தனிமைத் துயர் தீராதோ 26 – 2

கட்டிலில் கிடந்த சேலையை மின்னலென எடுத்து தன்மேல் அவள் போட்டுக்கொள்ள, மெல்லத் தன்னை அவளின் ஆட்சியிலிருந்து மீட்டு அவள் அருகில் வந்தவன் அவளது கைபேசியை வாங்கிப் பார்த்தான்.

 

‘யு டூப்’ பில் சேலை கட்டிக்கொண்டிருந்தார்கள். பக் என்று அவன் சிரித்துவிடவும், “சிரிக்காதீர்கள் தனா! எனக்குச் சேலை கட்டத் தெரியாது!” என்றாள் மித்ரா குங்குமமாகச் சிவந்துவிட்ட முகத்தோடு.

 

“அதற்கு ஏன் ‘யு டூப்’பிடம் போனாய்? என்னிடம் வந்திருக்க நான் கட்டி விட்டிருப்பேனே..” என்றவன், அவளின் வெற்றிடையைப் பற்றித் தன்னருகில் இழுத்தான்.

 

அவள் தோள்களில் சுற்றிக் கிடந்த சேலையை அவன் கைப்பற்ற அவளோ சட்டென அவனுக்கு முதுகாட்டித் திரும்பிக் கொண்டாள்.

 

“இப்படி நின்றால் எப்படிச் சேலை கட்டுவதாம்?” வெண்மையில் பளிச்சிட்ட முதுகை வருடிக்கொண்டே அவன் கேட்க, அவளின் நிலைதான் மிகவும் மோசமாய்ப் போயிற்று!

 

தேகமெங்கும் நடுக்கமோட நின்றவளை மெல்லத் தன் புறமாகத் திருப்பினான்.

அவள் திரும்ப மறுக்க, “திரும்பி ஆடாமல் நில் மித்து! எங்கிருந்து ஆரம்பிப்பது என்று வியூ பார்க்க வேண்டாமா?” என்றவனின் குரலில் குறும்பை விடத் தாபமே மேலோங்கி நின்றது.

 

அப்போதே அவளின் ரகசியங்களை, அது பதுக்கி வைத்திருக்கும் இன்பங்களை அறிந்துவிடத் துடித்தது அவனது வாலிபவயது! அதே துடிப்பு அவளுக்குள்ளும் எழுந்ததில், உணர்வுகளின் ஆழிப் பேரலைக்குள் சிக்குண்டவள், அதைத் தாங்கிக்கொள்ள முடியாமல், “ப்ளீஸ் தனா..” என்றாள் குரல் நடுங்க. உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டுவர இயலாமல் துடித்தவளின் கண்ணோரங்களில் மெல்லிய நீ கசிவு!

 

அந்த ப்ளீஸ் எதற்காக? என்று புரியாத போதும், தங்கள் இருவரினதும் பலகீனமான அந்த நிலையை உணர்ந்து கொண்டவன் தன்னைக் கட்டுப்படுத்த முயன்றபடி, அது தன்னால் இனியும் முடியவே முடியாது என்பதை அறிந்தபடி, அவள் தேகத்தில் தன் விளையாட்டுக்களைச் சின்னச் சின்னதாக அரங்கேற்றியபடி, அவளை “தனா.. ச்சு! சும்மாயிருங்கள்..” என்று சிணுங்க வைத்தபடி, அவளுக்கு அழகாகச் சேலையைக் கட்டிவிட்டான்.

 

அவன் கொடுத்த கழுத்தாரத்தையும் அணிந்து, அவளின் அடர்ந்த கரிய சுருண்ட குழல்களில் கொஞ்சத்தைச் சின்னக் கிளிப்பில் அடக்கி விரித்துவிட்டாள். நெற்றியில் சின்னதாய் பொட்டிட்டு, இதழ்களில் பிங்க் வண்ண உதட்டுச் சாயத்தையும் மெலிதாகத் தீற்றிக்கொண்டாள்.

 

தன் கைப்பையையும் எடுத்துக்கொண்டு வெளியே வந்தவள், அப்போதுதான் அவனும் வேட்டி சட்டையில் இருப்பதைக் கவனித்தாள். அதற்கு முன் எதையாவது கவனிக்கும் நிலையில் அவளை அவன் விட்டால் தானே!

 

ஆச்சரியம் மேலோங்க, “நாம் எங்கே போகிறோம் தனா?” என்று கேட்டவளின் அழகை எப்போதும்போல் விழிகளால் விழுங்கியவன் மறந்தும் அவளருகில் வரவில்லை.

 

“வந்தால் தெரிந்துவிடப் போகிறது!” என்று அவன் சொன்னபோது, மித்ராவின் கைபேசிக்கு அழைப்பு வர, தம்பி தங்கையாய் இருக்கும் என்று எண்ணியபடி எடுத்தவளின் நினைப்பை பொய்யாக்காமல் மறுபக்கத்தில் இருந்து இருவரும் ஒரே நேரத்தில் அவளுக்குப் பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்தார்கள்.

 

உள்ளம் மகிழ அதற்கு நன்றி சொன்னவளிடம், “நாங்கள் தயாராகி விட்டோம் அக்கா. நீங்கள் தயாரா?” என்று சத்யன் கேட்டக, தனாவைக் கேள்வியாகப் பார்த்தாள் மித்ரா.

 

அவளிடம் இருந்து செல்லை வாங்கி, “இன்னும் பத்து நிமிடத்தில் அங்கிருப்போம். வெளியே வந்து நில்லுங்கள்.” என்றுவிட்டு வைத்தான் அவன்.

 

எல்லோருமாக எங்கே போகிறோம்? என்ன நடக்கிறது? என்கிற கேள்விகள் எழுந்தாலும், என்றுமில்லாது தன் பிறந்தநாளை தான் கொண்டாடுகிறோம் என்கிற மகிழ்விலும், கணவன் அவளிடம் காட்டிய நெருக்கம் கொடுத்த தித்திப்பிலும், இரவுக்கு என்று அவன் கொடுத்த குறிப்பில் உண்டான இன்பப் படபடப்பிலும் அமைதியாகவே வந்தாள் மித்ரா.

 

சத்யன் வித்யாவையும் ஏற்றிக்கொண்ட கார் எங்கோ விரைந்தது.

 

“எங்கேத்தான் போகிறோம்?” என்று வித்யா கேட்டதில், அவர்களுக்கும் எதுவும் தெரியாது என்பதைப் புரிந்துகொண்டாள் மித்ரா.

 

“முக்கியமான ஒரு இடத்துக்கு.” என்று, அவளிடமும் எதையும் சொல்லவில்லை கீர்த்தனன்.

 

கிட்டத்தட்ட ஒருமணி நேரப் பயணத்துக்குப் பிறகு கீர்த்தனன் காரை நிறுத்திய இடம் சுவற்றா அம்மன் கோவில். இங்கே எதற்கு? என்பதாக மித்ரா அவனைப் பார்க்க, அவளின் கரம் பற்றி, “வா..” என்று அழைத்துச் சென்றான். அவர்களைத் தொடர்ந்தனர் சத்யனும் வித்யாவும்.

 

அங்கே ஐயரும், இன்னும் ஒருசிலரும் இவர்களுக்காகத் தயாராக நின்றார்கள்.

 

கீர்த்தனன் முதலே அனைத்தையும் தயார் செய்து வைத்திருந்ததின் படி, அவர்கள் சென்றதும் விசேச பூஜை ஆரம்பிக்கப்பட்டு, ஐயர் மந்திரம் ஓதி தாலிக்கொடியை கீர்த்தனனிடம் நீட்டிய பொழுதில், அதைச் சற்றும் எதிர்பாராத மித்ராவின் உள்ளம் பொங்கித் தளும்பிற்று!

 

ஏனோ.. இதையெல்லாம் அவள் யோசித்ததே இல்லை. யோசிக்கத் தெரிந்ததில்லை என்பதுதான் உண்மை! ஆனால், அவளுக்கும் சேர்த்து யோசித்து, அவள் கழுத்துக்கு ஒரு தாலியை தர நினைத்தவனின் பேரன்பில் உருகியே போனாள் மித்ரா. சந்தோச மிகுதியில் கண்ணீரை உகுத்தன அவள் விழிகள்!

 

எல்லோரும் மலர்களைத் தூவி வாழ்த்த, அவள் விழிகளோடு தன் விழிகளைக் கலந்தபடி, அந்தப் பொன்தாலியை அவள் கழுத்தில் அணிவித்தான் மித்ராவின் கீதனாகக் காத்திருந்தவன்!

 

பிறந்தநாள் என்று அவன் கொடுத்த சேலையும், அதைக் கட்டிவிடுகிறேன் பேர்வழி என்று அவன் போட்ட கூத்தும் அந்தப் பிறந்தநாளை மறக்க முடியாத நாளாக மாற்றி விட்டிருந்தது. அதை எல்லாவற்றையும் தாண்டிய மகிழ்ச்சியை அவன் கைத்தாலி அவளுக்கு வழங்கியபோது, உலகிலேயே அதிர்ஷ்டம் செய்தவளாகத் தன்னை உணர்ந்தாள் மித்ரா.

 

இவ்வளவு நாட்களும் அவள் பட்ட கஷ்டங்கள் கூட இந்தச் சொர்க்க சுகத்தை அனுபவிக்கத் தானோ என்றெண்ணி மகிழ்ந்தாள்.

 

error: Alert: Content selection is disabled!!