தனிமைத் துயர் தீராதோ 25 – 1

பால்கனியில் அமர்ந்திருந்தாள் மித்ரா. கைகள் உருளை கிழங்குகளைத் தேங்காய் துருவல் போன்று அரிந்துகொண்டு இருந்தாலும் விழிகள் அவர்களது வீதியையே அவ்வப்போது சுற்றிச் சுற்றி வந்தது.

 

இன்னும் இவனைக் காணவில்லையே!

 

வேலை முடிந்து வந்தாலே அவன் எப்போது வருவான், அவளை எப்போது சீண்டுவான் என்றே ரகசியமாக எதிர்பார்க்கத் தொடங்கிவிடுவாள். வெளியில் மட்டும் அவனது செய்கைகள் பிடிக்காதவள் போன்ற பொய் முறைப்பு!

 

கள்ளி! தன்னைத் தானே நிந்தித்துக் கொண்டவளின் இதழ்களில் கள்ளச் சிரிப்பு!

 

ஒவ்வொரு நாட்களையும், ஏன் ஒவ்வொரு கணத் துளிகளையும் ரசித்து வாழத் தொடங்கியிருந்தாள் மித்ரா! அப்படி மாற்றியிருந்தான் அவளின் அன்புக் கணவன்!

 

அன்று, என்னால் முடிந்த உதவியை அவனுக்குச் செய்துவிட்டு போவோமே என்று எண்ணித்தான் அவனை மணந்தாள். அதற்குப் பிறகு என்ன என்று அவள் யோசிக்கவில்லை. அதுநாள் வரை யோசித்ததும் இல்லை. திட்டம் போட்டு இது இப்படித்தான் என்று வாழும் வாழ்க்கை என்றைக்குமே அவளுக்குக் கிடைத்ததில்லையே!

 

நதி பள்ளம் கிடைக்கும் இடங்களில் எல்லாம் பாய்வது போல், வாழ்க்கை எந்தப் பாதையில் அழைக்கிறதோ அந்தப் பாதையில் போய்ப் பழகியவள், அடுத்து என்ன என்கிற சிந்தனையைத் தனக்குள் வரவிட்டதில்லை. வருவதை வரும்போது கண்டுகொள்வோம் என்பதே அவள் வாழ்வின் தாரகமந்திரம்!

 

அப்படித்தான் கீர்த்தனன் அவள் வாழ்க்கையில் வந்தான்! சட்டப்படி மட்டுமே கணவனாகிப் போனவன், இப்போதெல்லாம் அவள் இதயத்துக்குள்ளும் கணவனாக, காதலனாக நுழைந்து கொண்டிருந்தான்! சாதரணமாக அல்ல! வறண்டு, வெடித்துப்போய்க் கிடந்த பூமியில் சோ என்று மழை சூறாவளியாய் பெய்தால் பூமி எப்படி உள்வாங்கும்?! அப்படி!

 

அப்படி அவளுக்குள் நுளைந்தவனின் விருப்பங்களை நிறைவேற்றவே, அவனின் ஆசைப்படி நடந்துகொள்ளவே இப்போதெல்லாம் அவளின் மனம் விரும்புகிறது!

 

அப்படி அன்றொருநாள் அவளின் உடை விசயத்தில் கவனமெடுத்தவனின் அன்றைய செயலை எண்ணிப் பார்க்கையில் இன்றும் அவளின் வெண்பஞ்சு கன்னங்களில் வெட்கப் பூக்கள் சட்டெனப் பூத்தன!

 

இந்த வெட்கத்தை, கன்னச் சிவப்பை, அவன் விழிகளை நேர்கொண்டு பார்க்க முடியாமல் அவள் அனுபவிக்கும் தடுமாற்றத்தை எல்லாம் அவளுக்கு அறிமுகப் படுத்தியவனும் அவனே! ஏன், அவளையும் அச்சம், மடம், நாணம் அனைத்தும் உள்ள பெண்ணாய் அவளுக்கே அறிமுகப் படுத்தியவனும் அவனே!

 

முதல்நாள் திட்டம் போட்டதுபோல் அன்று காலையில் எழுந்ததுமே கீர்த்தனனும் மித்ராவும் சைக்கிள் ஓடப் போவதற்குத் தயாராகினர்.

 

அந்த வார இறுதிக்கு அவர்களின் வீட்டுக்கு வரமுடியாது என்று சத்யனும் வித்யாவும் சொல்லிவிட, நல்ல வெயில் காலம் என்பதால் சைக்கில் ஓடப்போகலம் என்று முடிவு எடுத்திருந்தனர் இருவரும்.

 

ஸ்போர்ட்ஸ் ஜீன்சும் டி-ஷர்ட்டும் அணிந்து, அவர்கள் இருவருக்குமான ஹெல்மெட்டுகளையும் எடுத்துக்கொண்டு, “போவோமா மித்து?” என்று கேட்டுக்கொண்டு கீர்த்தனன் வந்தபோது மித்ராவும் தயாராக இருந்தாள்.

 

அவளும் அவனைப் போலவே ஸ்போர்ட்ஸ் ஜீன்சும், உடலைக் கவ்விப் பிடித்த ஸ்போர்ட் டீ- ஷர்ட்டும் அணிந்திருந்தாள். அவளைக் கண்டவனின் நடை நின்றது!

 

அழகை மறைக்க வேண்டிய ஆடையே அவளின் அழகுகளை அப்பட்டமாகப் படம் போட்டுக் காட்டவும் அவன் பார்வை ரசனையாக மாறியது.

 

“ம்.. போகலாம் தனா..” என்றவாறே குடிப்பதற்குத் தண்ணீரும், ஆங்காங்கே நின்று கொறிப்பதற்கு என்று சிப்ஸ் வகையறாக்களும் அடங்கிய முதுகில் கொழுவும் பாக்கை எடுத்துக்கொண்டு நிமிர்ந்தவள், அவன் பார்வையில் தெரிந்த மாற்றத்தில் அப்படியே உறைந்தாள்.

 

சின்ன இடையும், அந்த இடை தாங்கி நின்ற செழுமையும், அவள் தேகத்தின் வளைவுகளும் என்று அவன் பார்வை பயணித்த இடங்களெல்லாம் சிலிர்க்க, அவன் முன்னால் நிற்கமுடியாமல் தடுமாறினாள் மித்ரா.

 

எந்தவித அவசரமும் இன்றி, தேங்க வேண்டிய இடங்களில் தேங்கி, அளவெடுக்க வேண்டிய இடங்களில் அளவெடுத்து, ரசிக்க வேண்டிய இடங்களை ரசித்து முன்னேறியவனின் பார்வை, அவள் அணிந்திருந்த டி- ஷர்ட்டின் கழுத்து வளைவில் வந்து நின்றது.

 

சற்றே பெரிதான ஆழமான வட்டக்கழுத்து அவனுக்கு விருந்து படைத்தபோதும், அந்த விருந்தை மற்றவர்களும் அனுபவித்து விடுவார்களோ என்றெண்ணியவனின் விழிகளில் கோபம் குடியேறிற்று!

 

அதைக் கவனித்தவளின் முகத்திலோ குழப்பம்.

 

“வேறு உடை இல்லையா?” என்று கேட்டான் அவன்.

 

“ஏன்.. இதற்கு என்ன?” தன்னைத் தானே குனிந்து பார்த்துவிட்டுக் கேட்டாள் மித்ரா.

 

“ஒன்றுமில்லைதான். ஆனால் எனக்குச் சொந்தமானதை நான் மட்டும்தான் பார்க்கவேண்டும்.” என்றான் அவன்.

 

‘என்ன அவனுக்குச் சொந்தமானது?’ என்று புரியாமல் அவள் தன்னையும் அவனையும் மாறி மாறிப் பார்க்க, அவன் முகத்திலோ இப்போது குறும்பு.

 

கையிலிருந்த ஹெல்மை வைத்துவிட்டு அவளை நெருங்கி, அவளைத் தன்னோடு சேர்த்திழுத்து, “என்ன? ஒன்றுமே புரியவில்லையா?” என்று கண்ணைச் சிமிட்டிக் கேட்டான்.

 

error: Alert: Content selection is disabled!!