தனிமைத் துயர் தீராதோ 24 – 4

சொல்லியும் இருப்பாள்! ஆனால், கீதனே தடுத்தான்!

 

அவளைத் தன் புறமாகத் திருப்பி, பற்றிய தோள்களை அழுத்தி, “இனி நீ அதையெல்லாம் நினைக்கவே கூடாது. எந்தத் துன்பமும் உன்னை அணுக நான் விடமாட்டேன். அதனால், இனி என் மித்துக்குட்டி எப்போதும் சிரித்துக்கொண்டுதான் இருக்கவேண்டும் புரிந்ததா?” என்று செல்லக் கண்டிப்புடன் சொன்னான்.

 

அதைக்கேட்டு தன்னிலை மீண்டவள் உள்ளூர பதறியே போனாள். என்ன காரியம் செய்யப் பார்த்தாள்.

 

அடுப்பிலிருந்த தோசை கருகத் தொடங்கவும், அதன் வாசனையில் வேகமாகத் திரும்பி அதை எடுத்துவிட்டு அடுத்தத் தோசையை அவள் வார்க்க முயல, “இப்போதுதான் உனக்குச் செய்யத் தெரியுமே. இல்லை என்றாலும் நான் காட்டித் தருகிறேன். அடுப்பை அணைத்துவிட்டு வா ஹாலுக்குப் போகலாம்..” என்று அழைத்தான் கீர்த்தனன்.

 

தான் செய்ய இருந்த காரியத்தை எண்ணி உள்ளுக்குள் பதறிக்கொண்டு இருந்த அவளோ, அவனது அருகாமையிலும், அனுசரனையிலும் தன்னையும் மீறி எல்லாவற்றையும் கொட்டி விடுவோமோ என்று பயந்தாள்.

 

எனவே, “குடிக்கக் கஃபே வேண்டாமா?” என்று கேட்டாள்.

 

“வேண்டாமாவா? தாகமாக இருக்கிறது. ஊற்றி ஹாலுக்கே கொண்டுவா..” என்றுவிட்டுச் சென்றான் அவன்.

 

அதன்பிறகுதான் மூச்சை இழுத்துவிட்டுத் தன்னைச் சமன்படுத்த முயன்றாள் மித்ரா.

 

அப்போது கீர்த்தனனின் கைபேசி சத்தமிட, யாரோ என்று எண்ணியபடி அவள் கஃபேயை தயாரிக்க, “சொல்லுங்கம்மா..” என்று கீதன் சொல்வது கேட்டது.

 

‘இந்த நேரத்திலா? அங்கே நல்லிரவாக இருக்குமே..’ என்று தனக்குள் எண்ணியவள், அவனது கஃபேயை அவனுக்கு அருகில் வைத்துவிட்டு, தன்னதோடு தன்னறைக்குச் செல்ல நினைக்கையில் அவள் கையைப் பற்றி நிறுத்தினான் கீர்த்தனன்.

 

விழிகளாலேயே எங்கே போகிறாய் என்று அதட்டிவிட்டு, அவளைத் தன்னருகில் வலுக்கட்டாயமாக அமர்த்திக்கொண்டான். அங்கே ஸ்கைப் வழியாக அவன் வீட்டினரும் பார்த்துக்கொண்டு இருந்ததில், ஒன்றும் செய்யமுடியாமல் அமர்ந்திருந்தாள் மித்ரா.

 

இருவரும் இணைத்துக் கண்டத்தில் கொதித்து, “கவிதாவுக்கு நல்ல மாப்பிள்ளையாகப் பார் தனா!” என்றார் லக்ஷ்மி கட்டளை போல்.

 

“ஏனம்மா திடீரென்று?” குழப்பத்தோடு கேட்டான் கீதன்.

 

“இது என்னடா கேள்வி? அவளுக்கும் கல்யாண வயது வந்துவிட்டது தானே. இப்போது கல்யாணம் செய்து வைக்காமல் எப்போது செய்வதாம்? நீ வேறு ஒன்றுக்கு இரண்டு தங்கைகள் இருக்கிறார்களே என்கிற எண்ணம் சிறிதும் இல்லாமல் உன் வாழ்க்கையைப் பார்த்துக்கொண்டாய். இப்படியே எங்களைக் கை கழுவி விடலாம் என்று நினைத்தாயா?” என்று பொரிந்தார் அவர்.

 

“இதென்ன பேச்சு? நீங்கள் தானே இப்போதைக்கு வேண்டாம், படித்த படிப்புக்கு வேலை பார்க்கப் போகிறாளாம் என்று சொன்னீர்கள்.” என்றான் அவனும் சினத்த குரலில்.

 

“அவள் சொன்னால் அப்படியே விட்டுவிட முடியுமா? அந்தக் கதையை விட்டுவிட்டு நீ அவளுக்கு மாப்பிள்ளையைப் பார்க்கிற வழியைப் பார்! உன்னை யார் எப்படி மாற்றுவார்கள் என்று யாருக்குத் தெரியும்? அப்படியே பவிக்கும் ஒரு வழி விரைவிலேயே பார்க்கவேண்டும்.” என்றார் மித்ராவை முறைத்துக்கொண்டு.

 

அவரின் ஜாடைப்பேச்சு புரியாததில் அமைதியாக இருந்தவளை பார்த்தான் கீதன். அவன் பார்ப்பது உணர்ந்து என்ன என்று விழிகளால் வினவினாள்.

 

ஒன்றுமில்லை என்று தலையை அசைத்து சின்னதாய் புன்னகைத்தவன், அங்கே பார்த்துக்கொண்டு இருப்பவர்கள் அறியாமல் அவளின் கையை இதமாகப் பற்றிக்கொண்டான்.

 

தாயிடம் திரும்பி, “கவியையும் பவியையும் நல்ல இடத்தில் கட்டிக் கொடுக்கவேண்டியது என் பொறுப்பு என்று எப்போதோ உங்களிடம் சொல்லிவிட்டேன்!” என்றான் உறுதியாக. அப்போதுதான் கவனித்தான் அங்கே யமுனாவும் இருப்பதை.

 

அவளைப் பார்த்தவனின் மனதில் இன்று எந்தவித சலனமும் இல்லை, ஆவலும் இல்லை. மனம் தெளிந்த நீரோடையாய் இருக்க, அதில் மித்ராவின் முகம் மட்டுமே தெரிந்தது.

 

எதிலோ இருந்து விடுபட்ட உணர்வு தந்த சந்தோசத்தோடு, “மாப்பிள்ளையை ஊரில் பார்ப்பதா அல்லது இங்கேயா?” என்று கேட்டான்.

 

அம்மா தங்கைகளை வெளிநாட்டுக்கு அனுப்ப சம்மதிக்க மாட்டார் என்றெண்ணி அவன் கேட்க, “இங்கே கட்டிக் கொடுத்துவிட்டு அவள் ஐந்துக்கும் பத்துக்கும் கஷ்டப்படுவதைப் பார்க்கச் சொல்கிறாயா? அங்கேயே பார். இதெல்லாம் உனக்குத் தானாகவே தெரியவேண்டும். உனக்குத்தான் இப்போது உன் வாழ்க்கை முக்கியமாகப் போய்விட்டதே. தங்கைகளை எங்காவது கிடைக்கும் இடத்தில் பிடித்துத் தள்ளிவிடுவோம் என்று நினைக்கிறாய் போல.. அல்லது தலையணை மந்திரம் அதுதானோ யாருக்குத் தெரியும்?” என்று அப்போதும் விடாமல் குத்தினார்.

 

அதற்கு மேலும் அவரோடு பேசப் பிடிக்காமல், “சரி. இங்கேயே பார்க்கிறேன்.” என்றுவிட்டு அழைப்பை துண்டித்தான்.

 

 

error: Alert: Content selection is disabled!!