கணவனின் மடியிலேயே உறங்கியிருந்தாள் மித்ரா. அவளின் தலையை இதமாக வருடிக்கொண்டிருந்த கீர்த்தனனின் செல் இசைக்க, உறக்கம் கெட்டுவிடாத வகையில் அவளை சோபாவில் கிடத்திவிட்டு அங்கிருந்து அகன்றான்.
தன் பேச்சு மனைவியின் உறக்கத்தை கெடுக்காத தூரம் சென்றதும் அழைப்பை ஏற்று, “சொல்லு கவி.” என்றான்.
“எப்போ அண்ணா என்னைப் பார்க்க வரப்போகிறாய்?” எடுத்த எடுப்பிலேயே சற்றே எரிச்சல் மண்டிய குரலில் வினவினாள் கவிதா.
அவள் சுவிஸ் வந்து இரண்டு மாதங்களாகியிருந்தது. அப்படியிருந்தும் தமையன் இன்னும் தன்னைப் பார்க்க வரவில்லை என்பது மிகுந்த கோபத்தைக் கொடுத்திருந்தது அவளுக்கு.
அங்கே சோபாவுக்குள் சோர்வோடு சுருண்டு கிடந்த மித்ராவை திரும்பிப் பார்த்துவிட்டு, “வருகிறேன் கவி. அதற்கு முதலில் உன் அண்ணி கொஞ்சம் தேறட்டும். அவளுக்கு எப்போது பார்த்தாலும் தலை சுற்றலும் வாந்தியும் தான்.” என்றான் கீர்த்தனன்.
“அதெல்லாம் கர்ப்பவதியான பெண்களுக்கு இருப்பது இயற்கைதான் அண்ணா. சும்மா சாட்டுச் சொல்லவேண்டும் என்பதற்காக சொல்லாதே. அல்லது என்னைப் பார்க்க நீ வருவதில் உன் மனைவிக்கு உடன்பாடு இல்லையோ..?” சந்தேகக் குரலில் அவள் கேட்க,
“அதென்ன ‘உன் மனைவி’ என்கிறாய்? முதலில் அவளை முறையாக அண்ணி என்று சொல்லப் பழகு!” என்று கடிந்துவிட்டு, “அவள் எதற்கு தடுக்கவேண்டும்? எனக்குத்தான் அவளை விட்டுவிட்டு வர முடியவில்லை. கொஞ்ச நாட்கள் பொறு. பிறகு வருகிறேன்.” என்றான் பொறுமையாக.
“அந்தக் கொஞ்ச நாட்கள் எப்போ வரை அண்ணா? குழந்தை பிறக்கும் வரைக்குமா? பிறகு கைக்குழந்தை என்று சாட்டுச் சொல்வாய் போல. கொஞ்சமாவது என் மேல் அன்பு இருந்தால் இப்படிச் சொல்வாயா நீ? எனக்குத்தான் என் அண்ணாவை பார்த்து பல வருடங்கள் ஆச்சே என்று ஏக்கமாக இருக்கிறது. உனக்கு எங்கே அதெல்லாம் இருக்கப் போகிறது?” என்று புரிந்துவிட்டு அழைப்பைத் துண்டித்தாள் கவிதா.
மனைவியின் அருகில் வந்து அமர்ந்தவனின் மனமோ கனத்துப்போய்க் கிடந்தது.
சோர்வோடு கிடந்தவள் களைப்புற்றிருந்த விழிகளைத் திறந்து, “யார் கீதன்?” என்று கேட்டுவிட்டு, மீண்டும் அவன் மடியில் தன் தலையை சாய்த்துக்கொண்டாள் மித்ரா.
“கவிதா..” என்றான் சுருக்கமாக.
“என்னவாம்? நீங்கள் எப்போது அவளைப் பார்க்கப் போகிறீர்கள்?”
“அவள் கதையை விட்டுவிட்டு உனக்கு இப்போது எப்படி இருக்கிறது என்று சொல்? ஏதாவது குடிக்கிறாயா? அல்லது சாப்பிடத் தரட்டுமா?”
சற்று முன்னர்தான் குடல் வெளியே வந்துவிடுமோ என்கிற அளவில் வாந்தி எடுத்துவிட்டு வந்து படுத்திருந்தாள்.
“இல்லைப்பா. ஒன்றும் வேண்டாம். களைப்பாக இருக்கிறது. கொஞ்சம் படுத்திருக்கப் போகிறேன்.” என்றவள், “நான் இருந்துகொள்வேன் கீதன். நீங்கள் போய் பார்த்துவிட்டு வாருங்கள். அவளும்தான் எத்தனை தடவைகள் கேட்டுவிட்டாள். பாவம்தானே.” என்று மீண்டும் கவியின் விடயத்துக்கு வந்தாள்.
அது அவனுக்கும் விளங்காமல் இல்லைதான். ஆனால், இப்படி வாந்தி, தலை சுற்றல், சோர்வு, மெல்லிய மயக்கம் என்று தாய்மையின் அத்தனை அவதிகளையும் அனுபவிக்கும் மனைவியை கணமும் பிரிய மனமில்லை அவனுக்கு. அவளையும் அழைத்துக்கொண்டு போகவும் முடியவில்லை. முதல் குழந்தை, மூன்று மாதங்களே ஆன நிலையில், ஏதாவது நடந்துவிட்டால்?
அன்று தேன்நிலவு என்கிற பெயரில் பத்து நாட்கள் ஸ்பெயின் சென்றுவந்து ஆறு மாதங்களாகியிருந்தது. இந்த ஆறு மாதங்களும் மின்னெலென ஓடி மறைந்தன என்றுதான் சொல்லவேண்டும்.
அவ்வளவு நேசம், அத்தனை காதல், அளவிட முடியா அன்பு, ஒருவருக்கொருவர் அனுசரணை என்று அவர்களின் இல்லறம் நல்லறமாக கழிய, அந்த இனிமையான தாம்பத்யத்தின் பரிசாக மித்ரா கருவுற்றாள்.
அதை அறிந்தபோது அந்த வானையே வசப்படுத்திவிட்டதாக உணர்ந்தான் கீர்த்தனன். அவ்வளவு மகிழ்ச்சி! அப்படியொரு பெருமை! ஒருவித கர்வம்!
அவனது சந்ததி தளைக்கிறதே!
“என்னப்பா? என்ன யோசிக்கிறீர்கள்?” என்றவளின் பேச்சில் தன் நினைவுகளில் இருந்து மீண்டு, “கொஞ்ச நாட்கள் போகட்டும்.” என்றான்.
அவள் என்னவோ திரும்பச் சொல்லத் தொடங்கவும், “அதைப்பற்றி பிறகு பேசலாம். நீ கொஞ்சநேரம் அமைதியாகத் தூங்கு.” என்றான் அழுத்தமாக.
“ம்ம்..” என்றவளும், இருந்த சோர்வில் கண்களை மூடிக்கொள்ள, மெல்லத் தட்டிக்கொடுத்தான் கீர்த்தனன்.
நன்றாக உறங்கிவிட்டாள் என்று தெரிந்ததும் எழுந்துசென்று ஒரு போர்வையை எடுத்துவந்து இதமாகப் போர்த்திவிட்டு, அவளின் நாவுக்குப் பிடித்த விதமாக சமையலைக் கவனித்தான்.
நன்கு உறங்கி எழுந்தவளின் முகம் தெளிந்திருந்தது. “குளித்துவிட்டு வா சாப்பிடலாம்.” என்றான் கனிவோடு.
“ஊட்டிவிடுவீர்களா?” விழிகளில் ஆர்வம் மின்னக் கேட்டாள்.
சிரிப்போடு அவளின் மூக்கைப் பிடித்து ஆட்டினான் கீர்த்தனன். “என்னவோ இதற்கு முதலெல்லாம் நீயே சாப்பிட்டதுபோல் கேட்கிறாயே. கடைசியாக உன் கையால் எப்போது உண்டாய்?” என்று கேட்டான் அவன்.
புருவங்களை சுருக்கி யோசித்துவிட்டு, “நினைவில்லை..” என்றாள் செம்பவள இதழ்களை பிதுக்கி.
“பிறகென்ன? போய் குளித்துவிட்டு வா..” என்றவன், அவள் வரவும் அவளுக்கான உணவோடு தயாராக இருந்தான்.
அவளுக்கும் ஊட்டி அவனும் உண்டு முடித்தபோது, “வெளியே சும்மா நடந்துவிட்டு வருவோமா கீதன்?” என்று கேட்டாள் மித்ரா.
“அடிதான் வாங்கப் போகிறாய்! கொஞ்சநேரம் நின்றாலே தலை சுற்றுகிறது என்கிறாய், இதில் நடை கேட்கிறதா உனக்கு?” என்றவன் பாத்திரங்களை கழுவ ஆரம்பிக்க, “இதையாவது நான் செய்கிறேனே..” என்றாள் அவள்.
“நீ ஒன்றும் செய்ய வேண்டாம். போய் ஓய்வாக அமர்ந்துகொள்.” என்றான் அவன்.

