தனிமைத் துயர் தீராதோ 23 – 3

 

“என்ன சகஜம்? அப்போ நானும் உன் அப்பா மாதிரி குடித்துவிட்டு வருகிறேன். நீயும் அதைச் சகஜமாக எடுத்துக்கொள்கிறாயா?” என்று அவன் கேட்டபோது, திகைத்துப்போய் அவனைப் பார்த்தாள் மித்ரா.

 

அப்பாவைப் போலவா…? அவள் மேனி பயத்தில் சிலிர்த்து நடுங்கியது…

 

“புரிகிறது தானே… நாளைக்குச் சத்யனும் ஒரு பெண்ணுக்கு கணவனாகப் போகிறவன். உன் அம்மா அனுபவிக்கும் வேதனையை அந்தப் பெண்ணும் அனுபவிக்க வேண்டும் என்கிறாயா?” என்று கேட்டான்.

 

அம்மாவைப்போல் இன்னொரு பெண்ணா? அவளின் சம்மதம் இன்றியே தலை மறுப்பாக ஆடியது.

 

“அப்போ பேசாமல் இரு! எனக்குத் தெரியும் அவர்களை எப்படிப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று. இனியும் உங்களுக்கு உரிமையில்லை அது இது என்று உன் வாயிலிருந்து வார்த்தைகள் வரக்கூடாது..” என்றான் அழுத்தம் திருத்தமாக.

 

மிரண்டுபோனாள் அவள். கலங்கிவிட்ட விழிகளால் அவனைப் பார்த்து விழிக்க, தன்னை மீறி அவளைத் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டான் கீர்த்தனன்.

 

“என்னமா இது? நம் பிள்ளைகளை நாம்தான் கவனிக்க வேண்டும். அவர்களுக்கு என்ன தெரியும் சொல்? நாம் பழக்கும் பழக்கம் தான் அவர்களின் எதிர்காலத்தையே தீர்மானிக்கும். உன் தம்பியும் தங்கையும் எனக்குக் கவி பவி மாதிரித்தான். நான் எது செய்தாலும் அவர்களின் நன்மைக்காகத்தான் இருக்கும். புரிந்ததா?” என்றான் தேறுதலாக.

 

அந்த அணைப்பிலும், தணிந்த குரலில் கனிவோடு அவன் சொன்னதிலும் நெஞ்சம் கரைந்தே போனது அவளுக்கு. “ஹ்ம்ம்.. ஆனால், கண்டிப்புக் காட்டாதீர்கள் தனா. அவர்கள் பாவம். தனிவாகச் சொன்னாலே கேட்டுக்கொள்வார்கள். அன்புக்கு ஏங்கும் குழந்தைகள்.” என்றாள் திரும்பவும் விழிகள் கலங்க.

 

அவளைப் பார்த்தவனுக்கு, யார் குழந்தை? அவர்களா இல்லை தன் அணைப்பில் நிற்பவளா என்கிற சந்தேகம் எழுந்தது.

 

புன்னகையோடு அவள் நெற்றியில் தன் நெற்றியால் முட்டி, “சரிடி பெரியமனுசி! இனி நீ சொன்னது போலத் தணிவாகவே சொல்கிறேன். சரியா? இப்போ கொஞ்சம் சிரி பார்க்கலாம்..” என்றான் கீர்த்தனன்.

 

அவன் பேச்சா அல்லது அவன் செயலா, ஏதோ ஒன்று அவள் மனதை இலேசாக்கா, அவனைப் பார்த்து அழகாகப் புன்னகைத்தாள்.

 

“இது நல்லபிள்ளைக்கு அழகு! சரி.. போய் வெளிக்கிடு.” என்றபடி கதவைத் திறந்துவிட்டான்.

 

தியேட்டருக்குள் சென்றதும் சத்யனை முதலில் விட்டு பிறகு வித்யா மித்ரா என்று இருத்தியவன் மித்ராவின் அருகில் தான் அமர்ந்துகொண்டான்.

 

அதைக் கவனித்த மித்ராவின் மனதிலோ ஒருவித பாதுகாப்பு உணர்வு! தாய்ப் பறவையின் சிறகுக்குள் சுகமாக அடைக்கலமாகும் குஞ்சின் நிலையில் இருந்தாள்.

 

விழிகள் கசிய அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

 

அதைக் கவனித்துவிட்டு அவள் புறமாகச் சரிந்து, “என்ன?” என்று கேட்டான் கீதன்.

 

ஒன்றுமில்லை என்பதாகத் தலையை அவள் அசைத்தாலும் அவள் விழிகளில் தெரிந்த மகிழ்ச்சியிலும், முகத்தில் தெரிந்த பரவசத்திலும் அவளின் கையைத் தன் கைக்குள் அடக்கி, “படத்தைப் பார்..” என்றவனின் குரலும் கனிந்து குழைந்து ஒலித்தது.

 

அந்தப் படம் முடியும் வரையிலும் பற்றிய அவள் கரத்தை கீதன் விடவேயில்லை.

 

படம் முடிந்ததும் இரவு உணவையும் முடித்துக்கொண்டு எல்லோரையும் கூட்டிக்கொண்டு வந்த கீதன், காரை அவர்களின் அம்மா வீட்டின் முன் நிறுத்தினான்.

 

சத்யன் வித்யாவுடன் தானும் இறங்கிய மித்ரா, அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பார்சலாகக் கட்டிக்கொண்டு வந்த உணவை அவர்களிடம் கொடுத்தாள்.

 

எப்போதும்போலத் தமக்கையின் கன்னத்தில் முத்தமிட்டு, “பைக்கா.. குட்நைட் அத்தான்.. குட்நைட் அக்கா..” என்றாள் வித்யா மலர்ந்த முகத்தோடு.

 

அன்று மதியம் கீர்த்தனன் கண்டித்தபோது வாடிப்போன வித்தியின் முகம் கண்ணிலாட, மனம் நெகிழ தானும் அவளின் கன்னத்தில் முத்தமிட்டு, “குட்நைட் வித்திம்மா.. சத்தி குட்நைட்.” என்று அவர்களை அனுப்பி வைத்தாள் மித்ரா.

 

வீட்டுக்கு வந்து, உடைகளை மாற்றி, குளியலறை சென்றுவந்து, சந்தோசமான மனநிலையோடு அவளின் அறைக் கதவருகில் நின்று, “குட்நைட் தனா.” என்றாள் மித்ரா.

 

அவனோ விழிகள் பளிச்சிட அவளையே பார்த்துக்கொண்டு நின்றான்.

 

இவன் என்ன பதிலுக்கு ஒன்றும் சொல்லவில்லையே என்பதாக அவள் அவனை ஏறிட, விழிகளில் குறும்பு மின்ன, “அதென்ன ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாகக் குட்நைட் சொல்கிறாய்? ஏன் இந்த ஓரவஞ்சனை?” என்று இதழ்களில் இளம் புன்னகை மின்னக் கேட்டான் கீதன்.

 

குட்நைட்டை குட்நைட் என்றுதானே சொல்லமுடியும். இதில் எப்படி ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரி சொல்வது? அப்படி அவள் யாருக்கெல்லாம் குட்நைட் சொன்னாள்?

 

சத்யனுக்கு, வித்திக்கு இப்போது இவனுக்கு என்று எண்ணம் ஓடும்போதே வித்திக்கு அவள் சொன்னவிதம் நினைவில் வர மெல்லிய படபடப்பு அவளிடம்.

 

அவனோ குறும்பு மின்னும் விழிகளால் ரசனையோடு அவளின் செம்பவள இதழ்களையே பார்த்துக் கொண்டிருந்தான். இதென்ன இப்படிப் பார்க்கிறான்? அதை எதிர்கொள்ளாத தெரியாமல் அவள் தடுமாற, கீதனுக்கோ உள்ளம் துள்ளியது!

 

அவளை இன்னுமே சீண்டிப்பார்க்க மனமும் உடலும் ஆவல் கொண்டபோதும் அதை அடக்கி, சின்னச் சிரிப்போடு, “குட்நைட் மித்ரா..” என்று சொல்லிவிட்டு தன்னுடைய அறைக்குள் சென்றான்.

 

error: Alert: Content selection is disabled!!