இது அவனுக்குப் புதுச் செய்தி. அவன் அறிந்தது எல்லாம் சண்முகலிங்கம் அவளின் அப்பா அல்ல என்பதும், அவர் சங்கரியின் இரண்டாவது கணவர் என்பதும் தான்! அதனால் தான் மித்ராவின் மேல் சண்முகலிங்கத்துக்குப் பெரிய பிணைப்பு எதுவும் இல்லை என்பதைப் பின்னாட்களில் ஊகித்திருக்கிறான்.
கீர்த்தனனின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியைப் பார்த்துவிட்டு, “உனக்கு இதெல்லாம் தெரியாது என்று நினைக்கிறேன்..” என்றவன், வீட்டை விட்டு அவள் போலிசால் வெளியேற்றப்பட்டது, அதன்பிறகு பயமும் கண்ணீருமாகத் தங்கள் வீட்டுக்கு வந்தது, எத்தனையோ இரவுகள் உறங்கமுடியாமல் நடுநடுங்கி, யாரோடும் இயல்பாகப் பழகமுடியாமல் அவள் தவித்தது, பெரும் சிரமப்பட்டு அவளை அவன் தேற்றிப் படிக்க வைத்தது, வீட்டினரை பார்க்க வந்தவள் அங்கேயே தங்க ஆசைப்பட்டும் சங்கரி மறுத்தது, கண்ணீரோடு திரும்ப அவள் நீக்கோ வீட்டுக்கு வந்தது, மறுபடியும் சத்தி, வித்தியின் பிடிவாதத்தால் அந்த வீட்டுக்கு அவள் சென்றது, அந்தச் சின்ன வயதிலேயே அன்னையாக மாறித் தம்பி தங்கையைப் பார்த்துக்கொண்டது, தன் படிப்புக்குத் தானே பேப்பர் போட்டுச் சம்பாதித்தது, ரெஸ்டாரென்ட்டில் பகுதி நேரமாக வேலை செய்து படிப்பைத் தொடர்ந்தது என்று நீக்கோ சொல்லச் சொல்ல, நொறுங்கியே போனான் கீர்த்தனன்.
அந்தச் சின்ன வயதில் அவள் பட்ட வேதனைகள் அத்தனையும் கண்முன்னால் வந்துநின்று அவன் உயிரைக் கொல்ல, அவ்வளவு வேதனைகளையும் சோதனைகளையும் அனுபவித்தவளை தானும் துன்புறுத்தி விட்டோமே என்று எண்ணியவன், தன்னைத் தானே சுமக்க முடியாதவனாய் அங்கிருந்த இருக்கையில் தொப்பென்று விழுந்தான். தலையின் கனம் தாங்கமாட்டாமல் கைகளால் தலையைத் தாங்கியவனுக்கு நெஞ்சின் பாரத்தை எப்படிச் சுமப்பது என்றுதான் தெரியவில்லை.
அதைப்பார்த்துப் பயந்துபோனான் நீக்கோ. “ஹேய் கீதன்! என்ன? ஏன் ஒருமாதிரி இருகிறாய்? என்ன செய்கிறது?” என்று பதட்டத்தோடு அவன் தோள்தட்டிக் கேட்டான்.
தன் நிலையிலிருந்து நிமிராமல், ஒன்றுமில்லை என்பதாகத் தலையை மட்டும் இடமும் வலமுமாக அசைத்தான்.
அந்த நிமிடத்தில் அவன் மனதில் அவள் மேலிருந்த கோபங்கள் ஒரு பக்கமாக ஒதுங்கியிருக்க, அவள் பட்ட பாடுகளும் அனுபவித்த துயருமே முன்னால் நின்று அவனைப் போட்டுக் குத்திக் குதறின.
பதினாறு வயதில் தனியாக வந்து, கஷ்டப்பட்டு, உழைத்து, குடும்பத்தையே காத்திருக்கிறோம் என்று, அவன் தன்னைக் குறித்தே வேதனைப் பட்டதுண்டு. இந்த வெளிநாட்டில் தனித்துப்போய் நிற்கிறோமே என்று இன்றுவரை கவலைப்படுவதுண்டு.
அவளானாள், எல்லோரும் இருந்தும் யாருமில்லா அனாதையாக யாரோ ஒருவரின் வீட்டில் வளர்ந்திருக்கிறாள். அந்தப் பிஞ்சு எதையெல்லாம் நினைத்துப் பயந்ததோ? எதையெல்லாம் நினைத்துத் துடித்ததோ.. என்னென்ன ஆசைப்பட்டு அதெல்லாம் எனக்குக் கிடைக்காது என்றெண்ணி தன் ஆசைகளை அடக்கியதோ..
குழந்தை மித்ரா கண்ணீரோடு கண்முன்னால் வந்து நின்று அவனை வதைத்தாள்.
அப்போது கீதனின் கைபேசி அலறியது. அதைக்கூட உணரமாட்டாமல் உறைந்துபோய் இருந்தவனிடம் நீக்கோதான், “யார் என்று பார் கீதன்.” என்றான் அவன் முதுகில் தட்டி.
ஒரு இயந்திரகதியில் அதை எடுத்துக் காதுக்குக் கொடுத்து, “இதோ வருகிறேன் பவி..” என்றுவிட்டு கைபேசியை அணைத்தவன், நீக்கோவிடம் எதுவுமே பேசாமல், பேச இயலாமல் அங்கிருந்து கிளம்பினான்.
போகிறவனையே பார்த்துக்கொண்டிருந்தான் நீக்கோ. எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு எதிர்பாராமல் சந்தித்தவளோடு இனியும் பழக முடியாது என்பது தெளிவாக விளங்கியது அவனுக்கு. அது வேதனையைக் கொடுத்தாலும், ‘இனியாவது என் ஏஞ்சல் நன்றாக வாழவேண்டும்’ என்று நினைத்துக்கொண்டான்.
அதுவரை ஹோட்டலுக்குள் இருந்து அவர்களையே அவதானித்துக்கொண்டிருந்த டியானா அவனருகில் வந்து, “அவனிடம் எல்லாவற்றையும் சொன்னாயா?” என்று கேட்டாள்.
“ம்.. ஏஞ்சல் நன்றாக வாழவேண்டும் டியானா. அவள் பாவம்.” என்றான் வேதனை நிறைந்த குரலில்.
“கவலைப்படாதே! நிச்சயம் அவள் சந்தோசமாக வாழ்வாள். நம் திருமணத்துக்கு வரும்போது மூவரும் சந்தோசமாக வருவார்கள் பாரேன்.” தேறுதலாகச் சொன்னாள் டியானா.
தன் காதலியின் இடையில் கைகளைக் கோர்த்து, அவனது குழந்தையைச் சுமப்பவளின் மணிவயிறு அவனோடு பட்டும் படாமல் முட்டியபடி நிற்க, அவளின் விழிகளோடு தன் விழிகளைக் கலந்து, “இனிமேல் அவர்களின் வாழ்க்கைக்கு நாம் இடைஞ்சலாக இருக்கவேண்டாம் டியானா. திருமணத்துக்கும் சொல்லவேண்டாம்.” என்றான் தொண்டை அடைக்க.
தன் காதலனின் விழிகள் இரண்டையும் மாறிமாறிப் பார்த்தாள் டியானா.

