பால்கனியில் நின்றபடி வீதியையே பார்த்துக்கொண்டிருந்தாள் மித்ரா.
‘எங்க இன்னும் காணவில்லை?’ என்னவோ பலகாலம் மகனை பிரிந்த தவிப்பு மனதில்.
அப்போது சத்யனின் கார் வந்து நின்றது. முகம் மலர இரண்டாவது மாடியிலிருந்து கீழே இறங்கி ஓடினாள்.
அங்கே, சந்தோஷுடன் வந்துகொண்டிருந்த சத்யனிடம் விரைந்து, “சந்தோஷ்..!” என்றபடி, மகனை ஆவலோடு வாங்கிக்கொண்டாள் மித்ரா.
பச்சரிசிப் பல்லைக் காட்டிச் சிரித்தவனும், “மம்மா…” என்றவாறே அவளின் கழுத்தைக் கட்டிக்கொள்ள, அந்தப் பிஞ்சின் தேகம் அவள் நெஞ்சில் பட்டதுமே தேகமெல்லாம் சிலிர்த்தது. வயிறு குளிர்ந்து நெஞ்சம் நிறைந்துபோயிற்று!
சுருள் சுருளான முடிக்கற்றைகளும், உருண்டை விழிகளும், செப்பு இதழ்களும் என்று அச்சொட்டாய் அவளையே உரித்துப் படைத்துப் பிறந்திருந்தாலும், அவள் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் நேசத்துக்குச் சொந்தக்காரனைத்தான் நினைவுபடுத்தினான் அவன்!
மகனை மார்பிலும் கைகளிலும் தாங்கியவளின் மலர் விழிகளில் மெல்லிய நீர்க்கசிவு!
காதலில் கனிந்து, இனிமை பொங்கும் உறவின் நிறைவில் உண்டான முத்தல்லவா அவன்.
“என் குட்டிக்கண்ணன் அப்பாவிடம் போயிட்டு வந்தாங்களா..” என்று முகமெல்லாம் புன்னகையாகக் கொஞ்சத் தொடங்கியவள், இந்த உலகத்தையே மறந்துபோனாள்.
“ம்ம்.. பப்பா..” என்று தாயின் கன்னத்தை எச்சில் படுத்தியது அந்த ஒன்றரை வயது மழலை.
அந்தப் ‘பப்பா’ என்ற அழைப்பு அதற்கு உடைமைக்காரனை கண்முன் நிறுத்த, உள்ளே வலியொன்று எழுந்த அதே வேளையில் அவளது உடலும் உள்ளமும் உருகியது. மகனை இறுக அணைத்தவள், அவன் நெற்றியில் தன் பட்டிதழ்களைப் பதித்தாள்.
அதுவரை, தமையனின் கண்டிப்பின் பெயரிலும், தமக்கையின் மனக்காயத்தைக் கிளறிவிடக் கூடாது என்பதாலும் அடக்கிவைத்திருந்த வித்தியின் அழுகை, மித்ராவின் அந்தச் செய்கையில் வெடித்தது. அதை மித்ராவுக்குக் காட்டப் பிடிக்காமல் கையால் வாயைப் பொத்திக்கொண்டு மித்ராவின் வீட்டுக்குள் ஓடினாள்.
கேள்வியோடு மித்ரா சத்யனை பார்க்க, இறுகிப்போன முகத்தோடு நின்றுகொண்டிருந்தான் அவன்.
“வித்தி ஏன் அழுகிறாள்? நீ ஏதாவது திட்டினாயா?”
காரில் வரும்போது அக்காவிடம் எதுவும் சொல்லாதே, அழாதே என்று அவன் அவ்வளவு சொல்லியும் கேளாமல் அழுத தங்கையின் மேல் எழுந்த எரிச்சலை அடக்கிக்கொண்டான். சந்தோஷை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு படியேறியபடி, “நான் எதற்குத் திட்ட? நீயும் அ..” என்று சொல்லிக்கொண்டு போனவன் சட்டெனப் பேச்சை நிறுத்தி தொண்டையைச் செருமினான்.
“நீ செல்லம் கொடுத்துக்கொடுத்து தொட்டதுக்கும் அழுவதுதானே அவள் குணமே. அதனால் அவளிடம் எதுவும் கேளாதே. கொஞ்ச நேரத்தில் அவளே சமாதானம் ஆகிவிடுவாள்.” என்றான்.
கூட நடந்தவாறே, “சட்டென அழுவாள்தான் என்றாலும் சும்மா சும்மா அழ மாட்டாளேடா.” என்றவள், அங்கே வீட்டினுள் சோபாவில் குப்புற விழுந்துகிடந்து அழும் தங்கையின் அருகில் சென்று அமர்ந்தாள்.
“வித்தி, எதற்கு அழுகிறாய்? என்ன நடந்தது?” என்று அவள் தலையைத் தடவிக்கொடுத்தவாறு கேட்டாள்.
ஒன்றுமில்லை என்பதாக இடமும் வலமுமாகத் தலையை அசைத்தபடி அவள் தொடர்ந்து அழ, “அங்கு.. யாராவது ஏதாவது சொன்னார்களா?” என்று திரும்பத்திரும்ப மித்ரா எவ்வளவோ கேட்டும் எதுவும் சொல்ல மறுத்தாள் சின்னவள்.
தாயையும் சிற்றன்னையையும் மாறி மாறிப் பார்த்த சந்தோஷின் இதழ்கள் அழுகையில் பிதுங்கத் தொடங்கவும், “எழும்பு வித்தி! இதென்ன சும்மா எதற்கெடுத்தாலும் அழுகை? உன்னைப் பார்த்து சந்துவும் அழப்பார்க்கிறான். உன் பழக்கத்தை அவனுக்கும் பழக்காதே!” என்றான் சத்யன் அதட்டலாக.
விசுக்கென்று எழுந்து அமர்ந்து தன் கன்னங்களைத் துடைத்தவாறே, “இதற்குத்தான் அந்த வீட்டுக்கு நான் போகவில்லை என்று சொன்னேன். அப்போது போகச்சொல்லி அதட்டிவிட்டு இப்போது என்னை ஏன் திட்டுகிறாய்?” என்று சண்டைக்கு வந்தாள் அவள்.
தமக்கையின் முன்னால் அந்த வீட்டைப்பற்றிப் பேசும் தங்கையை முறைத்தபடி, “அதற்காக இப்படி அழுவாயா? போ! போய் முகத்தைக் கழுவிக்கொண்டு வா!” என்றான் பல்லைக் கடித்தபடி.
“நான் ஒன்றும் அதற்கு அழவில்லை. அக்காவும் அத்தானைப் போலவே சந்துவின் நெற்றியில் முத்தமிட்டதும் அழுகை வந்துவிட்டது. இவ்வளவு ஒற்றுமையோடு இருக்கும் இருவரும் பிரிந்துவிட்டார்களே அண்ணா…” என்றாள் தழுதழுத்த குரலில்.
அவள் சொன்ன செய்தி சத்யனையும் பாதித்தது தான். ஆனாலும், தங்கை சொன்னதைக் கேட்டு வேதனையில் முகம் கசங்க, மனவலியை மறைப்பதற்காக விழிகளை இறுக மூடிக்கொண்ட தமக்கையைக் கண்டு நொடியில் தன்னைச் சமாளித்தவனுக்கு, தங்கையின் மேல் திரும்பவும் கோபம்தான் வந்தது.
அதோடு சந்துவின் தகப்பன் மேலும் ஆத்திரம் பொங்கியது! எல்லாம் அவரால் அல்லவா!
தன் வாழ்க்கையை மட்டுமே சுயநலமாக எண்ணி, சந்தோஷின் எதிர்காலம் உட்பட எல்லோர் வாழ்க்கையையும் நிலைகுலையச் செய்து விட்டாரே!
அதுவும், அவனது அன்பான தமக்கையை நடுத்தெருவில் விட்டுவிட்டாரே!
“தள்ளு அண்ணா!” என்றபடி, அவன் சிந்தனையைக் கலைத்த வித்யா, சற்றுமுன் வீட்டுக்குள் வரும்போது தூக்கியெறிந்த கைப்பையைத் தேடியெடுக்கவும், அவளிடம் தன் பார்வையைத் திருப்பினான் அவன்.
அவளோ கைப்பையிலிருந்து ஒரு பெட்டியை எடுத்து பரபரவென்று பிரித்தாள்.
ஒருவாறு தன்னைச் சமாளித்துக்கொண்ட மித்ரா, “என்ன அது?” என்று கேட்க, “தெரியவில்லை அக்கா. நான் லைசென்ஸ் எடுத்ததற்கு என்று அத்தான் தந்தார்.” என்று அவள் சொல்லி முடிக்க முதலே,
“அவரிடம் இருந்து வாங்கி வந்திருக்கிறாயே, உனக்கு ரோசம் என்பதே கிடையாதா? இதில் அத்தானாம் அத்தான்!” என்று பாய்ந்தான் சத்யன்.
தமையனை நிமிர்ந்து பார்த்து முறைத்தாள் சின்னவள். “நானும் வேண்டாம் என்றுதான் சொன்னேன். அவராகத்தான் என் கைப்பையில் வைத்தார். சந்துவை வைத்துக்கொண்டு அதை எப்படித் திருப்பிக் கொடுப்பதாம்?” என்று தமையனிடம் கேட்டவளின் விழிகள் கலங்கத் தொடங்க, தமக்கையின் புறமாகத் திரும்பினாள்.
“அத்தான் என்னிடம் மன்னிப்புக் கேட்டாரக்கா..” என்றாள் குரலடைக்க.
“மன்னிப்பா?” அதிர்ச்சியோடு கேட்ட மித்ராவுக்குத் தொண்டைக்குள் எதுவோ சிக்கியது. அவளின் உயிரானவன் மன்னிப்புக்கேட்பதா? அவன் செய்த தவறுதான் என்ன?
“ஏன்? எ..தற்கு?” மித்ரா திக்கித் திணறினாள்.
அங்கு நடந்தவைகளை வித்தி சொல்லச் சொல்ல, அவளை வெறுத்தாலும் அவளது தம்பி தங்கையின்மேல் அவன் வைத்திருக்கும் பாசத்தில் நெஞ்சம் உருகியது மித்ராவுக்கு.
இத்தகைய ஆழமான அன்பை உயிருள்ள வரைக்கும் அனுபவிக்கும் கொடுப்பினை அவளுக்கு இல்லாமல் போய்விட்டதே!
நடந்ததைச் சொல்லிமுடித்த வித்யாவின் விழிகள், அந்தப் பெட்டிக்குள் இருந்த விலை உயர்ந்த கைபேசியைக் கண்டதும், விரிந்தது.
“சொன்னது போலவே கைபேசி வாங்கித் தந்திருக்கிறார்.” என்றவள், முகம் சோர, “நான் அவர் மீது கோபமாக இருக்கிறேன். அதனால் இது எனக்கு வேண்டாம்!” என்றபடி தமக்கையின் மடியில் அதைத்தூக்கிப் போட்டாள்.


