மித்ரவுக்கோ முகம் செங்கொழுந்தாகச் சிவந்துவிட, “என்ன கொடுக்கட்டுமா?” என்று அவளைச் சீண்டினான் கீர்த்தனன்.
“ஐயோ தனா! சும்மா இருங்கள்..” என்றாள் அவள்.
“என் மனைவி மறுக்கிறாள்.” என்று சொல்லிச் சிரித்த கீர்த்தனன், அவர்களின் சுட்டிப் பெண்ணைத் தான் வாங்கி, “எங்களை இவளோடு ஒரு போட்டோ எடுத்துத் தாருங்கள். அது போதும்.” என்றான்.
மித்ராவும் அதற்கு ஆவல் காட்ட, “அதற்கென்ன..” என்றான் அதன் தந்தை.
தன்னைத் தூக்கி வைத்திருக்கும் புது மனிதனை தன் நீல நிறக் கருவண்டு விழிகளால் அந்தக் குட்டிப்பெண் பார்க்க, அவளை ஒரு கையிலும் மனைவியை இன்னொரு கையாளும் அணைத்துப் பிடித்துக்கொண்டான் கீர்த்தனன்.
அழகாய் போட்டோ எடுத்துவிட்டு செல்லை கீதனிடம் நீட்டியபடி, “வெகு விரைவில் உங்கள் சொந்தக் குழந்தையுடன் போட்டோ எடுக்க எங்களின் அன்பான வாழ்த்துக்கள்!” என்றான் அந்த மனிதன்.
மனைவியைத் திரும்பிப் பார்த்து அவளின் விழிகளோடு தன் விழிகளைக் கலந்து, “நிச்சயமாக அடுத்த வருடமே சொந்தக் குழந்தையோடு போட்டோ எடுத்துக்கொள்வோம்!” என்று, அந்த மனிதனின் கேள்விக்குப் பதிலையும் மனைவிக்குத் தன் காதலையும் தெரிவித்தான் அந்தக் காதல் கணவன்!
மித்ராவுக்கோ நெஞ்சமெல்லாம் பூஞ்சிதறல்கள்! பின்னே, காதலை எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டான்!
மலர்ந்த விழிகளால் அவள் அவனைப் பார்க்க, “நான் சொன்னது சரிதானே மித்து..” என்று நேசம் பொங்கக் கேட்டான் கீதன்.
“ம்ம்…” அவன் முகம் பாராமல் ஒப்பினாள் அவன் காதலி!
ஆனாலும், அன்றே மித்ராவின் கீதனாக மாறிவிடவில்லை அவன்! அவள் விழிகள் கேள்வியையும் நாணத்தையும் தாங்கி அவனை அவ்வப்போது பார்த்தாலும், அவர்களின் இணைவுக்காக ஒரு நாளை குறித்தான் கீர்த்தனன்.
அது மித்ராவின் பிறந்தநாள்!
இன்பத்தின் உச்சியை, சொர்க்கத்தின் திறவுகோலை, இல்லறத்தின் இனிமையை, கணவனின் கனிவை, நேசத்தை, பாசத்தை என்று அனைத்தையும் அவளுக்கு உணர்த்திய நாளாக விடியக் காத்திருந்தது அவளின் பிறந்தநாள்!

