தனிமைத் துயர் தீராதோ 20 – 4

ஒன்றுமே சொல்லாதபோதும், புது வாழ்க்கை, புது வீடு.. சற்றே மங்களகரமாக ஆரம்பித்து இருக்கலாமோ என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை அவனால். ஆனாலும், ஒன்றும் சொல்லாமல் கப்பை வாங்க அவன் கையை நீட்ட, தட்டை தன் பக்கமாக இழுத்துக்கொண்டு, “நான் பாலே கொண்டு வருகிறேன்.” என்றாள் மித்ரா.

 

“பரவாயில்லை விடுங்கள். இதையே குடிக்கலாம்.” என்றான் கீதன்.

 

“இல்லையில்லை! நீங்கள் சொன்னது போல முதலில் பாலையே காய்ச்சுவோம்.” என்றாள் மித்ரா.

 

அவனுக்கும் அந்த விருப்பம் இருந்ததில் அதற்குமேல் மறுக்கவில்லை.

 

“அதென்ன அத்தான், நீங்களும் என்னைப்போல அக்காவை ‘ங்கள்’ போட்டுக் கதைக்கிறீர்கள். நீங்களும் அவரை விடச் சின்னப் பிள்ளையா?” என்று திடீரெனக் கேட்டாள் வித்யா.

 

குறும்பு கொப்பளிக்கும் விழிகளோடு அவள் கேட்டாலும், சட்டெனக் கீதனால் பதில் சொல்ல இயலவில்லை. அப்படி உரிமையோடு அழைக்க அவனுக்குத் தோன்றவில்லையே! அதை இந்தச் சின்னப் பெண்ணிடம் சொல்ல முடியாதே!

 

மித்ராவை திரும்பிப் பார்த்தான். அவளும் அதை அப்போதுதான் கவனித்தாள் போலும், “அதுதானே..” என்றாள் அவனிடம்.

 

மெல்லப் புன்னகைத்து, “சரி விடு! இனி உன் அக்காவை வா போ என்றே அழைக்கிறேன்.” என்றான் கீதன்.

 

எல்லோருமாகப் பால் அருந்தினார்கள். மதியமாகவும் கீதனின் காரில் ஹோட்டல் ஒன்றுக்குச் சென்று மதிய உணவை முடித்துவிட்டு வந்தார்கள்.

 

அதன்பிறகு, டீவிக்கு வயர் கனெக்க்ஷன் கொடுத்து, தமிழ் சானல்கள் வேலை செய்கிறதா என்று பார்த்து, வாஷிங் மெஷின் வேலை செய்கிறதா என்று கவனித்து, ஒதுக்காமல் இருந்த பொருட்களை ஒதுக்கி என்று மிச்சம் மீதியிருந்த வேலைகளை ஆளாளுக்குப் பார்த்தனர்.

 

இருள் கவியத் தொடங்கவும், அடுத்தநாள் சத்யனுக்கும் வித்யாவுக்கும் பள்ளிகள் இருந்ததில் அவர்களை வீட்டில் விடுவதற்காக மித்ரா ஆயத்தமாக,

 

“நீ இரு. நான் கூட்டிக்கொண்டு போகிறேன்.” என்றான் கீதன்.

 

“உங்களுக்கு எதற்குச் சிரமம்?”

 

“இதில் என்ன சிரமம்?” என்றுவிட்டு, “வாருங்கள் போகலாம்..” என்று கார் திறப்பை எடுத்துக்கொண்டு பார்க்கிங்குக்கு நடந்தான்.

 

சத்யன் வித்யாவின் முகங்கள் பூவாக மலர்ந்துபோயிற்று. சத்யன் ஒருபடி மேலே போய், “அத்தான் மிகவும் நல்லவராகத் தெரிகிறார் இல்லையாக்கா…?” என்று தமக்கையிடம் ரகசியம் பேசினான்.

 

“ம்ம்..” என்றாள் மித்ரா புன்னகையோடு.

 

ஜன்னலால் எட்டிப் பார்த்துவிட்டு, “அத்தான் காரை எடுத்துவிட்டார். விரைவாக வாண்ணா. அக்கா பாய்.. வெள்ளி இரவு மறக்காமல் எங்களைக் கூப்பிட வாருங்கள்.” என்ற வித்யா, தமக்கையின் கன்னத்தில் முத்தம் ஒன்றைப் பதித்துவிட்டு, சத்யனை முந்திக்கொண்டு வெளியே ஓடினாள்.

 

“பாரக்கா அவளை. காரில் முன்பக்கம் ஏறுவதற்காக எப்படி ஓடுகிறாள் என்று.” என்றான் சத்யன்.

 

இது மித்ரா கார் வாங்கிய நாளில் இருந்து அவர்கள் இருவருக்குள்ளும் நடக்கும் சண்டை. ஒருநாள் சத்யன் என்றால் மறுநாள் வித்யா முன்னுக்கு இருப்பது என்று அவர்களுக்குள் எழுதப்படாத ஒரு சட்டம் இருந்தது. இன்றோ புது அத்தானின் காரில் அந்தச் சட்ட விதிகள் ஏற்கப்படாமல் வித்யா முந்திக்கொண்டு இருந்தாள்.

 

“விடு சத்தி. அவள் இன்னும் சின்னப்பிள்ளை தானே..” என்றாள் மித்ரா சமாதானமாக.

 

“அப்போ நான்?” முறுக்கிக்கொண்ட தம்பியின் தலை கலைத்துவிட்டவள், “நீயும் சின்னப் பிள்ளைதான். ஆனால், அவளை விடப் பெரியவன்.” என்றாள் சிரிப்பை அடக்கிக்கொண்டு.

 

“அக்கா…!” என்று பொய்யாக முறைத்துவிட்டுக் கிளம்பினான் சத்யன்.

 

சற்று நேரத்தில் திரும்பி வந்த கீதனிடம், “நன்றி..” என்றாள் மித்ரா.

 

“எதற்கு?”

 

“சத்தி, வித்தியை கொண்டுபோய் விட்டதற்கு. அதில் அவர்களுக்கு மிகவும் சந்தோசம்.” என்றாள் புன்னகையுடன்.

 

“அவர்கள் இனி என் பொறுப்பு என்று அன்றே சொன்னேனே..” என்றுவிட்டு தன்னுடைய அறைக்குள் சென்று உடை மாற்றிக்கொண்டு வந்தான்.

 

“இரவுக்கு என்ன சாப்பிடுவீர்கள் நீங்கள்?” என்று சமையலறைக்குள் இருந்துகொண்டு கேட்டாள் மித்ரா.

 

“பசிக்கும்போது கண்முன்னால் என்ன இருக்கிறதோ அதை..”

 

“அப்போ உங்களின் கண்முன்னால் சாலட் வைக்கிறேன். சாப்பிடுகிறீர்களா?”

 

தம்பி தங்கையைக் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்ததுக்குப் பதிலாக அதைச் செய்ய நினைத்தாள்.

 

“சாலட்டா? இலை குலையில் எனக்குக் கொஞ்சம் அலர்ஜி ஆயிற்றே..” என்று இழுத்துவிட்டு, “நான் சூப் டின் சூடாக்கி சாப்பிட்டுக் கொள்வேன். உனக்குப் பிடித்ததை நீ சாப்பிடு.” என்றான் அவன்.

 

அங்கே பலவகைகளில் இருந்த சூப் டின்களைக் கண்டுவிட்டு, “இதில் எது என்று சொல்லுங்கள். நானே சூடாக்கித் தருகிறேன்.” என்றாள் மித்ரா.

 

சமையலறைக்குள் வந்தவன், தனக்குப் பிடித்த ஒன்றை எடுத்து அதன் வாயை திறந்து கொடுக்க, அவள் அதை ஒரு சட்டியில் ஊற்றி அடுப்பில் வைத்தாள். அங்கிருந்த மிளகும் உப்பும் எடுத்து அளவாகப் போட்டாள்.

 

கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டிக்கொண்டு சமையலறையின் சுவரில் சாய்ந்து நின்றுகொண்டு அவள் செய்வதைப் பார்த்துக்கொண்டு இருந்தவன், “உனக்குச் சமைக்கத் தெரியுமா?” என்று கேட்டான்.

 

“சமையல் என்று நீங்கள் எதைச் சொல்கிறீர்கள்? இப்போது நான் செய்வதற்குப் பெயரும் சமையல் தானே..” என்றவளின் இதழ்களில் சின்னப் புன்னகை.

 

“ஓ… நீ இந்தவகைச் சமையல் வித்தகியா?” என்று கேட்டுச் சிரித்தான் அவன்.

 

“ம்ம்…” என்றவள் சூப் சூடானதும் ஒரு பாத்திரத்தில் ஊற்றி, ஒரு பாண் துண்டுடன் அதை அவனிடம் நீட்ட, வாங்கிக்கொண்டான் கீதன்.

 

இருவரும் தங்களின் இரவு உணவை முடித்துக்கொண்டு, ஒரு இரவு வணக்கத்துடன் தங்கள் தங்கள் அறைக்குள் முடங்கிக்கொண்டனர்.

 

 

 

error: Alert: Content selection is disabled!!