காரில் சென்றுகொண்டிருந்த இருவரும் ஒன்றுமே பேசிக்கொள்ளவில்லை. அவர்களுக்குள் மௌனம் ஆட்சி செய்த போதிலும் மனங்களில் என்னென்னவோ எண்ணங்கள்!
ஜன்னல் வழியே பார்வையைப் பதித்திருந்த மித்ராவுக்குள் ஒருவிதக் குழப்பமே!
இத்தனை நாட்களில் அவள் அறிந்த கீர்த்தனன் இயல்பானவன், தானும் தன் பாடுமாக இருப்பவன். இருவரும் இயல்பாகக் கதைத்துப் பேசினாலும், இன்றுபோல் நடந்துகொண்டதில்லை. தேவையில்லாமல்.. ஏன் தேவைக்குக் கூடத் தொட்டுப் பேசியதில்லை. அனாவசிய சேட்டைகள், சீண்டல்கள் அற்றவன்!
நட்போடு கரம் பற்றுவது, கண்ணியத்துடன் கூடிய மெல்லிய அணைப்பு, அருகில் வந்து நிற்பது எல்லாம் தவறல்லதான்! அந்த நாட்டிலேயே பிறந்து வளர்ந்தவளுக்கு இது ஆண் இது பெண் என்று பிரித்துப் பார்த்துப் பழகத் தெரிந்ததில்லை.
ஆனால், இன்று கீதன் தொட்ட விதம்? அவன் பார்த்த பார்வை? அதை நட்பின் அடையாளம் என்றோ சக மனிதனின் சாதாரணச் செய்கை என்றோ நினைக்க இயலவில்லை.
கீதனுக்கோ, பெற்றவருக்கு உணர்த்த என்று அவன் நடந்துகொண்ட முறை அவனை அவனறியா சூழலுக்குள் தள்ளியது. மனதில் ஒருவித பரபரப்பு! அவளின் இடையைப் பற்றியிருந்த கையில் இன்னுமே குறுகுறுப்பு அடங்கவில்லை! உடைக்கு மேலால் பற்றிய போதிலும் அவன் உணர்ந்த வழுவழுப்பும், மென்மையும் அவனுக்குள் என்னவோ மாற்றங்களை விதைக்க முயன்று கொண்டிருந்தது.
என்ன விதமான உணர்வு இது? அவனுக்கே தெரியவில்லை. ஆனால், மனம் அதை ரசித்தது. இன்னும் அனுபவிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டது! மெல்ல அவளைத் திரும்பிப் பார்த்தான். வீட்டிலிருந்து வரும்போது இருந்த படபடப்பு அடங்கி நிற்சிந்தையாக அமர்ந்திருந்தாள்.
அவன் இடையைப் பற்றியபோது அவள் பட்ட பாடும், விழிகள் அலை பாய்ந்ததும், அவள் தடுமாறியதையும் எண்ணியவனுக்குள் ஒருவித குதூகலம்! எதையோ வென்றது போல்.. எதையோ சாதித்தது போல்.. அவளை இன்னும் அப்படித் தடுமாற வைக்க வேண்டும்போல்.. தன் தொல்லைகளைத் தாங்கமுடியாமல் அவள் படும் அவஸ்தைகளை ரசிக்க வேண்டும்போல்..
அவனுக்கே தெரியவில்லை.. தன் மனம் எதை எதிர்பார்க்கிறது என்று! ஆனாலும் சுகமான சிந்தனைகள்!
மித்ராவின் தாய் வீடு வந்துவிடவும் காரை பார்க் பண்ணினான் கீர்த்தனன்.
“அவர்களைக் கூட்டிக்கொண்டு வருகிறேன்.” என்றபடி மித்ரா இறங்க, “பொறு! நாம் ஒன்றாகவே போகலாம்.” என்றான் கீதன்.
‘அப்பா இருந்துவிட்டால்…’ உள்ளே மனம் அதிர அவள் அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
அதைக் கவனித்துவிட்டு, “நம் திருமணம் முடிந்து ஒரு மாதமாகப் போகிறது. இன்னும் நாம் மாமா மாமியை போய்ப் பார்க்கவில்லையே. அவர்கள் வராவிட்டாலும் நாமாவது போய்ப் பார்க்க வேண்டாமா? போவோமா என்று எப்போது கேட்டாலும் எதையாவது சொல்லித் தடுத்துவிடுவாய். இன்று இவ்வளவு தூரம் வந்துவிட்டு உள்ளே போகாமல் இருந்தால் என்ன நினைப்பார்கள்.” என்றபடி அவன் காரை விட்டு இறங்க, அவள் தடுத்ததைக் கண்டுகொண்டிருக்கிறான் என்று தெரிந்து திகைத்துப் போனாள் மித்ரா.
அதை மறைத்துக்கொண்டு, “ஆனால்.. விழாவுக்கு நேரமாகிவிட்டதே.. இப்போது போனால் அம்மா விடமாட்டார். ஜெர்மனியர்களின் விழாவுக்குப் பிந்திப் போவது அழகில்லை.” என்றாள் அவசரமாக யோசித்து.
அவன் வீட்டினரோடு ஸ்கைப்பில் கதைத்ததில் நேரம் பிந்தித்தான் இருந்தது. மணிக்கட்டை திரும்பிப் பார்த்துவிட்டு, “சரி.. நீயே போய் அவர்களைக் கூட்டிக்கொண்டு வா..” என்றான் மனமின்றி.
அப்போதுதான் அவனறியாமல் மூச்சை இழுத்து விட்டபடி வேகமாக நடந்தாள் மித்ரா.
சத்யனும் வித்யாவும் வர, பிறந்தநாள் விழாவுக்கு நால்வருமாகச் சென்றனர். அங்கே அவர்களுக்கு நல்ல வரவேற்பு. அதுவும் மித்ராவுக்குத் திருமணம் ஆகியதும், அவள் கணவன் கீதன் என்று அறிந்ததும் வித்யாவின் நண்பர்கள் அனைவரும் அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
விழா நல்லபடியாக ஆரம்பித்துக் கேக் வெட்டியதும், அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் விதமாகக் குறைந்த அளவிலான ஆல்கஹால் கொண்ட ஷ்னெப்ஷன் வழங்கப்பட்டது.
இரண்டு அல்லது மூன்று மிடறுகள் மட்டுமே பருகக் கூடிய அளவிலான சின்னச்சின்ன கிளாஸ்களில் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டது. மித்ராவும் கீதனும் நாகரீகமாக மறுத்துவிட்டு கோக் எடுத்துக்கொள்ள, வித்யாவும் சத்யனும் அதை எடுத்துப் பருகினர்.
அதைக் கவனித்தபோதும் ஒன்றும் சொல்லவில்லை கீதன். “நீ அருந்துவதில்லையா?” என்று மித்ராவிடம் கேட்டான்.
“எனக்கு அது ஒத்து வருவதில்லை..” என்றாள் அவள்.
நல்லபடியாக விழாவும் முடிய தங்களின் வாழ்த்துக்களையும் பரிசுகளையும் கொடுத்துவிட்டு நால்வரும் வெளியே வந்தபோது இரவாகியிருந்தது.
மித்ராவின் தாய் வீட்டில் சத்யனும் வித்யாவும் இறங்க, “இப்போதாவது போய்விட்டு வருவோம்.” என்றபடி தானும் இறங்கினான் கீதன்.
வரும்போதே சத்யனிடம் கேட்டு, அப்பா வீட்டில் இல்லை என்பதை அறிந்திருந்த மித்ராவும் மறுக்காமல் இறங்கினாள். அவளுக்குமே அம்மாவோடு சற்றுநேரம் பேசிக்கொண்டிருக்கும் ஆவல் எழுந்திருந்தது.
நால்வருமாக உள்ளே போக, அங்கே இருந்த சிறிய வரவேற்பறையில் அமர்ந்திருந்தார் சண்முகலிங்கம். அவரைப் பார்த்ததுமே பதறிப்போய்ச் சத்யனைத்தான் பார்த்தாள் மித்ரா.
“நாங்கள் வரும்போது அவர் இருக்கவில்லை அக்கா…” என்று அவளின் காதுக்குள் முணுமுணுத்தான் அவன்.
இனி ஒன்றும் செய்ய முடியாதே! கீதனும் அவரைப் பார்த்துவிட்டானே! அவர் இருந்த கோலம் வேறு முகத்தைச் சுழிக்க வைத்தது.
அது சிறிய அளவிலான முன்அறை என்பதால், ஒரு சின்ன டீப்பாயும் எதிரெதிரே இரு குஷன் வைத்த நாற்காலிகளும் மட்டுமே போடப்பட்டு இருந்தது.

