“அதெப்படி மறக்கும்? இந்தத் திருமணம் நிலையானது என்று சொன்னேன் தானே..” என்று கேட்டவனுக்கு, தானும் ஒரு கணவனாக நடந்துகொள்ளவில்லை என்பது உறைக்கவில்லை.
“சாரி.. இனி கட்டாயம் நினைவில் வைத்திருக்கிறேன்.”
இதையெல்லாமா நினைவில் வைத்திருக்க வேண்டும்? மனதில் தானாகப் பதிய வேண்டாமா? சுள்ளென்று கேட்கத் துடித்த நாவை அடக்கிக்கொண்டான்.
திரும்பவும் அவன் கையிலிருந்த கைபேசி ஒலியெழுப்ப, மெல்லிய எரிச்சலோடு பார்த்தவனின் விழிகளில் பளபளப்பு. தாய் வீட்டிலிருந்து ஸ்கைப்பில் அழைத்துக்கொண்டிருந்தார்கள்.
அவர்களின் எண்ணம் விளங்க, வீடியோவை ஆன் செய்தான் கீதன்.
“அண்ணா, எங்கே அண்ணி?” ஆர்பாட்டமாய்க் கேட்டாள் பவித்ரா. அவளின் பின்னால் அம்மா, அப்பா, கவிதா மூவரும் நிற்பது தெரிந்தது. அவன் சொன்னது உண்மையா பொய்யா என்பதை அறியத் துடிக்கிறார்கள்!
சட்டென அங்கே நின்றிருந்த மித்ராவின் இடையில் கையைக் கொடுத்துத் தன்னருகில் இழுத்து, தன் முகத்தை மித்ராவின் முகத்தருகே சரித்தபடி, செல்லை சற்றே முன்னால் நீட்டி அவர்கள் இருவரும் தெரியும் வகையில் காட்டினான்.
பாதி மித்ராவே வீடியோவில் விழ, அவளை இன்னமும் தன்னருகில் அவன் இழுக்க, மித்ராவோ அதிர்ச்சியோடு அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“எப்படியிருக்கிறாள் உன் அண்ணி?” என்று பவித்ராவிடம் கேட்டான் அவன்.
“ஐயோ அண்ணா. அண்ணி மிகவும் அழகு. ஹாய் அண்ணி! நான் உங்களின் குட்டி மச்சாள் பவித்ரா. அண்ணா என்னைப் பற்றிச் சொல்லியிருக்கிறாரா?” என்று கலகலத்தாள் அவள்.
அவளிடம் பதிலின்றிப் போகவும், அவளைப் பார்த்த கீதனுக்கும் அவர்கள் இருக்கும் நிலை அப்போதுதான் மனதில் பட்டது.
அன்னையின் எண்ணங்களுக்குத் தீமூட்ட நினைத்தவனின் தேகத்தில் சொல்லாமல் கொள்ளாமல் தீ மூண்டது!
விழாவுக்குச் செல்வதற்காய் மை பூசியிருந்த கரிய பெரிய விழிகள் அதிர்ச்சியில் அகன்றிருக்க, அந்த விழிகளுக்குள் விழுந்து சற்றுநேரம் மூச்சுக்காய் தத்தளித்துத்தான் போனான் கீர்த்தனன். கஷ்டப்பட்டுக் கரை எறியவனின் கவனத்தைப் பொன்னென மின்னிய கன்னக் கதுப்புகள் ஈர்த்தது என்றால், பேச்சற்றுப் போன ஈரலிப்பான சின்னச் செப்பு இதழ்கள் அவனைச் சுண்டி இழுத்தது.
முதன் முதலாய் அனுபவிக்கும் பெண்மையின் அருகாமை.. அவன் மனதையும் உடலையும் புரட்டிப் போட தொடங்கியது.
“அண்ணா..! அண்ணி ஏன் என்னோடு கதைக்கிறார்கள் இல்லை?” என்று கத்திய பவித்ராவின் குரலில் மயக்கம் தெளிந்தவன், அவளின் இடையை அழுத்தி, “அவளோடு பேசு..” என்றான் மெல்லிய குரலில்.
அந்த அழுத்தத்தில் மித்ராவின் பொன்தேகம் முழுவதுமே சிலிர்த்துச் சில்லிட்டது. “ஹா..ய்!” என்றாள் பெரும் சிரமத்துடன்.
அவளது கரம் ஒன்று மெதுவாக உயர்ந்து, தன் இடையில் பதிந்திருந்த கீதனின் கரத்தை அகற்ற முற்பட, அவனோ இன்னும் அழுத்தமாய்ப் பற்றிக்கொண்டான்.
திரும்பவும் பேச்சு மறந்தவளாய் அவனைப் பார்த்து விழித்தாள் மித்ரா. விழிகள் இரண்டும் குறும்புடன் அவளைப் பார்த்து நகைக்க, கேலியாகப் புருவங்கள் இரண்டையும் உச்சி மேட்டுக்கே உயர்த்தினான் அவன்.
காந்தமாய்க் கவர்ந்திழுத்த அந்தப் பார்வையில் இருந்து விடுபட முடியவில்லை அவளால். அவனிடமிருந்து பார்வையை அகற்றிக்கொண்டபோதும் நெஞ்சு படபடத்தது.
வார்த்தைக்கு வார்த்தை அண்ணி அண்ணி என்று அழைக்கும் பவித்ராவைப் பார்த்துப் புன்னகைத்தாள். “எப்படி இருக்கிறாய் பவி?”
மித்ரா அவளிடம் பேசியதே போதும் என்பதுபோல், “நான் நன்றாக இருக்கிறேன் அண்ணி. உங்கள் முடி வெகு அழகு அண்ணி.. சுருள் சுருளாய் சுருண்டு நிற்கிறது. இயற்கையாகவே இப்படியா அல்லது நீங்கள் சுருட்டினீர்களா?” என்று ஆர்வத்தோடு விசாரித்தாள்.
கீதனின் பார்வையும் ஆர்வத்தோடு தன்மேல் படிவதை உணர்ந்தவளின் மேனி சிலிர்க்க, படபடத்த விழிகள் நொடிக்கொருதரம் அவன் விழிகளைச் சந்தித்து மீள, “எனக்குச் சுருள் முடிதான்..” என்றாள் மித்ரா.
அதன் பிறகு பவித்ரா என்னென்னவோ சலசலக்க, தன்னால் முடிந்தவரையில் பதில் சொல்லிக்கொண்டு இருந்தாலும் கீதனின் அருகாமை அவளைப் படாத பாடு படுத்திக்கொண்டே இருந்தது.
புது விதமான அவஸ்தை! அதுநாள் வரை அவள் அனுபவித்து அறியாத ஒன்று! அவனும் தாய்க்கு எரிச்சலைக் கிளப்புகிறேன் பேர்வழி என்று நன்றாக அவளோடு ஒட்டிக்கொண்டு நின்றான்! பசை போட்டு ஒட்டியதுபோல் அவன் கை வேறு அவள் இடையிலேயே கிடந்தது.
அப்போது சத்யன் மித்ராவின் செல்லுக்கு அழைத்தான்.
“நீ பேசு!” என்று தன் செல்லை அவளிடம் கொடுத்துவிட்டு, உள்ளே சென்று அவளதை எடுத்துக் கதைத்துவிட்டு வந்தான் கீதன்.
அங்கே சத்யன் தயாராகி விட்டதாகவும் அவர்களை ஏற்ற வரும்படியும் சொல்ல, பவித்ராவிடம் அதைச் சொல்லிவிட்டு செல்லை அணைத்தான் கீர்த்தனன்.
மித்ராவுக்கோ அவன் முகத்தைப் பார்க்கவே முடியவில்லை. ஒருவித கூச்சம் ஆட்கொண்டிருந்தது அவளை. அதுநாள் வரை முகம் பார்த்து, விழிகளை நேராகச் சந்தித்துப் பேசியவளின் அந்தத் தயக்கம் கீர்த்தனனுக்குள் ஒருவித உற்சாகத்தைக் கொடுத்தது.
மலர்ந்த முகத்தோடும், இதழ்களில் உறைந்த புன்னகையோடும், “வா..” என்று அவளையும் அழைத்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளியேறினான்.

