தனிமைத் துயர் தீராதோ 25 – 3

அவனுக்கு ஏதாவது செய்தே ஆகவேண்டும்! மனதில் உறுதியாக எண்ணிக்கொண்டாள்!

 

அன்றொருநாள் வேலை முடிந்து வந்தவனின் கண்களில் வீட்டிலிருந்த தண்ணீர் கேஸ்கள் படவும் கேள்வியாக அவளைப் பார்த்தான்.

 

“வெயில் காலமில்லையா? வாங்கியது எல்லாம் முடிந்துவிட்டது. அதுதான் வாங்கிக்கொண்டு வந்தேன்.” என்றாள் மித்ரா.

 

“சரிதான்! ஆனால், என்னிடம் சொல்லியிருக்க நான் வாங்கி வந்திருப்பேனே. சும்மா ஏன் நீ பாரம் சுமக்கிறாய்?” என்று கடிந்தான் அவன்.

 

மித்ராவுக்குச் சிரிப்புத்தான் வந்தது. “இதிலே என்ன இருக்கிறது தனா? வேலை முடிந்து களைத்து வருகிறவரை கடைக்குப் போய்விட்டு வாருங்கள் என்று சொல்ல மனம் வரவில்லை. அதுதான் நானே வாங்கி வந்தேன்.”

 

“நீ கடைக்குப் போய் வாங்கி வந்ததைச் சொல்லவில்லை. இரண்டு மாடிகள் இவ்வளவு பாரத்தையும் சுமந்துகொண்டு ஏன் வந்தாய் என்றுதான் கேட்கிறேன். இனி எது வாங்கினாலும் காரிலேயே வை. நான் வரும்போது தூக்கி வருகிறேன்.” என்றான் அவன்.

 

ஏனோ அவன் காட்டிய அந்த அக்கறையில், அவள் கஷ்டப்படக் கூடாதே என்கிற அவனின் கவனிப்பில் அவள் மனம் துள்ளிக் குதித்தது.

 

அந்த உற்சாகத்தில், “சரிப்பா. ஆனால்… டிஷ்யு பேப்பர் வாங்கினால் கூடவா காரில் வைத்துவிட்டு வரவேண்டும்?” என்று குறும்போடு கேட்டாள் மித்ரா.

 

சிரிப்பில் துடித்த ஈர இதழ்கள் அவனை ஈர்க்க, விழிகள் மின்ன அவளை நெருங்கினான். அவளின் கீழுதட்டை தன்னுடைய ஆட்காட்டி விரலாலும் பெரு விரலாலும் பற்றி இழுத்தபடி, “ஆமாண்டி என் பெண்டாட்டி!” என்றான் அந்த இதழிலேயே பார்வையைப் பதித்து.

 

மித்ராவின் பேச்சும் மூச்சும் ஸ்தம்பித்தது. கதகதப்பான விரல்கள் அவளுக்குள் அந்த வெப்பத்தைக் கடத்த முயல, அவளின் இதழ்கள் தன் இணைக்காக, அதன் அணைப்புக்காகத் துடிக்கத் தொடங்கின! அதற்குச் சொந்தக்காரனோ எதிலிருந்தோ தப்பிக்கும் நோக்கோடு அவசரமாகத் தன்னறைக்குள் புகுந்துகொண்டான்!

 

அவளின் மனம் எதெற்கெல்லாமோ தவிக்கத் தொடங்கியது. அன்று மட்டுமில்லை இன்றும்! ஆனால், முன்னர்ப் போலன்றி அவளோடு அவன் கழிக்கும் நேரங்கள் தான் குறைந்து போயிற்று! அதற்குக் காரணம் நடந்து முடிந்திருந்த கவியின் திருமணம்!

 

அர்ஜூனின் மனைவி அருணாவின் சொந்தக்காரர்களுக்குத் தெரிந்த குடும்பமான தாமோதரன் குடும்பத்தினரும், தங்கள் மகன் சேகரனுக்கு வரன் தேடுவது தெரியவரவும் அர்ஜூன் இரு குடும்பத்தையும் அறிமுகப் படுத்திவிட, குடும்பப் பின்னணிகள் விசாரிக்கப்பட்டு, பொறுத்தங்கள் பார்க்கப்பட்டு, மணப் பெண்ணினதும் மாப்பிள்ளையினதும் விருப்பங்கள் அறியப்பட்டுச் சேகரன் இலங்கை சென்று கவிதாவை மணமும் முடித்திருந்தான்.

 

கீதனுக்கு மித்ரா மூலம் விசா அனுமதிக்கப்பட்டு இருந்தாலும், அது இன்னும் அவன் கைக்கு வந்து சேர்ந்திராததில் அவன் நாட்டுக்கு செல்லவில்லை. அதைப்பற்றிப் பவித்ராவை தவிர வேறு யாரும் கவலைப் பட்டதாகவும் தெரியவில்லை.

 

மிக முக்கியமானது பணம் தானே! அது குறையின்றிக் கிடைத்ததில் அவன் வரமுடியாமல் போனது ஒன்றும் அவர்களுக்குக் குறையாகவே படவில்லை. சீரும் சிறப்புமாகத் திருமணத்தை முடித்திருந்தனர்.

 

கீதனுக்கும், தங்கையின் திருமணத்துக்குச் செல்ல முடியவில்லை என்பது வருத்தத்தைக் கொடுத்தாலும், எல்லாவற்றையும் விட முக்கியமானது எந்தக் குறையும் இல்லாமல் அவளின் திருமணம் நடப்பதுதான் என்றெண்ணி தன்னைத் தேற்றிக்கொண்டான்.

 

மிகப் பெரிய கடமையாக எண்ணியதில் ஒன்றை நல்லபடியாகவே முடித்து வைத்துவிட்டதில் அவன் மனம் பெரும் விடுதலை உணர்வை சுவாசிக்கத் தொடங்கியிருந்தது.

 

அந்தச் சுமை விலகியதாலோ என்னவோ, அவன் மனமும் உடலும் மனைவியை இன்னுமே நெருங்கியது. அவளையும் மெல்ல மெல்ல மாற்றிக் கொண்டிருந்தான்!

 

 

 

அன்று கீதனின் விசா அவன் கைக்கே வந்துவிட்டதில், பெரும் நிம்மதியாக உணர்ந்தான். இதற்காக அவன் பட்ட பாடுகள் எத்தனை? அனுபவித்த கஷ்டங்கள் எத்தனை?

 

அப்போது, “அத்தான்! எங்கே உங்கள் விசா? காட்டுங்கள் பார்ப்போம்..” என்றபடி கீர்த்தனனின் அருகில் வந்து தொப்பென்று அமர்ந்தான் சத்யன்.

 

அவன் கையிலிருந்த விசாவையும் பிடுங்கிப் பார்த்தான்.

 

இப்போதெல்லாம் அவனது தயக்கமும் கூட எங்கேயோ ஓடி மறைந்திருந்தது. சொல்லப்போனால் மித்ராவை விடக் கீர்த்தனனிடம் இன்னுமே நெருங்கியிருந்தான் சத்யன்.

 

அவன் அப்போது வருவான் என்பதை அறியாததில், “என்னடா? இன்று வேலை, படிப்பு எதுவும் இல்லையா? இங்கே வந்திருக்கிறாய்?” என்று கேட்டபடி, கீதனின் கஃ பேயை அவனிடம் நீட்டினாள் மித்ரா.

 

விசா எடுக்கப் போவதற்காக அவர்கள் இருவரும் அன்று விடுமுறை எடுத்திருந்தனர்.

 

“இன்றைக்கு எனக்கும் லீவ்.” என்றவன், கஃபேயை காட்டி, “எனக்குக்கா?” என்று கேட்டான்.

 

“உனக்கு எதற்கு இப்போது? கண்ட கண்ட நேரத்தில் கஃபே குடித்துப் பழகாதே என்று எத்தனை தடவை சொல்வது?”

 

error: Alert: Content selection is disabled!!