தனிமைத் துயர் தீராதோ 28 -1

 

அன்று, சத்யனுக்காக ஆர்டர் கொடுத்த காரை எடுப்பதற்காக நால்வரும் தயாராகினர். வீட்டை பூட்டிக்கொண்டு வெளியே வந்த கீதன், தன் காரை எடுப்பதற்காக கார் கராஜை திறக்க முனைந்தபோது, வேகமாக வந்து தடுத்தாள் மித்ரா.

 

கேள்வியாக அவன் பார்க்க, “என் காரில் போவோம்.” என்றாள் அவள்.

 

“ஏன்?”

 

“அது…” தன் பின்னால் நின்ற தம்பி தங்கையை திரும்பிப் பார்த்து கண்களில் குறும்பு மின்னச் சிரித்துவிட்டு, தோள்களைக் குழுக்கி, “சும்..மா..” என்றாள் கைகளை விரித்து.

 

முறுவல் மலர, “என்ன சும்மா?” என்று கேட்டு அவள் மண்டையில் செல்லமாகக் குட்டினான் கணவன்.

 

“சும்மா என்றால் சும்மாதான். என் காரை எடுங்கள் கீதன்!” என்றாள் மனைவி செல்லச் சிணுங்கலாக.

 

அவள் ஒன்றைச் சொல்லி அவன் என்று மறுத்தான்? அவளது காரிலேயே நால்வரும் புறப்பட்டனர்.

 

ஆனால், சகோதரர்கள் மூவரும் சங்கேதமாக என்னவோ பேசிக்கொள்வதையும், ஒருவரை மற்றவர் பார்த்துச் சிரிப்பதையும் கவனித்த கீதன், “இங்கே எனக்குத் தெரியாமல் என்ன நடக்கிறது மித்து? நாங்கள் இப்போது சத்திக்கு ஆர்டர் கொடுத்த காரை எடுக்கத்தானே போகிறோம்?” என்று கேட்டான்.

 

“ஆமாம்..” என்று ஒரு குரலல்ல மூன்று குரல்களும் கோரஸ் பாடின.

 

“ஆஹா… இந்த ஒற்றுமை நல்லதற்கு இல்லையே..” என்று இழுத்தவன், “வித்திம்மா.. நீ சொல்லு என்ன ப்ளான் போட்டு இருக்கிறீர்கள் என்று?” என்று முக்கியமான ஆளைப் பிடித்தான்.

 

தன்னை மதித்து அவன் கேட்டுவிட்ட மகிழ்ச்சியில், “அதுவா அத்தான்..” என்று அவள் துள்ளிக்கொண்டு ஆரம்பிக்க, விழுந்தடித்து அவளின் வாயை பொத்தினான் அவளருகில் அமர்ந்திருந்த சத்யன்.

 

“எதையாவது சொன்னாய் என்றால் என் கார் வந்தபிறகு உன்னை அதில் ஏற்றவே மாட்டேன்!” என்றான் எச்சரிப்பாக.

 

“ஏனடா அவளை மிரட்டுகிறாய்? அவன் எப்படி ஏற்றாமல் இருக்கிறான் என்று நான் பார்க்கிறேன். நீ சொல்லு..” என்று அவன் ஊக்க, சத்யன் கையை எடுத்தால் அல்லவோ அவள் சொல்வதற்கு.

 

வித்யாவிடம் இருந்து பதில் வராமல் போகவே, கண்ணாடி வழியே பின்னால் பார்த்து, நடப்பதை அப்போதுதான் கண்டு, “டேய்! விடுடா அவளை!” என்று கீர்த்தனம் எவ்வளவோ சொல்லியும் கேட்காத சத்யன், தங்கையின் காதருகில் குனிந்து, “நீ எதையாவது சொன்னாய் என்றால் அன்று உன் நண்பிகளுடன் ரெட்புல் குடித்ததை நானும் அத்தானிடம் சொல்வேன்.” என்று ரகசியமாக சொல்லிவிட்டுக் கையை எடுத்தான்.

 

இனியும் வாயை திறப்பாள் வித்யா?

 

அவளே சொல்லவில்லை என்றால் மற்றவர்கள் இருவரும் மூச்சே விடமாட்டார்கள் என்று தெரிந்ததில், “விஷயம் வெளியே வரும்தானே. அப்போது வைத்துக்கொள்கிறேன் உங்கள் மூவரையும்!” என்று மிரட்டியபடி அருகில் அமர்ந்திருந்த மனைவியை திரும்பிப் பார்த்தான்.

 

அவளோ இதழ்களில் மலர்ந்த புன்னகையோடும் கணவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

 

“கட்டிய புருசனிடமே மறைக்கிறாயா? இருக்குடி உனக்கு!” என்று வாயசைவாக அவன் சொல்ல, அப்படி என்ன இருக்கும் என்பதை அறிந்தவள் வாய் பொத்திச் சிரிக்க, அதைப் பார்த்தவனின் முகத்திலும் முறுவல் அரும்பியது.

 

பின்னே, அவனது தண்டனைகளே வேறு விதமாக அல்லவோ இருக்கும்! அந்த நினைவுகள் கொடுத்த இன்பக்களிப்பில் அவள் இதழ்களில் அழகிய புன்னகை விரிந்தது. கூடவே அழகான வெட்கமும்!

 

என்றெல்லாம் அவளை தண்டிக்க நினைக்கிறானோ அன்றெல்லாம் இரவு வேலைகளை முடித்து அவள் படுக்கை அறைக்குள் வருகையில் கட்டிலில் ஒரு அழகான சேலை வீற்றிருக்கும்.

 

அதைக் கண்டதும் அவள் முகத்தில் புன்னகையும் வெட்கமும் ஒருங்கே படரும். “இன்றைக்குமா?” என்று பொய்யாகச் சிணுங்குவாள்.

 

அவனோ, “என்ன இன்றைக்குமா? அதற்குள் சலித்துவிட்டதா?” என்று முறுக்கிக் கொள்வான்.

 

அவளோ, அவன் மார்புக்குள் முகத்தை புதைத்து, “சலிக்கவெல்லாம் இல்லை. வீணாக எதற்கு அதைக் கட்டுவான்?” என்று முணுமுணுப்பாள்.

 

முறுக்கியது எல்லாம் வடிய, “வீண் என்று எப்படிச் சொல்லுகிறாய் நீ?” என்று, அவள் கன்னத்தின் மென்மையை சோதித்தவாறே கேட்கும் அவனது உதடுகள்.

 

“நான் கஷ்டப்பட்டுக் கட்ட, அதை நீங்கள் ஒரே நிமிடத்தில் கழட்ட.. அதற்கு நான் கட்டாமலேயே இருக்கலாம்..” என்பாள் அவள்.

 

“உனக்கு சேவகம் செய்ய இந்த அடிமை இருக்கும்போது நீ எதற்காக சேலை கட்டக் கஷ்டப் படுகிறாய்..” என்று கிறங்குகிறவனும் அவளைக் கட்ட விட்டதில்லை.

 

“நானே கட்டுகிறேன்.. நீங்கள் சுத்த மோசம்.” என்று பொய்யாகச் சிணுங்குகிறவளும் தானே கட்டிக்கொள்ள முயன்றதே இல்லை.

 

அதன்பிறகான அன்றைய நாள் அவர்கள் இருவருக்கு மட்டுமே சொந்தமான நாளாக இன்பமாகக் கழியும்.

 

“நீ சேலை கட்டி நிறைய நாளாகிவிட்டது இல்லையா மித்து?” அவள் புறமாகச் சரிந்து, குறும்போடு கேட்ட கணவனின் பார்வையில் வெட்கிச் சிவந்தவள், பின்னால் இருப்பவர்களை கண்ணால் காட்டி பொய்யாக முறைத்தாள்.

 

கண்ணாடி வழியே அவர்களை பார்த்துவிட்டு, “பின்னால் பார். அவர்கள் இருவரும் மும்முரமாக ஏதோ சண்டையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.” என்றான் அவன் சிரிப்போடு.

 

திரும்பிப் பார்த்தாள் மித்ரா. கீதன் சொன்னதுபோல, என்னவோ சண்டைதான். எந்தவிதக் கவலைகளும், யோசனைகளும் இன்றி வாயடித்துக்கொண்டிருந்தார்கள். அவள் மனதில் இதமும் நிம்மதியும் படர்ந்தது.

 

சத்யன் கூட தன்னுடைய இறுக்கமான கூட்டைவிட்டு வெளியே வந்து வித்யாவுக்கு இணையாக சிறுபிள்ளையாக மாறியிருந்தான். இப்போதெல்லாம் அவர்களுக்கு மட்டுமில்லை, அவளுக்குமே எந்த யோசனையுமே வருவதில்லை. எதைப் பற்றியுமே சிந்திப்பதில்லை.

 

அனைத்தையும் கணவன் பார்த்துக்கொள்வான் என்கிற நம்பிக்கை! என்ன நடந்தாலும், தாங்கவும் தடுமாறாமல் அவர்களைக் காக்கவும் சகலதுமாக அவன் இருக்கிறான் என்கிற நிம்மதி.

 

இப்போதெல்லாம் படுத்ததும் நிம்மதியாக உறங்குகிறாள். நன்றாக சிரிக்கிறாள். நன்றாக சண்டை போடுகிறாள். ஏன், பிடிவாதம் எல்லாம் கூடப் பிடிக்கிறாள். ரசித்து ருசித்து உண்ணுகிறாள். ஒவ்வொரு சின்னச் சின்ன செயல்களை எல்லாம் பிடித்து, முழுமனதோடு செய்கிறாள். மொத்தத்தில் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடித்துளிகளையும் அனுபவித்து வாழ்கிறாள்!

 

இதற்கெல்லாம் காரணம் அவள் கணவன்!

 

error: Alert: Content selection is disabled!!