தனிமைத் துயர் தீராதோ 29 – 2

நேரம் செல்லச் செல்ல அவர்களின் போதையும் அதிகரிக்க, பேச்சுக்களும் சிரிப்புக்களும் வரம்பு மீறிச் செல்லத் தொடங்கியது. அங்கே அதற்கு மேலும் இருக்கப் பிடிக்காமல் புறப்பட எண்ணியவன், அர்ஜூனிடம் சொல்லச் சென்றான்.

 

அவனோ, “இன்னும் கொஞ்சநேரம் பொறு தனா. எல்லோருக்கும் போதை. கார் ஓடமுடியாது. அவர்களை நீதான் அவரவர் வீட்டில் இறக்கி விடவேண்டும்.” என்றான்.

 

அது அவர்களின் பிரச்சனை என்று சுள்ளென்று சொல்ல வாயெடுத்தவன், அர்ஜூனை எண்ணி அடக்கிக்கொண்டான்.

 

“அப்போ இப்போதே வரச்சொல். எனக்கு நேரமாகிறது அர்ஜூன். அங்கே மித்து தனியாக இருக்கிறாள்.” என்றான் அழுத்தமான குரலில்.

 

சரி என்று அர்ஜூன் சம்மதிக்க, ஒவ்வொருவரையும் காருக்குள் எற்றுவதற்கே கீதனுக்கு போதும் போதும் என்றானது. அப்படி மூன்று முறை நான்கு நான்கு பேராகக் கொண்டுபோய் அவர்களின் வீட்டு வாசல்களில் தள்ளிவிட்டு வந்தவன் அர்ஜூன்மேல் பெருத்த கோபத்தில் இருந்தான்.

 

‘நாளைக்கு இருக்குடா உனக்கு!’ என்று மனதில் எண்ணிக்கொண்டு, கடைசியாக இருந்த மூவரையும் வரச்சொல்லி அழைக்க, அவர்களோ மறுத்தனர். அதில் விஸ்வாவும் அடக்கம்.

 

நேரம் நள்ளிரவை தாண்டிக்கொண்டு சென்றிருக்க, மித்ராவும் அப்போது பார்த்து அழைத்து, “எப்போது வருவீர்கள் கீதன்?” என்று கேட்டுவிட, கீர்த்தனனுக்கோ பொறுமை முற்றிலுமாக பறந்தது.

 

“இதோ.. இன்னும் அரை மணி நேரத்தில் வந்துவிடுவேன்.” என்று அவளிடம் சொல்லிவிட்டு, “வருகிறவர்கள் வரலாம். நான் கிளம்பப் போகிறேன் அர்ஜூன்.” என்றான் அழுத்தமான குரலில் உறுதியாக.

 

“முதலாளி அம்மாவிடம் இருந்து அழைப்பு வந்துவிட்டதா?” கோணல் சிரிப்புடன் கேட்டான் விஸ்வா.

 

“பேசாமல் இரு விஸ்வா!” நண்பனின் குணம் அறிந்து அதட்டினான் அர்ஜூன்.

 

போதையில் இருப்பவனின் பேச்சை சட்டை செய்யக்கூடாது என்றெண்ணி, “வாருங்கள் போகலாம்!” என்று அழைத்தான்.

 

“முடியாது! வர முடியாது! இன்று முழுவதும் மதுவிலே குளிக்கப் போகிறோம்!” என்றான் விஸ்வா சிவந்த கண்களும், கையில் மதுக்கோப்பையும், தள்ளாடும் நடையுமாக. மற்றவர்களோ அதற்கு ஆமாம் போட்டனர்.

 

“நல்லது! அர்ஜூன் பாய்டா..!” என்றுவிட்டுத் திரும்பியவனின் நடையை, “ஏன் பாஸ், அந்தளவுக்கு பெண்டாட்டிக்கு பயமா? ” என்ற விஸ்வாவின் நக்கல் பேச்சு நிறுத்தியது.

 

நின்று நிதானமாகத் திரும்பி, “மனைவிமேல் பாசமாக இருந்தால் கூட போகலாம்.” என்று சூடான குரலில் திருப்பிக் கொடுத்துவிட்டு அவன் நடக்க, “கொஞ்ச நேரம் இருங்க பாஸ்!” என்றவாறே கீர்த்தனனின் கையை பிடித்து இழுத்தான் விஸ்வா.

 

அதை எதிர்பாராமல் தடுமாறியவனின் சட்டை பாக்கெட்டில் இருந்து, சற்றுமுன் வைத்த செல் தவறி விழ, அதில் சிரித்துக்கொண்டிருக்கும் மித்ராவின் படம் பளீரென்று ஒளிர்ந்தது.

 

அதைப் பார்த்த விஸ்வாவின் மதுவில் வேர்த்திருந்த முகம் விகாரமாக மாற்றியது. “இவள்.. இவளை உனக்கு எப்படித் தெரியும். என் வாழ்க்கையையே நாசமாக்கியவள்!” என்றான் நிலத்தில் கிடந்த செல்லில் ஒளிர்ந்த மித்ராவைக் காட்டி.

 

கைபேசியை எடுத்து, மீண்டும் தன் பாக்கெட்டில் வைத்தவாறே, “அர்ஜூன் அவன் வாயை மூடச் சொல். என் மனைவியைப் பற்றி தேவையில்லாமல் கதைத்தால் கொன்றே போடுவேன்!” என்று உறுமினான் கீர்த்தனன்.

 

ஏற்கனவே பொறுமையை இழந்திருந்தவனின் நிதானத்தையும் பறிக்கப் பார்த்தது விஸ்வாவின் பேச்சு.

 

“டேய்! அறிவு கெட்டவனே! இவள் இன்னொருத்தன் கூட வாழ்ந்தவள். என் வாழ்க்கையை கெடுத்தவள். இவளுக்காகவா இந்த ஓட்டம் ஓடுகிறாய்? நீயில்லாத இந்த நேரத்தில் அவள் எவனோடு எப்படி இருக்கிறாளோ..” என்றவனின் கன்னத்தில் கீர்த்தனனின் கை பளார் என்று இறங்கியது.

 

மது போதையும், புயலென விழுந்த அறையும் சேர சுழன்றுபோய் விழுந்தான் விஸ்வா. அப்போதும் அடங்காமல், “இந்த ஒழுக்கம் கெட்டவளுக்காகவா என்னை அடிக்கிறாய்? ஒரு வெள்ளைக்காரனோடு ஒரே வீட்டில் கிடந்தவள் அவள். எனக்குத் தெரிந்து ஒருத்தன்.. இன்னும் தெரியாமல் எத்தனையோ..” என்றவனின் சட்டையைக் கொத்தாகப் பற்றிய கீர்த்தனன், தன் பலம்கொண்ட மட்டும் விளாசித் தள்ளினான்.

 

அர்ஜூன் முதல்கொண்டு அங்கிருந்த யாராலுமே அவனை தடுக்க முடியாமல் போனது. அந்தளவுக்கு மனைவியை பற்றிய பேச்சு அவனை மூர்க்கனாக்கியிருந்தது. உடலளவில் அவனை எதிர்க்கும் வலு அற்றவனோ நஞ்சென வார்த்தைகளை கக்கினான்.

 

“ஏன்டா? இவ்வளவு பெரிய கோபக்காரனா நீ? அவளை பற்றி ஒருவார்த்தை சொன்னா குத்துதா உனக்கு? அப்போ அவளிடமே போய்க் கேளுடா, நான் சொன்னது பொய்யா இல்லையா என்று. அவள் இல்லை என்று சொன்னால் அதற்கு பிறகு வந்து என்னை அடி!” என்றான் அடங்காது.

 

“நான் எதற்கு அவளிடம் கேட்க வேண்டும்? என் மனைவியை பற்றி எனக்குத் தெரியும். உன்னை மாதிரி நம்பி வந்தவளை நல்லபடியா வைத்திருக்கத் தெரியாத ஈனப்பிறவி என்று நினைத்தாயா என்னை?” என்றவாறே, வெறிகொண்டு அவனைத் தாக்கியவனை பெரும்பாடு பட்டுத் தடுத்தான் அர்ஜூன்.

 

ஆனால், விஸ்வாவோ அப்போதும் அடங்க மறுத்தான்.

 

“ஆமாம்டா! நான் மனைவியை ஒழுங்கா வைத்திருக்க தெரியாதவன் தான். ஆனால், என் மனைவி என்னோடு மட்டும் தான் வாழ்ந்தாள். ஆனால் உன் மனைவி அப்படியா?” என்று கொதித்தவனின் வாயில், கீர்த்தனன் ஓங்கி விட்டான் ஒரு குத்து.

 

அதற்குமேலும் வாயை திறக்கவே முடியாமல் இரத்தம் கொட்டத் தொடங்க, புயலென அங்கிருந்து வெளியேறினான் கீர்த்தனன்.

 

 

error: Alert: Content selection is disabled!!