யார் என்று நிமிர்ந்து பார்த்தான் கீர்த்தனன்.
எதிரே நின்ற நீக்கோவைக் கண்டதும் அப்பட்டமான வெறுப்பில் கனன்றது அவன் முகம். தோள் மேலிருந்த கையைப் படார் தட்டிவிட்டு வேகமாக எழுந்து அங்கிருந்து நடந்தான்.
“கீதன், கொஞ்சம் நில்!” என்றபடி, அவன் முன்னால் வந்து நின்றான் நீக்கோ.
தாடை இறுக, “விலகு!” என்று பற்களுக்குள் அந்த வார்த்தையைக் கடித்துத் துப்பினான் கீர்த்தனன். ஒரு பக்கமாக ஒதுங்கினாலும், “ஏஞ்சலை பற்றி உன்னிடம் பேசவேண்டும்.” என்றான் நீக்கோ.
அவனைப் பொசுக்கி விடுவதுபோல் பார்த்து, “அவளைப் பற்றிக் கதைக்க நீ யார்? முதலில் அவளை ஏஞ்சல் என்று சொல்வதை நிறுத்து!” என்று கர்ஜித்துவிட்டு, நிற்காமல் நடந்தான் கீதன்.
அவனிடம் தெரிந்த உக்கிரத்தில் சற்றே திடுக்கிட்டுத்தான் போனான் நீக்கோ. இன்றுதான் முதன்முதலாய் பார்க்கும் தன் மீது அவனுக்கு ஏன் இவ்வளவு கோபமும் வெறுப்பும்? அது புரியாதபோதும், அவர்களின் குடும்பத்துக்குள் தன்னால் ஏதோ பிரச்சனை என்பதை மட்டும் விளங்கிக்கொண்டான்.
“சரி. இனி நான் அவளை அப்படிக் கூப்பிடவில்லை. ஆனால், நீயும் அவளை வதைக்காதே கீதன்.” என்று நீக்கோ சொன்னதும், கீதனின் ஆத்திரம் கட்டுக்கடங்காமல் வெடிக்கத் தொடங்கியது.
சட்டெனத் திரும்பி புயலென நீக்கோவை நோக்கி வந்தவன், நெஞ்சில் கொழுந்துவிட்டு எரிந்த ஆத்திரத்தையும், எதிரே நின்றவனைத் தூக்கிப்போட்டு மிதிக்கும் ஆவேசத்தையும் அடக்கப் படாதபாடு பட்டான்.
ஒருமுறை விழிகளை அழுத்தமாக மூடித்திறந்து, பொறுமையை இழுத்துப்பிடிக்க முயன்றபடி, நீக்கோவின் விழிகளை நேராகப் பார்த்து, “இது ஜேர்மன் என்றபடியால் இன்னும் நீ என்முன்னால் நின்று கதைத்துக்கொண்டு இருக்கிறாய். இல்லை என்று வை..” என்று ஆட்காட்டி விரலை ஆட்டி எச்சரித்தவன், “ இனியும் எதையாவது கதைத்து என்னை மிருகமாக மாற்றாமல் இங்கிருந்து போ!” என்றான் அழுத்தமான குரலில் நிதானமாக.
“நான் போகிறேன் கீதன். அதற்கு முன்னால் ஒரே ஒரு முறை என்னைக் கதைக்கவிடு. நான் சொல்வதைக் கொஞ்சம் பொறுமையாகக் கேள். உன் மனைவி அவளின் பன்னிரண்டாவது வயதிலேயே வீட்டை விட்டு போலிசால் வெளியேற்றப் பட்டவள். அம்மா, அப்பா, தம்பி, தங்கை என்று எல்லோரும் இருந்தும் அனாதையாக வளர்ந்தவள். இது தெரியுமா உனக்கு?” என்றவனை, அதிர்ச்சியோடு திரும்பிப் பார்த்தான் கீதன்.
போலிசால் வெளியேற்றப் பட்டாளா? ஏன்?
“நான் சொல்வதெல்லாம் உண்மை கீதன். அவள் பாவம். சிறு வயதில் ஒவ்வொரு குழந்தைக்கும் கிடைக்க வேண்டிய அன்பு, பாசம், அரவணைப்பு, பாதுகாப்பு, உனக்கு நானிருக்கிறேன் என்கிற நம்பிக்கை எதுவுமே அவளுக்குக் கிடைத்ததில்லை. அப்போதெல்லாம் அவள் கண்களில் எப்போதும் கண்ணீரும் கலக்கமும் தான் தெரியும். அதெல்லாம் மாறியிருக்கும், உன்னோடு அவள் சந்தோசமாக வாழ்வாள் என்று நினைத்தேன். ஆனால், இன்னும் அவள் கண்களில் அந்தக் கண்ணீரும் கவலையும் தானே தெரிகிறது. அது இன்றுவரை மாறவே இல்லையே. நீ மாற்றவே இல்லையே. அவளைப் பெற்றவர்கள் தான் துன்புறுத்தினார்கள் என்றால் நீயும் அப்படிச் செய்யலாமா?” என்று நீக்கோ மனத்தாங்களோடு கேட்டான்.
‘அவளை நான் துன்புறுத்துகிறேனா? என்னை அவள்தான் உயிரோடு வதைக்கிறாள்’ என்று கசப்போடு எண்ணினான் கீதன்.
“முதலில் அவளுக்கு என்ன நடந்தது என்று தெரியுமா உனக்கு?” என்று கேட்டான் நீக்கோ.
முகம் கன்ற, அவமானத்தில் கறுத்த முகத்தைத் திருப்பிக்கொண்டு மறுப்பாகத் தலையை அசைத்தான் கீர்த்தனன். எவனால் தன் வாழ்க்கை இந்த நிலைக்கு ஆனாதோ.. எவனைக் கண்டதுண்டமாக வெட்டிப்போட்டால் கூட அவன் ஆத்திரம் அடங்காதோ அவன் வாயிலிருந்து மித்ராவைப் பற்றி அறிந்துகொள்ளும் நிலையிலிருக்கும் தன் நிலையை எண்ணி உள்ளுக்குள் இறந்துகொண்டிருந்தான் அந்த ஆண்மகன்!
மனைவியாகி, அவனோடு உயிராக வாழ்ந்து, அவன் குழந்தைக்குத் தாயானவளைப் பற்றி அவனுக்கு எதுவுமே தெரியாது! அனைத்தையும் மூன்றாம் நபர் மூலமாகத்தான் அறிந்திருக்கிறான்! அன்றும் இன்றும்!
இந்த லட்சணத்தில் இருக்கிறது அவன் வாழ்ந்த வாழ்க்கை! நினைக்கவே மகா கேவலமாகவும் அவமானமாகவும் உணர்ந்தான் கீர்த்தனன்.
கட்டிய மனைவியைப் பற்றிச் சகலதையும் அறிந்தவனாக, அவளை முற்றிலுமாகப் புரிந்தவனாகத் தான் மட்டுமே இருக்க வேண்டும் என்பதுதான் எல்லாக் கணவனதும் அவா! அப்படித்தான் அவனும்!
ஆனால்..
“மூன்று வயதிலிருந்தே அவளை ஒதுக்கத் தொடங்கிவிட்டார் அவளின் அம்மா. பன்னிரண்டு வயதாக இருக்கையில் அவளுக்கும் அவளின் அம்மாவுக்கும் அடித்து மண்டையை உடைத்துவிட்டார் அவளின் இரண்டாவது அப்பா. வலி தாங்க முடியாமல் ஏ.. உன் மனைவி போலிசுக்கு அழைத்துவிட்டாள்..” என்று நீக்கோ சொல்ல, திகைப்போடு நீக்கோவைப் பார்த்தான் கீர்த்தனன்.

