தனிமைத் துயர் தீராதோ 25 – 6

இனியும் மறுப்பான் கீதன்?!

 

அவன் தலை அதுபாட்டுக்குச் சம்மதமாக ஆட, இன்ப அதிர்ச்சியும் ஆனந்தமுமாகத் தடுமாறிப்போனான் அவன்!

 

“என்னடி இதெல்லாம்?” அவளின் முத்த யுத்தத்திலிருந்து முழுவதுமாக வெளிவராமல் கேட்டவனின் குரல் அவளிடம் கொஞ்சிக் கிறங்கியது.

 

அவளுக்குமே செய்த பிறகுதான் என்ன செய்தோம் என்று விளங்க, அதிர்ச்சியோடு ஆனந்தமும் கூடியது! அவளை அறியாமலே அவள் செய்த காரியம் அவளுக்கே அவள் மனதை தெள்ளத் தெளிவாகக் காட்டிவிட்டதே!

 

அது கொடுத்த துள்ளலில், “எதெல்லாம்?” என்று புருவங்கள் இரண்டையுமே உச்சி மேட்டுக்கு உயர்த்தி, மிதப்பாகக் கேட்டாள்.

 

அவளாக அவனிடம் வரவேண்டும் என்று காத்திருந்த தன் காத்திருப்புக்கு கிடைத்த பெரும் வெற்றியை இன்பமாக அனுபவித்தவன், அவர்களை நெருங்கிவிட்ட சத்யன் வித்யாவை கவனித்துவிட்டு, “நல்லாவே முன்னேறிட்டடி மித்து! என்னிடம் தனியாக மாட்டுவாய் தானே! அப்போ இருக்கு உனக்கு!.” என்று பேச்சோடு மட்டும் நிறுத்திக்கொண்டான்.

 

என்னவெல்லாம் செய்வான் என்கிற கற்பனையில் அவள் மனம் சிறகில்லாமல் வானில் பறக்கத் தொடங்கியது!

 

ஐரோப்பா பார்க்குக்குள் நுழைந்ததுமே கண்ணுக்கு எட்டியதில் எல்லாம் வித்யாவும் சத்யனும் ஏறத் தொடங்கினர். கீதனுக்கும் மித்ராவுக்கும் எதிலும் ஏறத் தோன்றவே இல்லை. ஒருவரின் கையோடு மற்றவரின் கையைக் கோர்த்தபடி, தோள்கள் ஒன்றோடு ஒன்று உரச அந்தச் சன நெரிசலுக்குள் நடப்பதே சொர்க்க சுகமாக இருந்தது.

 

அப்படி நடக்கையில், வெயிலுக்கு இதமாகத் தொளதொளப்பாக அவள் அணிந்திருந்த சட்டையைத் தாண்டிக்கொண்டு அவளுடைய உள்ளாடைப் பட்டி சற்றே வெளியே தெரிந்தது.

 

அதைக் கவனித்த கீர்த்தனன், “மித்து..!” என்று அழைத்து நடப்பதை நிறுத்தினான்.

 

அவள் என்ன என்பதாகத் திரும்பிப் பார்க்க, அவளது வலது தோள்பட்டையைக் கண்களால் காட்டி, தன் தோளைக் தொட்டுக் காட்டி, “பார்” என்றான் அவளிடம்.

 

என்ன சொல்கிறான் என்பதாகத் தலையைத் திருப்பித் தன்னுடைய வலப்பக்கத் தோளைப் பார்த்த மித்ராவின் முகம் கூச்சத்திலும் வெட்கத்திலும் சிவந்தது. வேகமாக உள்ளாடைப் பட்டியை போட்டிருந்த சட்டைக்குள் மறைத்துக் கொண்டாள்.

 

அவனைப் பார்க்கமுடியாமல் அவள் நிற்க, அருகில் வந்தவன், “நான் மட்டும்தான் பார்த்தேன். மற்றவர்கள் கவனித்து இருக்கமாட்டார்கள்.” என்றான் மென்குரலில்.

 

அவளின் சங்கடமும் வெட்கமும் அதை அவன் பார்த்துவிட்டான் என்பதில் தானே! ஒரு விஷயமே அல்லவே! அதை எப்படிச் சொல்வது?

 

“அல்..லது நான் பார்த்ததுதான் பிரச்சினையா?” என்று, அவளை அறிந்துகொண்டவனாக அவன் கேட்டபோது, அவளால் தலையை நிமிர்த்தவும் முடியவில்லை, பதில் சொல்லவும் இயலவில்லை.

 

உதட்டைக் கடித்தபடி அவள் நிற்க, “பெரிதாக என் கண்ணில் எதுவும் படவில்லை. அதனால் வா..” என்று கேலி இழையோடும் குரலில் சொன்னவன், மிருதுவான அவள் கரத்தை மென்மையாக பற்றி அழைத்துச் சென்றான்.

 

சத்யனும் வித்யாவும் உலக உருண்டைக்குள் புகுந்துவிட, அவர்கள் வரும்வரைக்கும் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தனர் இருவரும். அவர்களுக்குள் அழகான மௌனம் ஒன்று ஆசையாக உரையாடத் தொடங்கியிருந்தது.

 

அப்போது, சுட்டியான பெண்குழந்தை ஒன்றோடு வந்த தம்பதியர், இவர்களின் அருகே வந்தனர். கீர்த்தனன் புன்னகையோடு ஏறிட, “எங்கள் மூவரையும் ஓர் போட்டோ எடுத்துத்தர முடியுமா ?” என்று கேட்டான் அந்த ஆண்.

 

“நிச்சயமாக!” என்றவன், அவனது செல்லை வாங்கி அவர்கள் மூவரையும் வைத்துப் போட்டோக்களை எடுத்தான்.

 

தாயின் கையிலிருந்த அந்தத் துறுதுறு குழந்தை அவள் கையில் இருக்க மறுத்து நழுவிச் செல்ல செய்த சேட்டைகளை ரசித்தவன், “மித்து, அந்தக் குழந்தை செய்யும் சேட்டையைப் பாரேன்!” என்றான் மனைவியிடம்.

 

“ம்ம்.. நானும் அவளைத்தான் பார்த்துகொண்டு இருக்கிறேன் தனா. ஒரு நிமிடம் சும்மா இருக்கிறாளே இல்லை.” என்றாள் இவளும் அந்தக் குழந்தையையே ரசித்தபடி.

 

போட்டோ எடுத்துவிட்டு கீர்த்தனன் அவனது செல்லை கொடுக்க நன்றி சொல்லி வாங்கிய அவன், “உங்களையும் போட்டோ எடுத்து தரட்டுமா? நீங்களும் அழகான ஜோடிதான்!” என்றான் நட்போடு.

 

தான் செய்த உதவிக்குப் பரிகாரமாக அவன் அதைச் செய்ய நினைப்பதை உணர்ந்து, சம்மதித்தான் கீர்த்தனன். “வா..!” என்று மனைவியை அழைத்துத் தன்னருகிருள் நிறுத்திக்கொண்டு, தன் செல்லை அவனிடம் நீட்டினான்.

 

அவள் தோள்களை வளைத்தபடி, இடையை வளைத்தபடி, கையோடு கை கோர்த்தபடி என்று பல கோணங்களில் போட்டோக்கள் எடுத்த அந்த மனிதன், இருவரின் முகத்திலும் தெரிந்த பூரிப்பை கவனித்துவிட்டு, “ஒருவரை ஒருவர் முத்தமிட்டபடி நில்லுங்களேன். அந்த ‘போஸ்’சில் மிக அழகாக இருப்பீர்கள்.” என்று கேட்டான்.

 

error: Alert: Content selection is disabled!!