இந்த நிறைவையும் நிம்மதியையும் கொடுத்த அந்தக் கணவனுக்கு, ஏதாவது செய்யவேண்டும் என்கிற அவளின் நெடுநாள் ஆசைப்படி ஒரு சின்ன ஆனந்த அதிர்ச்சியை கொடுப்பதற்காக இன்று காத்திருக்கிறாள் அவள்!
கார் கம்பனி வந்துவிடவும், காரை பார்க் பண்ணிவிட்டு எல்லோருமாக உள்ளே செல்ல, அங்கே இருந்த மனேஜர் இவர்களுக்காகவே காத்துக்கொண்டு இருந்தவன் போன்று ஓடிவந்து வரவேற்றான்.
ஒரு கார் வாங்குவதற்கு எதற்கு இவ்வளவு பெரிய வரவேற்பு? கீதனுக்குள் யோசனை ஓடினாலும், புன்னகையோடு கைகுலுக்கி, “கார் தயாரா?” என்று கேட்டான்.
“ஓ… எல்லாமே தயார்!” என்ற அந்த மனேஜரின் விழிகளும் மித்ராவோடு என்னவோ சங்கேதமாக பேசின.
அதைக் கவனித்தபடி, அவர்களை அழைத்துச் சென்ற மனேஜரை பின் தொடர்ந்தான் கீர்த்தனன். அவனை வால் பிடித்தனர் சகோதரர்கள் மூவரும்.
அங்கே வெளியே தயாராக நின்றது சத்யனின் கார். திறப்பை மனேஜர் நீட்ட, “நீயே வாங்கு சத்தி.” என்றான் கீர்த்தனன்.
“முதன் முதலாக நீங்களே வாங்கி ஓட்டிவிட்டு பிறகு என்னிடம் தாருங்கள் அத்தான்.” என்றான் அவன் குரல் நெகிழ.
பின்னே, முதலில் அனுபவம் வரட்டும் என்று புதிதாக லைசென்ஸ் எடுத்தவர்களுக்கு எல்லோரும் பழைய வாகனங்கள் வாங்கிக்கொடுக்க, அவனுடைய அத்தானோ விலை உயர்ந்த காரை அவனுக்குப் பரிசளிக்கிறாரே!
“இது உன் கார். அதை நீதான் முதன் முதலில் ஓட்டவேண்டும். வா வந்து வாங்கு!” என்றவன், சத்யனையே திறப்பை வாங்க வைத்து அவனையே டிரைவர் சீட்டிலும் இருத்தினான்.
அவனுக்கே அவனுக்கென்று ஒரு கார்! அதுவும் அவனுக்குப் பிடித்த மடலில்! சத்யனுக்கு லைசென்ஸ் எடுத்த அன்று அனுபவித்த சந்தோசத்தை விட இது அதிகமாக இருந்தது.
“நன்றி அத்தான்!” என்றான் கீர்த்தனனை பார்த்து.
“போடா டேய்!” என்றவன் மனைவியிடம் திரும்பி, “மித்து நீ கவனமாக உன் காரை ஓட்டிக்கொண்டு வா. வித்தி, அக்காவோடு போ. நான் சத்தியோடு வருகிறேன்.” என்றான்.
புதுக்கார், அனுபவமற்ற ஓட்டக்காரன் சத்யன் என்பதை ஊகித்து, அதோடு அவனுக்குள் இருந்த மனப்பயத்தையும் உணர்ந்து செயல்பட்ட அத்தான் மேல் இன்னுமே உயிராகிப்போனான் அந்த மச்சினன்.
“அதற்கு முதலில் இன்னொரு வேலை இருக்கிறது கீதன்.” என்றாள் மித்ரா விழிகள் மின்ன.
அவர்களின் ரகசியம் வெளியே வரப்போகிறது என்று தெரிந்ததில், “என்னது?” என்று கேட்டான்.
அப்போதுதான் தன்னுடைய சந்தோஷ உலகில் இருந்து சற்றே வெளியே வந்த சத்யனும், தன் காரிலிருந்து இறங்கி, “இப்போது நீங்கள் எங்களோடு வாருங்கள் அத்தான்.” என்றவன் மனேஜரை பார்க்க, அவரும் புன்னகையோடு அவர்களை அந்த பிரமாண்ட ஷோ ரூமுக்குள் அழைத்துச் சென்றார்.
சுற்றவரக் கண்ணாடியால் அமைந்த அந்த ஷோ ரூமின் தரை வெண்மைநிற மார்பில்களால் பளிங்காக மின்ன, அதன் கூரையும் கண்ணாடிகளால் அமைக்கப் பட்டிருக்க, எந்தப் பக்கம் திரும்பினாலும் புத்தம் புதுக் கார்கள் பளிச் பளிச்சென மின்னிக்கொண்டு நின்றன.
அங்கே, குட்டியாய் அழகாய் இருந்த வட்ட மேசையின் மேலே ஒரு சின்னப்பெட்டி தங்கப் பதுமையென வீற்றிருக்க, அதைத் திறந்து அதனுள் இருந்த திறப்பினை எடுத்த மித்ரா, அவனிடம் கொடுத்து, “இதன் பட்டனை அழுத்தித் திறவுங்கள் கீதன். இங்கே நிற்கும் கார்களில் எந்தக் காரின் லைட்டுகள் ஒளிர்கிறதோ.. அது உங்களுக்கு எங்களின் பரிசு.” என்றாள் மலர்ந்த முகத்தோடு.
முற்றிலுமாக அதை எதிர்பாராதவன் ஆச்சரியம் மேலோங்க, அதை வாங்கி பட்டனை அழுத்தினான்.
அங்கே நின்ற கார்களுக்கு நடுவில் நின்ற சில்வர் நிறக்கார், பறவையொன்று செட்டைகளை எப்படி விரிக்குமோ அப்படி தன் பக்கக் கண்ணாடிகளை விரிக்க, அதே நேரத்தில் அதன் விழிகள் இரண்டும் பொன்னிற லைட்டை பாய்ச்சியபடி மூன்று தடவைகள் மின்னி ஒளிர்ந்தன.
அழகிய இளம் பெண்ணொருத்தி, தன் கயல்விழிகளைச் சிமிட்டி காளை ஒருவனை அழைத்தால் எப்படி அவன் அவள்பால் காந்தமென நகருவானோ, அப்படி அதன் விழிகளின் அழைப்பில் அந்தக் காரை நோக்கி நடந்தான் கீர்த்தனன்.
எப்போதும்போல் அவன் பாதடி பின்பற்றினர் மற்றவர்கள்.
கீதன் காரை அடையமுதல் ஓடிச்சென்று அதன் கதவை திறந்துவிட்டு, ஆங்கிலேயர் பாணியில் இடைவரை குனிந்து, “ஏறுங்கள் அத்தான்!” என்றான் சத்யன், குறும்பும் சந்தோசமும் சரிபாதியாக முகத்தில் துலங்க.
“டேய்!” என்றபடி அவன் முதுகில் ஒரு அடிபோட்டு, ஆச்சர்யம் முற்றிலும் அகலாமலேயே உள்ளே ஏறி அமர்ந்தான் கீர்த்தனன்.
புதிதாக வந்த அந்த மாடல் கார் நன்றாக இருப்பதாக, என்றோ மனைவியோடு பேசுகையில் அவன் சொன்னதை நினைவில் வைத்து வாங்கியிருக்கிறாள்.
அதுநாள் வரை, அவன்தான் எல்லோருக்கும் பார்த்துப் பார்த்து அவரவர் விருப்பம் அறிந்து நடந்திருக்கிறான். அது அவன் வீட்டுகானாலும் சரி, மனைவி வீட்டுக்கானாலும் சரி. இன்று அவனுக்காக, அவன் விருப்பமறிந்து ஒன்றைச் செய்த மனைவியை ஆசையோடு பார்த்தான் கீர்த்தனன்.
அதற்காகவே காத்திருந்தவள், திறந்திருந்த அவன் பக்கக் கதவு வழியாகக் குனிந்து, “பிடித்திருக்கிறதா கீதன்?” என்று, அவன் பதிலை அறிந்துவிடத் துடிக்கும் ஆவலோடு கேட்டாள்.
அவள் முகத்திலேயே விழிகளை பதித்து, “நான் வாங்கவேண்டும் என்று ஆசைப்பட்ட கார். அதுவும் புத்தம் புதிது. பிடிக்காமல் இருக்குமா? மிக மிகப் பிடித்திருக்கிறது.” என்றான் அவன்.
அதைக் கேட்டதும் பளீரென மலர்ந்த அவள் முகத்துக்கு ஈடாக எதையும் செய்யலாம் என்றிருந்தது அவனுக்கு.
“இப்போ என் காரை என்ன செய்வது?” என்று அவன் கேட்க,
“அத்தான்! இப்போது இதுதான் உங்கள் கார்.” என்றாள் வித்யா சிரிப்போடு.
“அப்போ பழைய கார்…” என்று அவன் இழுக்கும் போதே, “அதை விற்றுவிட்டோம்.” என்றாள் அவன் மனைவி.
“என்னது? எப்போ இதெல்லாம் நடந்தது? நேற்றுத்தானே காரை கழுவிக்கொண்டு வந்து கராஜில் விட்டேன்.” என்றான் அவன் ஆச்சரியத்தோடு.
கலகல என்று சிரித்துவிட்டு, “உங்களதை விட்டுவிட்டு என் காரைக் கழுவ எடுத்துக்கொண்டு போனீர்கள் தானே. அந்த நேரத்தில் வந்து எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்.” என்றாள் மித்ரா.

