தனிமைத் துயர் தீராதோ 24 – 1

அன்று மாலை வேலை முடிந்ததுமே, “பை மச்சான்..” என்றுவிட்டு வேகமாகக் கிளம்பினான் கீர்த்தனன்.

 

“டேய்! நில்லுடா! எங்கே இவ்வளவு அவசரமாக ஓடுகிறாய்?” என்று கேட்டான் அர்ஜூன்.

 

“வீட்டுக்குடா. வேலை முடிந்தபிறகும் இங்கே இருந்து என்ன செய்யச் சொல்கிறாய்?” தன்னைப் போகவிடாமல் தடுக்கிறானே என்கிற கடுப்போடு சொன்னான் கீர்த்தனன்.

 

“முன்னர் எல்லாம் என்ன செய்தாயோ அதைச்செய்! அப்போதெல்லாம், அருணா கத்தப் போகிறாள், வாடா போவோம் என்று சொன்னாலும் விடாமல் என்னையும் சேர்த்து இழுத்துப் பிடிக்கிறவன், இப்போது என்னைகூட விட்டுவிட்டு ஓடுகிறாயே.. என்னடா விஷயம்?” கண்ணைச் சிமிட்டிக் கேட்டான் அர்ஜூன்.

 

இளம் முறுவல் அரும்பியது கீர்த்தனன் முகத்தில். எங்கேயும் ஒரு நிமிடம் தன்னும் தாமதிக்க விடாமல் அவனைக் கட்டியிழுக்கும் காந்தம் ஒன்று அங்கே வீட்டில் அவனுக்காகக் காத்திருக்கிறதே! அவனுக்கே அவனை எண்ணிப் புதினம்தான். எப்படி இப்படி மாறிப்போனான்? இல்லையில்லை எப்படி அவள் மாற்றினாள்?

 

தனக்குள் உருவாகியிருக்கும் அந்த மாற்றத்தை எண்ணித் தனக்குள்ளேயே சிரித்துக்கொண்டவன், ஒரு கையால் கேசத்தைக் கோதிக்கொண்டான்.

 

“டேய்! என்னடா வெட்கம் கிட்கம் ஏதும் படுகிறாயா?” அருகில் வந்து அவன் முகத்தைக் கூர்ந்தபடி குறும்போடு கேட்டான், அர்ஜூன்.

 

மெல்லிய கூச்சம் தாக்க, “போ மச்சான்!” என்றபடி வாய்விட்டுச் சிரித்தான் கீர்த்தனன்.

 

“அடப்பாவி! இப்படி வெட்கப் பட்டு ஆண்குலத்தின் மனத்தையே வாங்குகிறாயே! சம்சாரச் சாகரம் மிகவும் அருமையாக அமைந்துவிட்டது போலவே. என்ன தினமும் கொண்டாட்டம் தானா?”

 

“உன் தலை! ஒரு கொண்டாட்டமும் இல்லை.” என்றான் வாடாத முறுவலோடு.

 

“இல்லையா?” நம்ப முடியாமல் கேட்ட அர்ஜூன், ஆட்காட்டி விரலை நீட்டி கீதனின் முகத்தைச் சுற்றி வட்டமிட்டபடி, “பிறகேன் இங்கே இந்தளவு ஒளிவெள்ளம் பாய்கிறது?” என்று கேட்டான்.

 

அதைக் கேட்டவனின் விழிகள் கனிய முகம் இன்னுமே மலர்ந்தது. “அவளை நினைத்தாலே மனமெல்லாம் மகிழ்ச்சிதான் மச்சான்! வேலைக்கு வரவே பிடிக்கவில்லை. அவள் அருகிலேயே இருக்க வேண்டும்போல்.. அவளிடம் வம்பிழுக்க வேண்டும் போல்.. இன்னும் என்னவெல்லாமோ தோன்றுகிறதுடா..” என்றான் அவள் நினைவுகளை விழிகளிலும் சுமந்தபடி.

 

விசாவுக்காகக் கட்டியவனின் மனதில் காதல் பூத்துவிட்டது! சந்தோசமாக உணர்ந்தான் அர்ஜூன். அவனது கணிப்பை உறுதி செய்யும் நோக்குடன், “அப்போ உனக்கு அவளைப் பிடித்திருக்கிறது?!” என்று கேட்டான்.

 

“பிடித்திருக்கிறதாவா? அதெல்லாம் சாதாரண வார்த்தை. அவள் இல்லாத ஒரு உலகத்தை என்னால் கற்பனையில் கூடக் காணமுடியவில்லை.” உள்ளத்தின் ஆழத்திலிருந்து சொன்னான்.

 

“பிறகு என்னடா? வாழ்க்கையைச் சந்தோசமாக ஆரம்பிக்க வேண்டியதுதானே.”

 

“இல்லடா! கல்யாணம் தான் ஒரு தேவைக்காக நடந்தது. மண வாழ்க்கையாவது மனங்கள் இணைந்தபிறகு நடக்கட்டும். அதோடு, அவளுக்கும் என்னைப் பிடிக்க வேண்டாமா?”

 

“என்ன சொல்கிறாய்? அவளுக்கு உன்னைப் பிடிக்கவில்லையா?”

 

அவனருகில் அவள் படும் அவஸ்தைகளும், கணநேர பார்வை வீச்சைக்கூடத் தாங்க முடியாமல் அவள் படும் பாடுகளும் மனக்கண்ணில் வந்துபோக, அவன் தலை மறுப்பாக ஆடியது. “பிடிக்கவில்லை என்று சொல்ல முடியாது. ஆனால்.. அவளாகவும் என்னை நோக்கி எந்த அடியும் வைக்கவில்லை. அதோடு…” என்று இழுத்தவன் பேச்சை நிறுத்தினான்.

 

மனதை உறுத்தும் அந்த விஷயத்தை எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை அவனுக்கு.

 

“அதோடு?” அர்ஜூனும் விடாமல் கேட்டான்.

 

“யமுனாவின் விஷயம் உனக்குத் தெரியும் தானே அர்ஜூன். இந்தத் திருமணம் நடக்கும்வரை அவளை.. அவள் மீது ஒரு சலனம். இப்போது மித்ரா மீது.. என் மனம் எப்படி இவ்வளவு இலகுவாக ஒருத்தி மாற்றி இன்னொருத்தி என்று நினைக்கிறது என்று தெரியவில்லை. எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் சலனப் படுகிறேனோ என்று.. என்னவோ தப்பு செய்வதுபோல் மனம் உறுத்துகிறது அர்ஜூன்.” என்றான் குழப்பத்தோடு.

 

“விசரனாடா நீ?” கீதன் சொல்லி முடித்ததுமே பாய்ந்தான் அர்ஜூன்.

 

“முதலில் எது சலனம் எது காதல் என்று பிரித்து அறிந்துகொள்! உன் வருங்காலத் துணைவி என்று உன் அம்மா யமுனாவைக் காட்டியதால் வந்த ஆர்வம் தான் அது. ஆனால் மித்ரா.. அவள் உன் மனைவி! அவள் மீது உனக்கு வந்திருப்பது காதல்! நீயே சொல், சற்றுமுன் சொன்னாயே மித்ராவின் அருகிலேயே இருக்க வேண்டும் போல், அவளை வம்பிழுக்க வேண்டும்போல், அவளை ரசிக்க வேண்டும்போல் இருக்கிறது என்று. அப்படி எப்போதாவது யமுனா மீது தோன்றியிருக்கிறதா?” என்று அழுத்தம் திருத்தமாகக் கேட்டான் அர்ஜூன்.

 

இல்லையே என்றெண்ணி வியந்தான் கீர்த்தனன். அவள் மீது ஆர்வம் இருந்த போதிலும், தாயின் பேச்சினால் விளைந்த கோபத்தில் அவளை வேண்டாம் என்று உறுதியாகச் சொல்ல முடிந்ததே! அப்படிச் சொன்னதற்காய் அவன் பெரிதாக வருந்தியதும் இல்லை. அதோடு, இன்னொருத்தியை வாழ்வின் கடைசிவரைக்கும் அவள்தான் என்று எண்ணி மணமுடிக்கவும் முடிந்ததே!

 

 

error: Alert: Content selection is disabled!!