தனிமைத் துயர் தீராதோ 25 – 5

சத்யனோடு விளையாடிக்கொண்டு இருந்தாலும், அவ்வப்போது வீதியிலும், நாவிகேஷன் சொல்வதையும் அவதானித்தபடி வந்த கீர்த்தனன், “பார்க்கிங் ஏதாவது வந்தால் நிறுத்து மித்து. கொஞ்சம் கையைக் காலை அசைத்துவிட்டு போவோம்.இருந்தே வருவது சற்று அலுப்பாக இருக்கிறது.” என்றபடி நிமிர்ந்த போதுதான், அவன் பார்வையில் காரின் வேகம் பட்டது.

 

மணித்தியாலத்துக்கு நூற்றியெண்பதையும் தாண்டிக்கொண்டு செல்வதைக் கவனித்துத் துணுக்குற்றவன், சத்யன் வித்யா முன்னால் அவளைக் கண்டிக்க மனமற்று, “கொஞ்சம் வேகத்தைக் குறை மித்ரா!” என்றான் அடக்கப்பட்ட கோபத்தில்.

 

கண்ணாடி வழியே அவனைப் பார்த்து, “ஏன் தனா?” என்றாள் வேகத்தைக் குறைக்க மனமற்று. “என் கண்ட்ரோலில் தான் கார் இருக்கிறது.”

 

அவனோ அதே கண்ணாடி வழியாக அவளைப் பார்த்து முறைத்தான்.

 

முகம் வாட, வேகத்தைக் குறைத்துக்கொண்டாள் மித்ரா.

 

ஆனாலும், அவள் மெதுவாக வேகத்தை அதிகரிப்பதும் அவன் கண்ணாடி வழியே முறைப்பதைக் கண்டதும் வேகத்தைக் குறைப்பதும் என்று அவர்கள் இருவருக்கும் இடையில் மற்றவர்கள் இருவரும் அறியா வகையில் ஒரு பனிப்போர் ஒன்று நடந்துகொண்டே இருந்தது.

 

அடுத்து வந்த பார்க்கிங்கில் கார் நிற்க, சத்யனும் வித்யாவும் இயற்கை உபாதைகளைக் கழிக்கச் சென்றதும் “இதென்ன வேகம் மித்து?” என்று கடிந்தான் கீர்த்தனன்.

 

“எனக்கு வேகமாக ஓட நிரம்பவும் விருப்பம் தனா. எப்போதுமே நான் இப்படித்தான். எனக்கு இது பழக்கமும் கூட. அதனால் பயப்படாதீர்கள்!” என்று அவனைத் தேற்றினாள் அவன் மனையாள்!

 

“அடிதான்டி வாங்கப் போற நீ! இன்றைக்கு ஓடியதிலேயே எனக்கு உயிர் போகிறது. இதில் எப்போதும் இப்படித்தானாம்! இனி இப்படி ஓடினாய் என்று வை.. பிறகு கார் ஓடுவதையே நீ மறக்க வேண்டியதுதான்! நானும் வேகத்தைக் கூட்டாதே கூட்டாதே என்று கண்களால் சொல்கிறேன், நீயோ உன் இஷ்டப்படி ஓடுகிறாய்..” என்று ஆத்திரப்பட்டான் அவன்.

 

முகம் வாடிப்போக அமைதியாகிப்போனாள் அவள். மனம் மட்டும் சிணுங்கிக்கொண்டு நின்றது.

 

அதைக் கவனித்தவனுக்குக் கோபத்தோடு சேர்த்து சிரிப்பும் வந்தது. நல்லதுக்காக ஒன்றைச் சொன்னால் கேட்கமாட்டேன் என்கிறாளே!

 

அவளை நெருங்கி, “என்னம்மா இது? நம் எல்லோரினதும் நல்லதற்குத் தானே சொல்கிறேன்.” என்றான் அவன்.

 

அப்போதும் மனம் சமாதானம் ஆகாதபோதும், “ம்ம்.” என்று அவள் சொல்ல, “உனக்குக் கார் ஓட மிகவும் பிடிக்குமோ?” என்று கேட்டான் கீர்த்தனன்.

 

கண்களும் முகமும் ஆர்வத்தில் மின்ன, “அவ்வளவு பிடிக்கும்!” என்றாள் இப்போது அவன் முகம் பார்த்து.

 

“அப்போ என்னை?” குறும்போடு அவன் கேட்க, அவள் முகம் சட்டெனச் சிவந்தது.

 

பதில் சொல்லத் தைரியம் அற்றுப் பார்வையைத் திருப்பியவளிடம் இன்னும் நெருங்கி, “என்ன பதிலைக் காணோம்? பிடிக்காதா?” என்று அவள் மனதை அறிந்த கள்ளன் கேட்டான்.

 

“அப்படி நான் சொன்னேனா?” உடனேயே பறந்து வந்தது பதில் கேள்வி.

 

“அப்போ பிடிக்குமா?” கண்கள் சிரிக்கக் கேட்டான் அவன்.

 

ஆம் என்றுதான் அவள் மனம் கத்திச் சொன்னது. அதை வாய்விட்டுச் சொல்ல எது தடுக்கிறது? அவளுக்கே தெரியவில்லை! வெட்கமா? இல்லை அவனது வேட்கைப் பார்வையா?

 

சத்யனும் வித்யாவும் சற்றுத் தூரத்தில் வருவது தெரிய, அவளிடமிருந்து விலகி, “திறப்பைத் தா! இனி நான் ஓடுகிறேன்.” என்றான் கீதன்.

 

அதுவரை அவள் முகத்திலிருந்த மலர்ச்சி வடிய, “நானே ஓடுகிறேனே தனா..” என்றாள் கெஞ்சலாக.

 

“முடியாது! நீ சொல்பேச்சு கேட்கிறவள் இல்லை!” என்றான் அவன் தன் பிடியில் இருந்து இளகாது.

 

“ப்ளீஸ் தனா..” தலையைச் சரித்து, மூக்கை சுருக்கி, இதழ்களைக் குவித்து அவள் கெஞ்ச, தடம்புரண்டு அவள் காலடியில் விழுந்த மனமோ சம்மதிக்கத் தூண்டியது.

 

தன் தடுமாற்றத்தை மறைக்க முடியாமல் பார்வையை வேறுபுறம் திருப்பித் தலையை மட்டும் மறுப்பாக அசைத்தான்.

 

அங்கே தூரத்தில் வரும் தம்பி தங்கையரை திரும்பிப் பார்த்தாள் மித்ரா. சத்யன் அங்கு நின்ற ஒரு காரைக் காட்டி ஏதோ சொல்வதும் வித்யா பதிலுக்கு என்னவோ சொல்வதும் தெரிந்தது.

 

சட்டெனக் கீதனை நெருங்கி, அவன் தோள்கள் இரண்டையும் பற்றி, எம்பி அவன் கன்னத்தில் தன் இதழ்களை வேகமாகப் பதித்து மீட்டவள், “ப்ளீஸ் தனா! என் செல்லம்தானே.. நானே ஓட்டுகிறேனே..” என்றாள் கெஞ்சலாக.

 

error: Alert: Content selection is disabled!!