அதில் ஒன்றில் அமர்ந்திருந்த சண்முகலிங்கம், சரம் மட்டுமே அணிந்து வெற்று மேலுடம்புடன், கண்கள் சிவக்க, முகம் வியர்த்திருக்க, மது போதையின் முழு ஆதிக்கத்தில் இருந்தார். ஒரு கையிலோ எரிந்துகொண்டிருந்த சிகரெட். அந்த அறை முழுவதும் புகை மண்டலம். அது போதாது என்று அவர் இருந்த இடம் முழுவதும் எரிந்த சிகரெட்டின் சாம்பல்கள் கொட்டிக் கிடந்தது. டீப்பாயில் ஒரு பெரிய மதுப் போத்தலும், அதன் பக்கத்தில் மது நிரம்பியிருந்த கிளாசும், முடிந்துபோன சிகரெட் பெட்டி வாய் திறந்தபடி கிடக்க, உண்டு முடித்திருந்த மீன் வறுவலின் முட்கள் என்று அந்த அறையைக் கண்கொண்டு பார்க்க முடியவில்லை.
வித்யா முகத்தையும் மூக்கையும் சுழித்துக்கொண்டு உள்ளே விரைய, மித்ரா கையைப் பிசைந்தபடி கீதனைப் பார்க்க, தமக்கையின் அருகிலேயே சத்யன் தேங்கி நின்றான்.
கீதனின் முகமும் இறுகித்தான் போனது. ஆனாலும் அதைக் காட்டிக்கொள்ளாமல், “எப்படி இருக்கிறீர்கள் மாமா?” என்று மரியாதையின் நிமித்தம் கேட்டவன், அவர் முன்னால் இருந்த இருக்கையில் அமர்ந்தான்.
மித்ராவுக்கோ இங்கே அடிவயிறு கலங்கத் தொடங்கியது. இந்த ஒரு மாதத்தில் கீர்த்தனன் புகைத்தோ, மது அருந்தியோ அவள் பார்த்ததே இல்லை. இப்படித்தான் வாழவேண்டும் என்று சில கோட்பாடுகள் வைத்திருப்பவன். அப்படியானவன் என்ன சொல்வானோ..
அதைவிட அவளின் அப்பா யார் என்ன என்றில்லாமல் பேசக் கூடாததுகளைப் பேசிவிடுவாரோ என்று தவிப்போடு சத்யனைப் பார்க்க, அவனும் அவள் நிலையில்தான் நின்றிருந்தான்.
“எனக்கு என்ன? ராஜா மாதிரி நன்றாக இருக்கிறேன். நல்ல விசா, நல்ல மனைவி, நல்ல வாழ்க்கை!” என்றார் சண்முகலிங்கம் கர்வத்தில் உதடுகள் பிதுங்க.
அங்கிருந்த கிளாசை எடுத்து ஒரு மிடறு பருகி அதைச் சப்புக் கொட்டி விழுங்கிவிட்டு, அதே கிளாசை அவன் புறமாக நீட்டி, “நீயும் குடி..” என்றார் கோணல் சிரிப்புடன்.
“பழக்கமில்லை..” என்றான் கீதன்.
“இதை நம்பச் சொல்கிறாயா?” நக்கலாகக் கேட்டுச் சிரித்தார் சண்முகலிங்கம்.
அதற்குமேலும், மாமனார் என்கிற மரியாதையின் நிமித்தம் கூட அவர் முன்னால் இருக்கப் பிடிக்காமல், “அது உங்கள் இஷ்டம்.” என்றவன், சட்டென எழுந்து உள்ளே நடந்தான்.
“வாருங்கள் தம்பி..” சங்கடத்தோடு வரவேற்றார் சங்கரி.
இவரை எதற்கு இங்கே கூட்டி வந்தாய் என்று மித்ராவிடம் கண்ணால் கேட்டார். அவளுக்கோ கீதனின் முன்னால் அன்னையிடம் எதுவும் சொல்ல முடியாத நிலை.
அவளைக் காப்பாற்றுவதுபோல் உடையை மாற்றிக்கொண்டு வந்த வித்யா, “அத்தான், என் அறையைப் பார்க்க வாருங்கள்..” என்றபடி அவன் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு போனாள். “அப்படியே அண்ணாவின் அறையையும் பாருங்கள். அப்போதுதான் அவன் எவ்வளவு துப்பரவு என்று தெரியும் உங்களுக்கு..” என்றவள் சத்யனை திரும்பிப் பார்த்துக் கண்ணால் சிரித்தாள்.
பின்னே? தன்னைவிடச் சத்யன் அத்தானிடம் நல்ல பெயர் வாங்க முயன்றால் விடுவாளா அவள்?!
‘இவள் ஒருத்தி! கால நேரம் தெரியாமல் விளையாடிக்கொண்டு!’ என்று சத்யன் பல்லைக் கடிக்க, “அவர்தான்மா வீட்டு வாசல் வரைக்கும் வந்துவிட்டு மாமா மாமியை பார்க்காமல் போவது மரியாதையில்லை என்று வந்தார். அதோடு, அப்பா வீட்டில் இல்லை என்று சத்யனும் சொன்னான்..” என்றாள் மித்ரா மெல்லிய குரலில் அன்னையிடம்.
“இன்றைக்கு என்னவோ நேரத்துக்கே வீட்டுக்கு வந்துவிட்டார்.” என்ற சங்கரி,
அதற்குமேல் ஒன்றும் சொல்லாமல் உள்ளே செல்ல, கீதனை எப்படி எந்தவித சங்கடங்களும் நேராமல் இங்கிருந்து கூட்டிக்கொண்டு போவது என்று யோசித்தபடி நின்றாள் மித்ரா.
அவன் முகம் வேறு இறுகிக் கிடந்ததே…!
அவளை நிறைய நேரம் காக்க வைக்காமல், வித்யா என்னவோ சொன்னதுக்கு அவள் தலையில் செல்லமாய் ஒரு கொட்டுக் கொட்டிச் சிரித்தபடி வந்த கீதனின் முகத்தைப் பார்த்தவளுக்கு அப்போதுதான் சற்று ஆசுவாசமாக இருந்தது.
அவளின் நிம்மதியை என்றைக்குமே சண்முகலிங்கம் நிலைக்க விட்டதில்லையே! இன்றும், “சத்தி! ஒரு சிகரெட் பெட்டி வாங்கிவா!” என்று வரவேற்பறையில் இருந்து குரல் கொடுத்தார் அவர்!
கீதனுக்கோ கோபம்தான் வந்தது. ‘இதென்ன?’ என்று கேட்டான் மனைவியிடம்.
சத்யனுக்கும் ஆத்திரம் தான். முதன் முதலாக அத்தான் வந்திருக்கிறார். அவரின் முன்னால் குடிப்பதுமல்லாமல், அவரையும் குடிக்கச் சொல்லிக் கேட்டாரே!அந்த இடத்தில் கீர்த்தனன் இல்லாமல் இருந்திருக்கப் பெரும் பிரளயத்தையே கிளப்பியிருப்பான்.
இதில் அவனைச் சிகரெட் வாங்கி வரட்டாம்!
முகக்கன்றலை அடக்கிக்கொண்டு அவன் கடைக்குக் கிளம்ப எத்தனிக்க, அதற்கு மேல் பொறுக்க இயலாதவனாக, “எங்கே போகிறாய்?” என்று அதட்டினான் கீர்த்தனன்.
“இங்கே என்ன நடக்கிறது மித்ரா?” என்று அடிக்குரலில் அவளிடமும் சீறினான்.
“இந்த அப்பா எப்போதுமே இப்படித்தான் அத்தான்.” காலநேரம் தெரியாமல் தன் கோபத்தைக் கொட்டினாள் வித்யா.
அந்த வீட்டில் எப்போதுமே எல்லோருமே ஏதோ ஒரு விதத்தில் சண்முகலிங்கத்தின் அராஜகங்களைப் பொறுத்துப் போவதே வளமை. முரண்டு பிடிக்கும் அவளையும் பணிந்து நடக்கச் சொல்லி மற்றவர்கள் சொல்லும்போதெல்லாம் மனதில் எரிச்சல் மண்டும். இன்று தந்தையின் செயலை கீர்த்தனன் தட்டிக் கேட்டதும் தன் கோபத்தையும் அவனிடம் கொட்டினாள்.
‘அறிவு கெட்டவள்! அத்தானின் கோபத்துக்கு இன்னும் தூபம் போடுகிறாளே..’ என்று சத்யன் அவளை முறைக்க, அவளோ அதன் பொருள் விளங்காமல் எப்போதும்போல் அவனின் முறைப்பை தூக்கி கிடப்பில் போட்டாள்.
கீதனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் கலங்கினாள் மித்ரா. அதை உணர்ந்து, “இது எனக்குப் பழக்கம் தான் அத்தான்.” என்றான் சத்யன் சமாளிக்கும் விதமாக.

