். உன்னிடம் நிறைய மாற்றங்கள். இதை நான் உன்னிடம் எதிர்பார்க்கவில்லை.” என்று சிரித்துக்கொண்டே அவன் சொன்னபோது, அவன் குரலில், அந்தச் சிரிப்பின் பின்னிருந்த வேதனையில் அவள் விழிகளில் மளுக்கென்று நீர் நிறைந்தது.

 

கண்ணீரை அடக்கப் படாத பாடு பட்டபடி அவள் அவனைப் பார்க்க, “ஆனால் நீ என்றைக்குமே என் தோழிதான்.” என்றவன், எப்போதும்போல அவளது சுருண்ட கரிய குழல்களைக் கலைத்துவிட்டு நடந்தான்.

 

அவன் முதுகையே கண்ணீரோடு பார்த்தாள் மித்ரா. திசை மாறிப்போன அவள் வாழ்க்கையில் திசைகாட்டியாக வந்தவனே திசையைத் திருப்பிய கதைதான் அவள் கதை! இதில் அவளால் யாருக்கு என்னவாக இருக்க முடியும்?!

 

அப்போது கீதனின் செல் இசைபாடியது. சட்டெனத் திரும்பி பயமும் படபடப்புமாக அவனைப் பார்த்தாள் மித்ரா. செல்லை காதுக்குக் கொடுத்து , “இதோ வருகிறேன் பவி.” என்றவன், மகனையும் தூக்கிக்கொண்டு அங்கிருந்து நடந்தான்.

 

சல்லடைக் கண்ணாக நெஞ்சம் புண்ணாக, அவளோடு கோபித்துக்கொண்டு போகும் கீதனையே அவள் விழிகள் கண்ணீரோடு தொடர்ந்தது.

 

வித்யாவுக்கோ, அவள் எவ்வளவுதான் முறுக்கிக் கொண்டாலும் அன்போடு இரண்டு வார்த்தைகளாவது பேசும் அத்தான் இன்று புதிதாகத் தெரிந்தார். அதன் காரணத்தை அறிய விரும்பி, “அத்தான் ஏன் கோபமாகப் போகிறார் அக்கா.?” என்று கேட்டாள்.

 

“தெரியவில்லை வித்தி..” என்றாள் மித்ரா கண்ணீரை அடக்கிய குரலில்.

 

அவளுக்கா தெரியாது? ஆனால், அதைத் தங்கையிடம் சொல்ல முடியாதே!

 

இனி திரும்பவும் தேளாகக் கொட்டத் தொடங்குவானோ என்று அவள் பயந்தது சரிதான் என்பது போல், வித்யா ரெஸ்ட்ரூம் சென்ற வேளையில் திரும்பி வந்தான் கீதன்.

 

அங்கிருந்த நாற்காலியில் மகனை இருத்திவிட்டு நிமிர்ந்தவன், “தப்பை உணர்ந்துகொண்டாய்.. திருந்திவிட்டாய் என்று நினைத்தேன். ஆனால், நீயெல்லாம் திருந்தும் ரகமல்ல என்று காட்டிவிட்டாய். இது தெரியாமல் நான் வேறு.. ச்சை!” என்று கசந்த குரலில் வார்த்தைகளை நெருப்பாய்க் கொட்டினான்.

 

உயிரின் ஆழம் வரை துடிதுடித்துப் போனவள், “ஐயோ அப்படியில்லை கீதன்..” என்று தவிப்போடு ஆரம்பிக்கையிலேயே, “வாயை மூடு!” என்று அடிக்குரலில் சீறினான் கீர்த்தனன்.

 

அந்த உக்கிரத்தில் விதிர்விதிர்த்துப்போய் அவள் நிற்க, “வித்தி.. அவள் குழந்தை. உன்னோடு கூட்டித்திரிந்து அவளையும் நாசமாக்கி விடாதே! நீ எக்கேடோ கெட்டுப்போ! அதைப்பற்றி இனி எனக்கு அக்கறையில்லை! ஆனால், அவளுக்கு ஏதாவது நடந்தது.. உன்னைத் சும்மா விடமாட்டேன்!” என்று விரல் நீட்டி எச்சரித்துவிட்டுப் போனான்.

 

அந்த இடத்திலேயே செத்துவிடலாம் போல் துடித்துப்போனாள் மித்ரா.

 

வித்யா வரவும், உடனேயே கிளம்பிவிட்டாள். அவளிடம் சீறிவிட்டு வெளியே வந்த கீதனோ அங்கிருந்த இருக்கை ஒன்றில் சகலமும் வெறுத்துப்போய்த் தொப்பென்று விழுந்தான்.

 

நெஞ்சமோ எரிமலைக் குழம்பாய் கொதித்துக் கொண்டிருந்தது. என்ன வேதனை இது! திரும்பவும் எதற்காக ஆரம்பிக்கிறாள்?

 

அப்போ அவனைக் காணும் நேரமெல்லாம் உருகியது, மகனின் நிலையை எண்ணிக் கதறியது, அவனை அவனுக்கே தெரியாமல் போட்டோ எடுத்தது எல்லாம் நடிப்பா? எல்லாம் பொய்யா?

 

இனியாவது சுமுகமாகக் கொண்டுபோவோமா என்று கிடந்தது அல்லாடினானே.. முடியவே முடியாதா?

 

அப்போது அவன் தோளில் ஒரு கரம் பதியவும் நிமிர்ந்து பார்த்தான்!

 

 

error: Alert: Content selection is disabled!!