அன்று வெள்ளிக்கிழமை. காலையிலேயே கீதனுக்கு அழைத்தான் அர்ஜூன். “மறந்துடாதடா. நாளைக்கு மாலை ஐந்து மணிக்கு.”
“நீ ஒருத்தன்! என்னவோ குழந்தைப்பிள்ளைக்கு முதலாவது பிறந்தநாள் கொண்டாடுவதுபோல் கொண்டாடுகிறாய். புது வீட்டில் நிறைய வேலை மச்சான். சனி ஞாயிறு தான் லீவே. அந்த நாட்களில் கொஞ்சம் வீட்டு வேலையை பார்க்கலாம் என்றால் நீ வேறு..” என்று சலித்தான் கீதன்.
ஆமாம்! அன்று மித்ராவின் ஆசைப்படி அந்த வீட்டைப் போய்ப் பார்த்தவர்களுக்கு மிகவுமே பிடித்துவிட, அதை வாங்கி வீடும் மாறியிருந்தனர்.
“டேய் டேய்! அந்த வீட்டை பார்த்து தந்தவனே நான்தான். அதை மறக்காதே! இது முப்பதாவது பிறந்தநாள்டா. அதனால் கட்டாயம் கொண்டாட வேண்டுமாம். இல்லாவிட்டால் சாமிக்குத்தம் ஆகிவிடுமாம். அதனால் மறக்காமல் வா.” என்றவனுக்கு, கட்டிய மனைவியை முத்தம் கொடுத்து ஒருவழியாக சமாளித்துவிட்டேன், இவனுக்கு எதைக் கொடுத்து சமாளிப்பது என்று ஆயாசமாக இருந்தது.
கடைசி ஆயுதமாக அந்த முத்தத்தைக்கூட கையில் வைத்திருந்தான் அர்ஜூன். பின்னே, இதுதான் இப்படி மதுவோடு கொண்டாடும் கடைசிப் பிறந்தநாளாக இருக்கவேண்டும் என்று சத்தியம் வாங்கிக்கொண்டாளே அவனது அருமை மனைவி!
அவன் விடமாட்டான் என்று அறிந்து, “சரி வரப்பார்க்கிறேன்.” என்று கீதன் சமாளிப்பாக சொல்ல,
“இனி உன்னோடு பேசி சரிவராது. நான் மேலிடத்திடமே கதைத்துக்கொள்கிறேன்.” என்றுவிட்டு அவன் வைத்துவிட, சிரித்துக்கொண்டிருந்தான் கீர்த்தனன்.
அவனது மேலிடம் மித்ரா! உண்மைதான். இப்போதெல்லாம் அவள் இல்லாமல் அவனுக்கு அணுவும் அசைய மறுத்தது. சிரிக்க அவள் வேண்டும், பேச அவள் வேண்டும்! மனப்பாரத்தை கொட்ட அவள் வேண்டும், ஆறுதலுக்கு அவள் வேண்டும் ஏன் அவனது கோபத்தைக் கொட்டக் கூட அவனுக்கு அவள்தான் வேண்டும்!
அதனால் தானோ என்னவோ, கவிதாவை பார்க்கப் போவதற்கு கூட ஒருநாள் அதிகாலையிலேயே புறப்பட்டவன் மதியம் அங்கு போய்ச்சேர்ந்து அன்றிரவை பெரும்பாடுபட்டு அங்கேயே கழித்துவிட்டு மறுநாள் காலையிலேயே புறப்பட்டு மதியம் வீடு வந்து சேர்ந்திருந்தான். அவனைக் கண்டதும் ஓடிவந்து அவன் கைகளுக்குள் அவளும் அடங்கியபோது, அவளும் தன்னைப்போலவே பிரிவுத் துயரை அனுபவித்திருக்கிறாள் என்பதை சுகமாக உணர்ந்துகொண்டான் அவன்.
அங்கே, கீதனிடம் சொன்னது போலவே மித்ராவுக்கு அழைத்து, “நாளைக்கு மறக்காமல் அவனை அனுப்பிவிடு மித்ரா.” என்று சொல்லி, அவளிடம் சம்மதமும் வாங்கியிருந்தான் அர்ஜுன்.
நடக்கப்போவது தெரிந்திருக்க, தலைகீழாக நின்றேனும் கணவனை தடுத்திருப்பாள். ஆனால்… விதி வலியதன்றோ..!
சனிக்கிழமையும் மிக அழகாக விடிந்தது. காலையில் எழுந்ததுமே, “இன்று அர்ஜூன் அண்ணாவின் பிறந்தநாள் கீதன்.” என்று கணவனுக்கு நினைவூட்டினாள் மித்ரா.
“போகவேண்டுமா என்று யோசிக்கிறேன் மித்து. எப்படியும் அங்கே குடிப்பார்ட்டி இருக்கும். அதைக் கண்டாலே எனக்குக் கோபம் வரும். பிறந்தநாள் அதுவுமாக நான் ஏதாவது சொல்லி அவன் மனதை நோகடித்துவிடுவேனோ என்று யோசனையாக இருக்கிறது. மாட்டேன் என்றாலும் கேட்கிறான் இல்லை.” என்று சலித்தான் அவன்.
“அதெல்லாம் இல்லை என்று அண்ணா சொன்னாரே..”
“அது இல்லாமல் அவனாவது பார்ட்டி கொண்டாடுவதாவது. எல்லாம் என்னை வரவழைக்கச் சொல்லும் பொய்.”
“அப்படியாவது உங்களை வரவழைக்க நினைக்கிறார் என்றால் அது நல்ல நட்பினால் தானே கீதன். உங்களை குடிக்கச் சொல்லி என்றாவது கேட்டிருக்கிறாரா?”
“இல்லை..” என்று தலையசைத்து மறுத்தான்அவன்.
“பிறகென்னப்பா? சந்தோசமாகப் போய்வாருங்கள்.” என்று, அன்று தன் வாழ்க்கையே மீண்டும் தலைகீழாக மாறப்போவது தெரியாமல் கணவனை வற்புறுத்தி அனுப்பிவைத்தாள் மித்ரா.
அவனைக் கண்டதும் முகமெல்லாம் சிரிப்போடு ஓடிவந்து கட்டிப்பிடித்து வரவேற்றான் அர்ஜூன். தானும் அணைத்து வாழ்த்துக்களை சொன்னான் கீர்த்தனன்.
விழா ஆரம்பித்தது என்னவோ மிக நன்றாகத்தான். மூன்று தட்டுக்கள் கொண்ட பெரிய கேக்கில் எரிந்துகொண்டிருந்த இலக்கம் முப்பதை அர்ஜூன் ஊதியணைக்க, அனைத்து நண்பர்களும் வாழ்த்துகிறோம் என்கிற பெயரில் காட்டுக் கத்தல் காத்த, சிரிப்பும் கேலியுமாக கேக்கை அர்ஜூன் வெட்டி நண்பர்களுக்கு ஊட்டிவிட என்று எல்லாமே நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது.
ஒரு கட்டத்தில், “மச்சி! எங்கடா தேவாமிர்தம்? கண்ணில் காட்டுகிறாயே இல்லையே..” என்று ஒருவன் கத்த, கீர்த்தனனை பார்த்தான் அர்ஜூன்.
இதை அவன் எதிர்பார்த்தான் தானே. அதோடு, நண்பனின் மகிழ்ச்சியை குலைக்க விரும்பாது, ‘ஆரம்பி’ என்பதாக தலையை அசைத்தான்!
அடுத்த நிமிடமே கோலாகலமாக ஆரம்பித்தது அவர்களின் ‘பார்ட்டி’.
சற்று நேரத்தில் விஸ்வாவும் அங்கே வந்து சேர, கீர்த்தனனுக்கு அவனைப் பெரிதாகப் பழக்கமில்லை என்றாலும் அங்கங்கே இப்படியான பார்ட்டிகளில் பார்த்திருக்கிறான். எனவே நல விசாரிப்போடு நிறுத்திக்கொண்டான்.
அவனோ இவனுடனேயே அமர்ந்திருக்க, சற்றே வியப்பாக அவனைப் பார்த்தான் கீர்த்தனன்.
“என்ன பார்க்கிறீர்கள் தனா? என்ன இவன் இன்னும் ஆரம்பிக்கவில்லை என்றா?”
சில பார்ட்டிகளுக்கு வரும்போதே போதையோடு வருகிறவன், போகும்போது தலைகீழாகப் போகிறவன் இன்று இப்படி அமைதியாக இருக்கிறானே என்று எண்ணித்தான் பார்த்தான். என்றாலும் அதை வாய்விட்டுச் சொல்லாமல் சின்னச் சிரிப்போடு நிறுத்திக்கொண்டான் கீர்த்தனன்.
“குடிப்பதை நிறுத்திவிட்டேன்.” என்று அவன் சொல்லி முடிக்க முதலே ஒரு நண்பன் வந்து இழுத்துக்கொண்டு போனான்.
திருந்த நினைத்தாலும் மற்றவர்கள் விடமாட்டார்கள் என்று கீர்த்தனன் தனக்குள் நினைக்க, அதுவேதான் அங்கேயும் நடந்தது. விஸ்வா குடிக்க மறுக்க அவனுக்கு ‘கோலா’ வழங்கப்பட்டது. அதன்பிறகோ அவன் அப்படி பல ‘கோலா’ கிளாஸ்களை உள்ளே தள்ளி முடித்தான்.

