“இல்லையத்தான்.. எனக்கு எதுவும் வேண்டாம்..” என்று இறங்கிய சுருதியில் அவன் முணுமுணுக்க, இப்போது மித்ராவை முறைத்தான் கீதன்.
‘அவன் அவனுடைய அத்தானிடம் கேட்கிறான். அதில் நீ என்ன தலையிடுவது?’
அந்தப் பார்வையை எதிர்கொள்ள இயலாமல் மித்ரா தடுமாற, “அத்தான்.. அது.. நேற்று நடந்ததுக்கு நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன்..” என்றான் சத்யன் உள்ளே போன குரலில்.
“அதற்கு நீயேன் மன்னிப்புக் கேட்கவேண்டும்?” என்று கேட்டவனுக்கு, மித்ராவுக்கும் அவனுக்கும் இடையில் எதுவோ சரியில்லை என்பதை அவன் ஊகித்துவிட்டான் என்று விளங்கியது.
அப்படி அவனை ஊகிக்க வைத்தது மித்ராவின் பேச்சு! ‘இருக்குடி உனக்கு!’ என்று உள்ளே கடுகடுத்தாலும் அடக்கிக்கொண்டான்.
“இல்லை.. அது அப்பா..” என்று சத்யன் இழுக்க, “அவர் பேச்சை விடு!” என்று தடுத்துவிட்டு, “உனக்கும் அந்தப் பழக்கமெல்லாம் இருக்கிறதா?” என்று அவன் முகத்திலேயே பார்வையைப் பதித்துக் கேட்டான்.
ஒருமுறை தடுமாறிவிட்டு, “ஒரேயொரு முறை புகைத்திருக்கிறேன் அத்தான். பிறகு இல்லை.” என்றான் சத்யன்.
அந்தப் பேச்சையே அந்த இடத்தில் மித்ரா எதிர்பார்க்கவில்லை. இதில் சத்யன் ஒரேயொரு முறை புகைத்திருக்கிறேன் என்றது?! அதிர்வோடு கீதனைத்தான் பார்த்தாள்.
அவள் பார்வையை உள்வாங்கிக்கொண்டு, “குடி?” என்று கேட்டான் கீர்த்தனன்.
இப்போது சத்தியினால் அவன் விழிகளை, தீட்சண்யமான அந்தப் பார்வையை எதிர்கொள்ள முடியவில்லை. பார்வையை எங்கோ பதித்துப் பதில் சொல்லாமல் அமர்ந்திருந்தான்.
“சொல் சத்தி..”
“பி..யர் குடிப்பேன்.. அது சம்மருக்கு… வெயிலுக்கு..” அதைச் சொல்ல முடியாமல் தடுமாறினான்.
“நீ?” வித்யாவை திரும்பிப் பார்த்துக் கேட்டான் கீர்த்தனன்.
“ஐயையோ அத்தான். என் தோழிகள் எல்லோரும் புகைப்பார்கள் தான். ஆனாலும் இதுவரை நான் முயற்சித்தது இல்லை. ஆல்கஹாலும் இல்லை. ரெட்புல் மட்டும் தான்.” என்றவள், “அது எனெர்ஜி ட்ரிங்க்.” என்றாள் அவசரமாக.
“அதுதான் எல்லாவற்றுக்குமே ஆரம்பம். முதலில் எனெர்ஜி ட்ரிங்க்.. பிறகு பியர் டின்.. அது அப்படியே வளர்ந்துகொண்டே போகும்.” என்றான் கண்டிப்பு நிறைந்த குரலில்.
அதுவரை நேரமும் கலகலத்துக்கொண்டிருந்த வித்யாவின் முகம் காற்றுப்போன பலூனாய் சுருங்கிப் போனது. அதைப் பார்த்த மித்ராவுக்கு நடந்துகொண்டிருந்த பேச்சின் திகைப்பையும் தாண்டி மனம் நொந்தது.
“என் பேச்சை மதிப்பீர்களாக இருந்தால், இனி நீங்கள் இருவரும் எந்தக் காலத்திலும் குடியோ சிகரெட்டோ பழகக் கூடாது. உங்கள் அப்பாவை பார்க்கிறீர்கள் தானே.. நாளைக்கு நீங்களும் அப்படி ஆகிவிடக் கூடாது. ஒழுக்கமும், நாம் நடந்துகொள்ளும் முறையும் வாழ்க்கையில் மிக மிக முக்கியம். புரிந்ததா சத்தி?” கண்டிக்கும் குரலில் கீர்த்தனன் கேட்டபோது, விழுந்துவிட்ட முகத்தோடு தலையாட்டினான் சத்யன்.
அதன்பிறகு சற்று நேரத்துக்கு அங்கே யாருமே பேசவில்லை. வித்யா கூட அமைதியாக அமர்ந்திருந்தாள். அந்த அமைதியை கீர்த்தனனாலேயே தாங்க முடியவில்லை. அவர்களின் மனம் புரிந்தாலும், இது அவன் பேசியே ஆகவேண்டிய விஷயம் அல்லவா! கண்டிப்புக் காட்டவேண்டிய இடத்தில் காட்டினால் தானே பிள்ளைகள் வளரவேண்டிய முறையில் வளர்வார்கள்!
எனவே அவர்கள்பால் கரைந்த மனதை கஷ்டப்பட்டுக் கட்டுப் படுத்திக்கொண்டான். ஆனாலும், அவர்களின் அமைதியை பொறுக்க முடியாமல், “அத்தான் மேல் கோபமா?” என்று கேட்டான் கீர்த்தனன்.
“இல்லைத்தான்…” இருவரும் ஒருசேர சொன்னபோதும் அவர்களிடம் பழைய உற்சாகம் மீண்டிருக்கவில்லை. முகங்கள் களையிழந்து கிடந்தன.
மித்ராவுக்கோ அவர்களைப் பார்க்க அழுகை வரும் போலிருந்தது. இந்தக் காலத்தில் இதெல்லாம் ஒரு விசயமா என்ன? மொடாக்குடிதான் கூடாது. சம்மருக்கு குடித்தால் தான் என்னவாம்?
“சரி… இன்று எங்கே போகலாம்? தியேட்டர்? ஏதாவது தமிழ் படம் அல்லது டொச் படம் புதிதாக வந்ததா சத்தி?” பேச்சை வளர்த்தான் கீதன்.
“தமிழ் படம் வந்திருக்கிறது.” சுருக்கமாகச் சொன்னான் சத்யன்.
“பிறகென்ன.. அதற்கே போவோம். வரும்போது அப்படியே வெளியே எங்கேயாவது உணவையும் முடித்துக்கொண்டு வரலாம்.” என்று அவர்களை உற்சாகப்படுத்த முயன்றான்.
“இத்தாலியன் ரெஸ்ட்டாரென்ட் போவோமா அத்தான்?” சின்னவள் இல்லையா.. மீண்டும் உற்சாகமானாள் வித்யா.
“சத்தி, நீ என்ன சொல்கிறாய்?”
“போகலாமத்தான்.” என்றவனைப் பார்த்த கீதனுக்குச் சிரிப்பு வந்தது.
“என்னடா? அத்தான் மேல் பெருங் கோபத்தில் இருக்கிறாய் போலவே?” என்று கண்ணைச் சிமிட்டி கேட்டபோது, சத்யனின் முகத்திலும் புன்னகை அரும்பியது.
“போங்கத்தான்..” என்றான் சிரித்தபடி.
அவர்களின் மலர்ந்த முகங்களைப் பார்த்த பிறகுதான் கீர்த்தனனுக்குமே மனம் ஆறியது.
“மித்ரா தயாராகு..” என்றபடி, கீதன் எழுந்து தன் அறையை நோக்கிச் செல்ல அவனைப் பின்தொடர்ந்தாள் மித்ரா.
அவளின் அறைக்குள் போகாமல் அவன் பின்னாலேயே அவள் வர, நின்று திரும்பி, “என்ன?” என்று கேட்டான்.
“இப்படி என் தம்பி தங்கையிடம் உங்கள் கோபத்தைக் காட்டாதீர்கள். அதற்கு உங்களுக்கு உரிமையில்லை.” என்றாள் மித்ரா மெல்லிய குரலில்.
அதில் கோபம் கொண்டவனோ, அவளையும் இழுத்துக்கொண்டு தன் அறைக்குள் சென்று கதவை சாத்தினான்.
“நான் அவர்களின் அத்தான்! எனக்கா உரிமையில்லை?”
அவனது கோபத்தைப் பார்த்து நடுங்கினாலும், “அதற்காக இப்படியா கத்துவீர்கள். பாவம் அவர்கள். சந்தோசமாக வந்தவர்களின் முகம் விழுந்தே போய்விட்டது. அவர்கள் வருந்தினால் என்னால் தாங்க முடியாது.” என்றாள் குரல் கரகரக்க.
“வலிக்கும் என்பதற்காக நோய்க்கு ஊசி போடாமல் இருக்க முடியுமா?”
“இப்போது அவர்கள் என்ன தவறு செய்தார்கள் என்று திட்டினீர்கள்? இந்தக் காலத்தில் இதெல்லாம் சகஜம் தான்.” என்றாள் மித்ரா.

