கன்னங்கள் கதகதக்க தொடங்கினாலும் தலையை இடம் வலமாக அசைத்தாள் மித்ரா.
தோளைத் தோட்ட அவனது ஆட்காட்டி விரல் ஆழமான கழுத்து வளைவை நோக்கி மெல்ல மெல்ல நடக்காத தொடங்கியபோது, அவள் தேகமெங்கும் சூடான இரத்தம் பாயத் தொடங்கியது.
கழுத்தின் ஆழத்துக்கு அவன் விரல் வந்தபோது, சட்டெனப் பற்றி அதற்குமேலும் நகர முடியாமல் செய்தவளின் கன்னங்கள் சூடேறிச் சிவந்தன.
அந்த நொடியே அவற்றைச் சுவைக்கும் வேகம் எழுந்தது அவனுக்கு. சிரமப்பட்டு அடக்கிக்கொண்டு, “வேறு மாற்று” என்றான்.
நாணம் கொண்ட விழிகளால் அவனை ஏறெடுத்துப் பார்க்க இயலாமல் தலை கவிழ்ந்தபடி, “என்னிடம் இருப்பது எல்லாமே இப்படித்தான்.” என்று முணுமுணுத்தாள் அவள்.
என்ன செய்யலாம்? இப்படியே அவளைக் கூட்டிச் செல்வதா என்று அவன் சிந்திக்க, “இந்த உடைக்கு என்ன தனா?” என்று கேட்டாள் மித்ரா.
இவள் என்ன இப்படிக் கேட்கிறாள் என்கிற யோசனையோடு அவன் பார்க்க, அவள் விழிகளிலோ மெய்யாகவே புரியாத பாவம்! சற்றே கோபம் எழுந்த அதே வேளையில், இதுகூடத் தெரியாமல் வளர்ந்து இருக்கிறாளே என்கிற பரிதாபமும் தோன்றியது.
உன் அம்மா உன்னிடம் சொன்னதே இல்லையா என்று கேட்க வாய் வந்தாலும் அடக்கிக்கொண்டான். அவள் வளர்ந்த சூழ்நிலையைத் தான் அன்று பார்த்தானே!
தனது சில்மிசங்களை ஒதுக்கி, “உடலை மறைக்கத்தான் உடைகள். இப்படி அரையும் குறையுமாகப் போடக்கூடாதுடா. அதுதான் உனக்கும் அழகு எனக்கும் மரியாதை.” என்று விளக்கினான் அவன்.
அவளுக்கு ஏனோ என் சுதந்திரத்தில் நீ கை வைக்கிறாய் என்று சொல்லத் தோன்றவில்லை. அவனின் வழிநடத்தலின் கீழே இயங்கிடத்தான் ஆசை கொண்டாள். இப்போது அந்த உடையோடு வெளியே செல்ல அவளுக்கே பிடிக்கவில்லை.
என்ன செய்யலாம்? “கொஞ்சம் பொறுங்கள்!” என்றுவிட்டு உள்ளே ஓடிச்சென்று கோர்ட் போன்ற ஒன்றை எடுத்துவந்தாள்.
“குளிர் தொடங்கும் காலங்களில் இதற்கு மேலால் போட வாங்கி வைத்திருந்தேன்.” என்றவள் அதை அணிந்து அதன் சிப்பை இழுத்து கழுத்துவரை மூடிக்கொண்டாள்.
அதைப் பார்த்தவனுக்கும் முகம் மலர்ந்தது. “ஆனால், சைக்கிள் ஓடுகையில் வியர்க்குமே.. அப்போது இப்படி அணிந்துகொண்டு ஓட முடியாதே..” என்று யோசனையாக இழுத்தவன், அவளைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டி, “வியர்க்கும்போது நான் ஊதி விடுகிறேன்.” என்றான் குறும்போடு.
அவளுக்கு வெட்கமும் சிரிப்பும் சேர்ந்தே வந்தது. எப்போது என்ன சாக்குக் கிடைக்கும் என்று காத்திருப்பவன் விடுவானா?
வியர்க்கும்போதெல்லாம் ஆட்கள் இல்லா இடமாகப் பார்த்து நிறுத்தி அவளுக்கு ஊதிவிட அவன் தவறவே இல்லை! எவ்வளவுதான் வியர்த்தாலும் அவளும் அந்தக் கோர்ட்டை கழட்டவும் இல்லை!
வீட்டுக்கு வந்து குளித்து உடைமாற்றிக்கொண்டு ஸ்போர்ட்ஸ் உடைகள் விற்கும் கடைக்குச் சென்று, பொருத்தமான ஆடைகளை அவளுக்கு எடுத்துக் கொடுக்கவும் தவறவில்லை.
அன்றைய நினைவில் இதழ்களில் பூத்த புன்னகையோடு திரும்பியவளின் பார்வையில் கீதனின் கார் பாக்கிங்கில் வந்து நிற்பது தெரிந்தது. மனம் துள்ள உற்சாகத்தோடு கையசைத்தாள். அவனும் இவளைக் கண்டுவிட்டு காருக்குள் இருந்தே வெண்பற்கள் தெரியப் புன்னகைத்து கையை அசைத்தான்.
காரை விட்டு இறங்கியவனின் முகத்தில் தெரிந்த அதீத களைப்பில் அவள் உள்ளம் தவித்தது. கவிதாவின் திருமணத்தை ஒட்டி வங்கியில் வாங்கிய லோனைக் கட்டவேண்டும் என்று அவன் இப்போதெல்லாம் அதிகமாக வேலை செய்துகொண்டிருந்தான். அவள் எவ்வளவோ சொல்லியும் அவளின் பணத்தை அவன் தொடவே இல்லையே!
“நாம் நம் குடும்பம் என்று சொல்கிறவர் மட்டும் என் பணம் என்று அதைப் பிரித்துப் பார்க்கலாமா?” என்று அவள் மனத் தாங்கலோடு கேட்டபோது,
அவளை அணைத்து, “அதை நம் தேவை எதற்காவது பயன்படுத்திக் கொள்வோம் மித்தும்மா.. ப்ளீஸ்டா! என் செல்லம் தானே நீங்க.. நான் சொல்வதைக் கேளுங்கடி..” என்று அவன் கொஞ்சியபோது, அவனது அருகாமை தந்த மயக்கத்தில் கிறங்கியவளால் சம்மதமாகத் தலையை அசைக்க மட்டுமே முடிந்தது.
தன் எண்ணங்களை ஒதுக்கி, “தனா! என் கார் டிக்கிக்குள் தண்ணீர் கேஸ் இருக்கிறது. எடுத்துக்கொண்டு வாருங்கள்.” என்றவள், இங்கிருந்தே தன் கார் திறப்பின் பட்டனை அழுத்தி காரை திறந்துவிட்டாள்.
டிக்கியை திறந்து தண்ணீர் கேசை அவன் எடுத்ததும் திரும்பவும் மூடியவளுக்கு, தன்னை ஒரு மகாராணியைப் போல் எந்தக் கஷ்டங்களும் அண்டாமல் நடத்தும் அவனுக்குத் தன்னால் எந்த உதவியையும் செய்ய முடியவில்லையே என்பது பெரும் வருத்தத்தைக் கொடுத்தது.

