அவர்களின் திட்டமிட்ட செயல்களை எண்ணி சிரிப்பு வந்தது கீர்த்தனனுக்கு. கூடவே சந்தோசமும்! அதுவரை நேரமும் காரை சுற்றிச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்த சத்யன், “அத்தான் கார் சூப்பர்!” என்றான் முகமெல்லாம் மின்ன.
“நீயும் உள்ளே ஏறிப் பாரேன்டா.” என்றாள் மித்ரா.
சத்யன் பதில் சொல்ல முதலில், “என்னருகில் நீ ஏறு மித்து. இந்தக் காரில் நீ மட்டும் தான் முன்னால் அமரவேண்டும்.” என்றான் அவள் கணவன்.
அதைக்கேட்டு அங்கிருந்த மற்ற மூவரின் முகங்களும் பூவாக மலர்ந்ததே தவிர சற்றும் வாடவில்லை.
வித்யாவே, “ஆமாம் அக்கா. இந்தக் காரில் அத்தான் அருகில் நீங்கள் மட்டும் தான் ஏறவேண்டும். அண்ணா வா, நாங்கள் பின்னால் ஏறுவோம்.” என்றவாறு பின்னால் அமர்ந்துகொள்ள, மித்ரா கணவனருகில் அமர்ந்துகொண்டாள்.
ஷோ ரூமில் இருந்து மனேஜர் காட்டிய வழியில் கார் வெளியே வந்ததும், “மற்ற இரண்டு கார்களையும் என்ன செய்வது?” என்று கேட்டாள் மித்ரா.
“நீ உன் காரில் வாக்கா. நான் என் காரில் வருகிறேன்.” என்றான் சத்யன்.
“இல்லை சத்தி. மித்து, நீ உன் காரில் வித்தியோடு வா.” என்றவன், அப்படியே வீட்டுக்கு சென்று புதுக்காரை வீட்டில் விட்டுவிட்டு மித்ராவின் காரில் பழையபடி நால்வருமாகத் திரும்பி வந்து, பிறகு சத்யனும் கீதனும் சத்யன் காரிலும் மித்ராவும் வித்யாவும் மித்ராவின் காரிலும் என்று வீடு வந்து சேர்ந்தனர்.
அன்றைய இரவும் மித்ரா சேலை அணியும் விழா இனிதே நடந்தேறியது!
அந்த உயர்ரக மதுபானக் கடையில் இருந்த மதுபானப் போத்தல்களில் தனக்குத் தேவையானவைகளை எடுத்து வண்டிலுக்குள் வைத்துக் கொண்டிருந்தான் அர்ஜூன்.
அடுத்த சனிக்கிழமை அவன் பிறந்தநாள். நெருங்கிய நண்பர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தான். அதில் கீர்த்தனனும் அடக்கம். அவன் நினைவு வந்ததுமே இதையெல்லாம் பார்த்தால் திட்டுவானே என்று எண்ணிக்கொண்டான் அவன்.
எப்படியாவது அவனைச் சமாளிக்க வேண்டும். பின்னே, கெஞ்சிக் கூத்தாடி இந்தமுறை மட்டும் என்று கேட்டு மனைவியிடம் சம்மதம் வாங்கி, அவளையும் அஞ்சலியையும் அவள் தாய் வீட்டுக்கு பார்சல் பண்ணிவிட்டு இந்தப் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடத் திட்டமிட்டிருந்தான் அவன்.
விழாவில் மதுபானமும் அடக்கம் என்று தெரிந்தால் கீர்த்தனன் வரமாட்டான் என்பதால் அதை சொல்லாமல் மறைத்துவிட்டான். அவனுக்காக மதுபானத்தை தவிர்த்தால் மற்ற நண்பர்கள் யாருமே வரமாட்டார்கள். அதோடு, மது இல்லாத பார்ட்டி கொண்டாடவா அவன் அந்தப் பாடுபட்டு மனைவியை சம்மதிக்க வைத்தான்? ஆக, கீர்த்தனன் ஒருவனை எப்படியாவது சமாளிக்கவேண்டும் என்று நினைத்தாலும், அவன் கோபத்தை எண்ணி உள்ளூர சற்றே கலக்கம் தான்.
இதையெல்லாம் எண்ணிக்கொண்டு இன்னொரு போத்தலை அவன் எடுத்துவைக்க, “புதிதாக ஏதும் பார் திறக்கும் திட்டமா?” என்றொரு குரல் கேட்டது.
யார் என்று திரும்பிப்பார்த்தவன், “டேய் விஸ்வா..!” என்றபடி நண்பனைக் கட்டிக்கொண்டான்.
“எப்படிடா இருக்கிறாய்? சொல்லாமல் கொள்ளாமல் ஊரை விட்டே போனவன் திரும்ப எதற்கு இங்கே வந்திருக்கிறாய்?” பல வருடங்களுக்குப் பிறகு விஸ்வாவைக் கண்டதில் கேட்டான் அர்ஜூன்.
ஒருநொடி முகம் கறுத்தாலும் சட்டென்று அதிலிருந்து மீண்டு, “அதைவிடு! வீட்டில் என்ன விசேசம் என்று சொல்?” என்று கேட்ட விஸ்வாவின் பார்வை, குறும்போடு அர்ஜூன் எடுத்து வைத்திருந்த போத்தல்களிடம் சென்று மீண்டது.
சிரிப்பு மலர, “அது என் பிறந்தநாள் பார்ட்டிக்குடா.” என்றான் அவன்.
“அப்போ எனக்கெல்லாம் அழைப்புக் கிடையாதா?”
உடனே பதில் சொல்லத் தயங்கினான் அர்ஜூன். நிதானமாக இருக்கும்போது விஸ்வா எந்தளவுக்கு நல்ல மனிதனோ அந்தளவுக்கு தலைகீழாக மாறிவிடுவான் மது எனும் அரக்கன் வயிற்றின் உள்ளே போய்விட்டால். தரமற்ற வார்த்தைகள், தரமற்ற செயல்கள் என்று அவன் செய்யும் அநியாயங்களுக்கு அளவே இல்லை.
அர்ஜூனின் தயக்கத்துக்கான காரணத்தை உணர்ந்து வெட்கினாலும், வெற்றுப் புன்னகை சிந்தினான் விஸ்வா. “சும்மாதான் கேட்டேன் அர்ஜூன். அதனால் பயப்படாதே. அதோடு, இப்போதெல்லாம் இந்தக் கருமத்தை நான் தொடுவதே இல்லை. இதனால் மனைவி பிள்ளையை பிரிந்து நடுத்தெருவில் நிற்பதே போதும்!”
அவன் குரலில் தொனித்த துயரில், “சாரி மச்சான்..” என்றபடி அவனை அணைத்துக்கொண்டான் அர்ஜூன்.
அப்போதும் தன்னை அழைக்காத நண்பனின் எண்ணம் மனதை தாக்க, அவனிடமிருந்து விலகி அவன் கரத்தைப் பற்றி, “முன்கூட்டிய என்னுடைய வாழ்த்துக்களை பெற்றுக்கொள் அர்ஜூன். மனைவி பிள்ளைகள் என்று சந்தோசமாக வாழ வாழ்த்துக்கள்.” என்று முகம் மாறாமல் சொல்லிவிட்டு, அவனிடமிருந்து விடைபெற்று அங்கிருந்த கோலா கேஸ் ஒன்றை எடுத்துக்கொண்டு பணம் செலுத்தச் செல்ல, ஒருமாதிரி ஆகிவிட்டது அர்ஜுனுக்கு.
என்னை அழைக்கமாட்டாயா என்று வாய்விட்டுக் கேட்ட நண்பனை அழைக்காமல் விட்ட தன் நாகரீகமற்ற செயலை எண்ணி உள்ளூர வெட்கி, “டேய் விஸ்வா! சனிக்கிழமை நீயும் கட்டாயம் வாடா!” என்றான்.
நின்று திரும்பி, “இல்லை மச்சான். நான் வெள்ளியே என் ஊருக்கு போய்விடுவேன்.” என்றான் கண்களை எட்டாத புன்னகையோடு.
அது இன்னும் அர்ஜூனை தாக்க, “என்னடா? பெரிய இவனாட்டம் ரோசம் பாராட்டுகிறாய். எனக்காக ஒருநாள் தள்ளிப் போகமாட்டாயா நீ. மரியாதையாக சனிக்கிழமை வருகிறாய். நாம் ஜாம் ஜாம் என்று பார்ட்டி கொண்டாடுகிறோம். சரியா? இந்தப் பார்ட்டிக்காக மனைவி தங்கையை கூட மாமியார் வீட்டுக்கு அனுப்பப் போகிறேன். அதனால் வா!” என்று வருந்தி அழைத்தான்.
முகம் மலர, “சரிடா.. அப்போ சனிக்கிழமை சந்திக்கலாம்..” என்றபடி விடைபெற்றான் விஸ்வா.

