அவள் தன்னைச் சமாளிக்கச் செய்த செயலில் உள்ளம் கொள்ளை போக, “என்ன செய்வது என்று பிறகு சொல்கிறேன் அர்ஜூன்.” என்றுவிட்டு செல்லை அணைத்தவன், மனைவியையும் சேர்த்தணைத்தான்.
“உன்னை எத்தனை தடவை சொல்வது? இப்படித் துள்ளாதே கவனமாக இரு என்று. எதைச் சொன்னாலும் கேட்க மாட்டாயா?” என்று வார்த்தைகள் கடிந்தாலும் உதடுகள் முகமெங்கும் ஊர்கோலம் போனது.
அவன் கைகளில் நெகிழ்ந்தபடி, “ப்ளீஸ் கீதன். வீடு போய்ப் பார்க்கலாம்பா. பிடித்திருந்தால் உடனேயே வாங்குவோம்.” என்றாள் கெஞ்சலாக.
“ஏன் இவ்வளவு அவசரம் மித்து? குழந்தை பிறந்த பிறகு ஆறுதலாக நல்ல வீடாக பார்க்கலாமே..” என்றான் மனைவி பிள்ளைமேல் அக்கறை உள்ள கணவனாக.
“ம்ஹூம்! இப்போதே வாங்குவோம்! ஹாஸ்பிட்டலில் இருந்து வரும்போது நம் பிள்ளை சொந்த வீட்டுக்குத்தான் வரவேண்டும் கீதன். அவன் வீட்டில்தான் அவன் பாதம் முதன் முதலில் படவேண்டும்.” என்றவளின் விழிகளில் கண்ணீர்! குரலிலோ ஒருவித பிடிவாதம்.
பன்னிரண்டு வயதில் அத்தனை உறவுகள் இருந்தும் அனாதையாக்கப்ப்பட்டவளின், எத்தனையோ தடவைகள் ‘இந்த வீட்டுக்கு நீ சுமை’ என்று தூக்கியெறியப்பட்டவளின், அந்த வீட்டிலேயே பெற்றவர்களுடன் இருந்துவிட வேண்டும் என்பதற்காக ஒரு வேலைக்காரியை போன்று வாழ்ந்தவளின் உள்ளக் கதறலை முழுமையாக அறியாதவனோ மனைவியின் பிடிவாதத்தை சற்றே வியப்போடு நோக்கினான்.
அதோடு அவள் விழிகளை நனைத்த கண்ணீரைத் தன் விரல்கொண்டு துடைத்து, “ஹேய்! இதென்ன கண்ணீர்? எனக்கு இதுதான் விருப்பம் கீதன் என்றால் செய்துவிட்டுப் போகப் போகிறேன். உனக்காக எதுவும் செய்வான் உன் கணவன் என்று தெரியாதா?” என்று கடிந்தான் அவன். “இப்போ என்ன? நாம் வீடு வாங்க வேண்டும். நம் பிள்ளை நம் சொந்த வீட்டுக்குத்தான் வரவேண்டும். அவ்வளவுதானே?” என்று கேட்டான்.
வேக வேகமாக ஆம் என்பதாகத் தலையசைத்தாள் மித்ரா. உடனேயே அர்ஜூனுக்கு அழைத்து, அந்த வீட்டை பார்ப்பதற்கு நேரத்தை குறிக்கச் சொன்னான் கீர்த்தனன்.
“நன்றி கீதன்.” என்று எம்பி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள் அவள்.
“சின்ன வயதில் நிரம்பவும் கஷ்டப்பட்டாயா?” அவளைத் தன்னருகில் அமர்த்திக்கொண்டு கேட்டான் அவன்.
திடீரென்று அவன் அப்படிக் கேட்டதும் அவனைப் பார்த்து விழித்தாள் மித்ரா. “ஏன்.. அப்..படிக் கேட்கிறீர்கள்?” வார்த்தைகள் தடுமாற்றத்துடன் வந்தன.
“இல்லாவிட்டால் இந்தக் கண்ணீருக்கும் பிடிவாதத்துக்கும் அவசியம் இல்லையே! என் மனைவி அழுது முதன் முறையாகப் பார்க்கிறேன்.”
உண்மைதான்! அவனை மணந்த நாள்தொட்டு அவள் அறிந்தவை அத்தனையும் சந்தோசம், மகிழ்ச்சி, இன்பம், காதல், நேசம், பாசம், அன்பு இவை மட்டும் தான்!
ஆனால், அதற்கு முன்னால்? நினைக்கவே நெஞ்சு வெடிக்கும் போலிருந்தது. அத்தனையையும் அவனிடம் சொல்லி, அவன் மடியில் தலை புதைத்து ஒருமுறை கதறித் தீர்த்துவிட்டால் அவள் பட்ட அத்தனை காயங்களும் ஆறிவிடும் தான். ஆனால், அதன் பிறகு?
தாயையும் தந்தையையும் அறவே தூக்கி எறிந்து விடுவான். சத்தி வித்தியை அந்தப் பக்கம் போகவே விடமாட்டான். அவளையும் தான்! அப்படி பெற்ற தாயை அநாதரவாக விட்டுவிட அவளால் முடியாது!
முன்னராவது அன்னை இப்படி நடந்து கொண்டாரே என்கிற ஆதங்கம் மனதில் இருந்தது. இப்போது கணவனின் முழு அன்பில் திளைத்து வாழ்கிறவளுக்கு, கட்டிய கணவனின் துணையும், அன்பும், ஒத்துழைப்பும் இல்லையேல் ஒரு பெண்ணின் நிலை என்ன என்று யோசிக்கையில் அன்னைபரிதாபத்துக்கு உரிய நபரே என்று தோன்றியது.
கணவரின் அனுசரணையும் இன்றி, பெற்ற பிள்ளைகளும் கைவிட்ட நிலையில் வயதான காலத்தில் அவரின் நிலை என்ன?
யாருமற்ற அனாதைபோன்று அவள் அனுபவித்த அதே நரகவாழ்க்கையை அவளால் எப்படி அன்னைக்கு வழங்க முடியும்? தன்னால் தாய் காயப்பட்டுவிடக் கூடாது என்பதாலும் மௌனியாகிப்போனாள் மித்ரா.
ஆனால், அன்னைக்காக அன்னைக்காக என்று அவள் காத்த இந்த மௌனம் பின்னாளில் சூறாவளியாக மாறி அவளைச் சுழற்றி அடிக்கப் போவதை அன்று அறிந்திருக்கவில்லை மித்ரா.
தான் வாய்விட்டுக் கேட்டும் அமைதிகாக்கும் மனைவியின் செயலில் கோபம் எழுந்தது கீர்த்தனனுக்கு. இது புதிதல்ல அவனுக்கு. இப்படி ஏதாவது பேச்சுவாக்கில் அவளின் இறந்தகாலம் பற்றிய பேச்சு வந்தால், அதன் திசையை மாற்றிவிடுவாள் அல்லது இன்றுபோல் மௌனியாகிவிடுவாள்.
அது கொடுத்த சினத்தில், “அப்படி என்னதான் நடந்தது என்று சொல் மித்ரா?” என்றான் அழுத்தமான குரலில்.
திடுக்கிட்டுப்போய் திரும்பிப் பார்த்தாள். மளுக்கென்று விழிகளை நீர் சூழ்ந்தது.
“ஹேய் என்ன?” என்று அவன் கேட்க, “என்மேல் கோபப்படாதீர்கள் கீதன்..” என்று அவள் சொல்லி முடிக்க முதலே வெடித்த விம்மலோடு அவன்தோளிலேயே சாய்ந்தாள் அவள்.
“பின்னே என்னம்மா? என்ன நடந்தது என்று சொல்லாமல் மனதுக்குள்ளேயே வைத்துக் கலங்கினால் நான் என்ன செய்யட்டும்?” என்றான் கீர்த்தனன், அவளின் மனத்துயரை துடைக்கமுடியா இயலாமையோடு.
“நடந்தவைகளை நினைக்கவே எனக்குப் பிடிக்கவில்லை கீதன். அதோடு அதெல்லாம் முடிந்து போனவை. இந்த நிமிடம் நான் மிக மிக சந்தோசமாக இருக்கிறேன். அதற்குக் காரணம் நீங்கள். என் வாழ்க்கையில் நீங்கள் வந்தது எந்தப் பிறவியிலோ நான் செய்த புண்ணியம். இந்த சந்தோசத்தையும் நிறைவான வாழ்க்கையையும் பழையதை பேசி கெடுத்துக்கொள்ள மனமில்லை கீதன். அதோடு நான் மறக்க நினைப்பவைகளை திரும்பவும் நினைவு படுத்துவானேன்?” என்று அவள் சொன்னபோது, அது உண்மைதானே என்றுதான் அவனுக்கும் தோன்றியது.

