தனிமைத் துயர் தீராதோ 27 – 4

ஆனாலும், ஒரு கணவனாக மனையவளின் இறந்தகாலம் எப்படி இருந்தது என்பதை அறிந்துகொள்ளவும் விரும்பினான்.

 

அதற்கு உகந்த நேரம் இதுவல்ல என்று தீர்மானித்து, “சரி விடு! எப்போது உனக்கு சொல்லத் தோன்றுகிறதோ அப்போது சொல். இப்போது இந்த அழுகையை நிற்பாட்டு! பார்க்கவே சகிக்கவில்லை.” என்றான் வேண்டும் என்றே.

 

கன்னங்களை நனைத்த கண்ணீரோடு அவள் புன்னகைக்க, “அத்தான்..” என்றபடி அங்கே வந்தான் சத்யன்.

 

இப்போதெல்லாம் அவனுக்கு ‘அக்கா’ என்பது மறந்து எல்லாவற்றுக்கும் ‘அத்தான்’ தான் வேண்டும் என்று எண்ணியபடி கண்களை துடைத்துக்கொண்டாள் மித்ரா.

 

“இப்படியே வேலைக்குப் போகாமல் இன்னும் எத்தனை நாட்களுக்கு அக்காவைக் காவல் காத்துக்கொண்டு இருப்பதாக உத்தேசம்?” என்று கேலிக்குரலில் கேட்டான் சத்யன்.

 

“என் புருஷன் என்னைக் காவல் காக்கிறார். இதிலே உனக்கு என்னடா பிரச்சனை?” என்று கணவனுக்காக தம்பியிடம் கேள்விகேட்டாள் தமக்கை.

 

“எனக்கு ஒன்றுமில்லை. உனக்காகத்தான் கேட்டேன். அத்தானின் வேலை வேறு புதிது. இப்படி வேலைக்கு போகாமல் அவர் வீட்டிலேயே நிற்க, ‘நீ நிரந்தரமாகவே வீட்டில் இரு ராசா’ என்று அவர்கள் அனுப்பிவைத்தால் என்னாகும் என்கிற அக்கறை தான்.” என்றான் அவனும்.

 

கீர்த்தனன் இப்போது புதிதாக நியு சிட்டியில் வேலைக்கு சேர்ந்திருந்தான். அந்தக் கிளையின் வருடார்ந்த வரிக் கணக்குவழக்குகளை மித்ராதான் பார்த்துவந்தாள். பலவருடப் பரீட்சயத்தில் அங்கே எதுவும் வேலை இருக்கிறதா என்று அவள் விசாரிக்க, அதன் நிர்வாகியும் நம்பகமான ஒருவரை வேலைக்கு தேடிக்கொண்டு இருப்பது தெரியவர. அந்த இடத்துக்கு கீர்த்தனன் நியமிக்கப் பட்டான்.

 

கவிதாவின் திருமணத்துக்காக பட்ட கடனை தீர்ப்பதற்காக கணவன் அதிகநேரம் வேலை செய்வதை எண்ணி வருந்தியவளுக்கு, அவனுக்கு நல்ல சம்பளத்தில் நல்ல வேலை கிடைத்துவிட்டதில் பெரும் மகிழ்ச்சி!

 

அங்கே கீர்த்தனன் முறையான விடுமுறை எடுத்துத்தான் நிற்கிறான் என்பதால் அவன் சொன்னதுபோல் நடபதற்கு வாய்ப்பே இல்லை என்பதை சத்தியனே அறிவான். ஆனாலும் அத்தானோடு வம்பு வளர்க்க அவனுக்கு இது ஒரு சாட்டு.

 

“வேலை போனால் என்னடா? உன் அக்கா எனக்கு ஒருவேளைக் காஞ்சி ஊற்ற மாட்டாளா? அல்லது நீதான் உழைத்து செலவுக்குக் காசு தரமாட்டாயா?” என்றான் கீர்த்தனனும்.

 

தமக்கையின் முகத்தில் தெரிந்த மலர்ச்சியும், புன்னகையும் மனநிறைவைக் கொடுக்க, “என் அக்காவை சந்தோசமாகப் பார்த்துக்கொள்ளும் என் அத்தான் கேட்டால் உயிரையும் தருவேன் அத்தான். உழைத்துக் காசா தரமாட்டேன்.” என்றான் சத்யன் திடீரென உணர்ச்சிவசபட்ட குரலில்.

 

“டேய் என்னடா இது? ஒரு கேலிப்பேச்சுக்கு இப்படி எல்லாமா பேசுவாய்..” என்ற கீர்த்தனன் அவன் வயிற்றில் செல்லமாகக் குத்தினான்.

 

குத்திய அவன் கையை தன் இரண்டு கைகளாலும் பற்றி, “மெய்யாகவே உங்களுக்காக நான் எதுவும் செய்வேன் அத்தான்.” என்று, திரும்பவும் அதையே சொன்ன சத்யனின் குரல் உணர்சிகளின் மேலீட்டால் கரகரத்தது.

 

“டேய்! விடுடா!” என்றபடி கீர்த்தனன் அவனை அணைத்துக்கொள்ள, “என் அக்கா அவள் வாழ்க்கையில் எந்த சந்தோசத்தையும் அனுபவித்தது இல்லை. உங்களை மணந்த பிறகுதான் அவள் எந்தக் கவலையும் இல்லாமல் சிரித்துப் பார்க்கிறேன். அதற்கு நன்றி அத்தான்.” என்றான் அவனும் சிறு குழந்தையாய் கீர்த்தனனின் அணைப்புக்குள் அடங்கியபடி.

 

“என் மனைவியை நான் சந்தோசமாக வைத்துக்கொள்வதற்கு நீ என்னடா நன்றி சொல்வது? மித்து, இதென்ன இவன் இப்படியெல்லாம் பேசுகிறான்?” என்றபடி மனைவியை திரும்பிப் பார்த்தான் கீர்த்தனன்.

 

அவளும் அங்கே கண்ணீர் உகுத்தபடி இருக்க, அதுவரை இருந்த இலகுத் தன்மை மாற, “உங்கள் இருவருக்கும் இன்று என்ன நடந்தது?” என்றான் கீர்த்தனன் அதட்டலாக.

 

கணவனின் குரலில் தெரிந்த வேறுபாட்டில் மித்ரா வேக வேகமாகத் தன் கண்களை துடைத்துக்கொண்டு நிமிர, “அப்படி என்னதான் மித்துவின் வாழ்க்கையில் நடந்தது சத்தி? அவளிடம் கேட்டால் அழுகிறாள். நீயாவது சொல்?” என்றான் மித்ராவின் பின்னால் ஒளிந்திருக்கும் புதிரை அறியத் துடிப்பவனாக.

 

“உங்களுக்குத் தெரியாதா அத்தான்? அது.. அப்பா..” என்று அவன் ஆரம்பிக்க, “வித்திக்கு பள்ளிக்கூடம் முடிந்திருக்கும். அவளை அழைத்துவர போகவில்லையா நீ?” என்று இடைபுகுந்தாள் மித்ரா. விழிகளோ எதையும் சொல்லிவிடாதே என்று தம்பியிடம் எச்சரித்தது.

 

அந்த சைகை புரிந்தும் புரியாத குழப்பத்துடன், பேச்சை நிறுத்திவிட்டு அவன் பார்க்க, கீர்த்தனனோ மனைவியை முறைத்தான்.

 

கணவனின் கோபம் உணர்ந்தும் அதைப் போக்கும் சக்தி அற்றவளாக கைகளைப் பிசைந்தாள் மித்ரா.

 

அனைத்து உறவுகளும் இருந்தும் அநாதரவாக்கப்பட்டவளால், அதன் துயரை முழுமையாக அனுபவித்தவளால் தன்னைப் பெற்ற தாயையும் அதே அநாதரவான நிலையில் நிறுத்த முடியவே இல்லை.

 

அவளைப் பெற்றவர்கள் செய்த அதே தப்பை அவளும் செய்வதா? அதே பாவத்தை அவளும் இழைப்பதா? கூடாது என்று அவள் மனதுக்குள் போராட, “நீ சொல் சத்தி!” என்றான் கீர்த்தனன் அதட்டலாக.

 

அத்தானிடம் மறைக்க எதுவுமில்லை என்று எண்ணியவனாக, “அக்கா போலி…” என்று போலீஸ்க்கு அழைத்ததை அவன் சொல்லத் தொடங்க, “நிறுத்து சத்தி!” என்று மீண்டும் நடுவில் புகுந்தாள் மித்ரா.

 

 

error: Alert: Content selection is disabled!!