அதே வேகத்தில் வீட்டுக்குச் சென்றவனை தூக்கக் கலக்கத்தோடு வரவேற்றாள் மித்ரா. “இன்னும் உறங்காமல் என்ன செய்கிறாய்?” என்று சிடுசிடுத்தபடி, சட்டையைக் கழட்டி அழுக்கு உடைகள் போடும் கூடைக்குள் எறிந்தான்.
அதில் கிடந்த இரத்தக் கறையைக் கண்டதும் பயந்து பதறிப்போனாள் மித்ரா.
“என்ன நடந்தது கீதன்? இதென்ன சட்டையெல்லாம் இரத்தம்?”
“ஒன்றுமில்லை!” என்றவன், தொப்பென்று கட்டிலில் விழுந்து கண்களை மூடிக்கொண்டான்.
அவன் கையிலும் இரத்தம் கசிவதை கண்டு, “ஐயோ..கையிலும் காயம் பட்டிருக்கிறது. கேட்டால் ஒன்றுமில்லை என்கிறீர்கள்?” என்றாள் பயந்துபோய்.
அப்போதுதான் அவனும் தன் கையை தூக்கிப் பார்த்தான். காயத்தைக் கண்டுவிட்டு, “ப்ச்!” என்று எரிச்சலோடு எழுந்து குளியலறைக்குள் புகுந்து ஒரு குளியலைப் போட்டுவிட்டு வெளியில் வந்தான்.
அப்போதும், கவலை அப்பிய முகத்தோடு கட்டிலில் அமர்ந்திருந்தாள் மித்ரா. “அதுதான் ஒன்றுமில்லை என்று சொன்னேனே..” என்று, அவளருகில் அமர்ந்து அவளை இழுத்துத் தன் தோளில் சாய்த்துக்கொண்டான்.
கொதித்துக்கொண்டிருந்த மனதுக்கு மனைவியின் அருகாமை பெருத்த ஆறுதலைக் கொடுக்க, கையின் இறுக்கத்தை இன்னுமே கூட்டினான்.
“என்னப்பா?” என்று இதமாகக் கேட்டாள் அவள்.
விஸ்வா பற்றி ஒன்றும் சொல்லாமல், “அது.. ஒரு சின்னப் பிரச்சனை. ஒருத்தன் தேவையில்லாமல் கதைத்தானா.. கோபத்தில் அடித்துவிட்டேன்.” என்றான் அவன்.
படக்கென்று அவனது கையணைப்பில் இருந்து எழுந்து, “என்னது அடித்தீர்களா? அவன் போலிசுக்கு போனால் என்னாகும்?” என்று அதிர்ச்சியோடு கேட்டாள் அவள். கணவன் ஒருவனை அடித்தான் என்பதை நம்பவே முடியவில்லை.
மீண்டும் அவளை தன் அணைப்புக்குள் கொண்டு வந்தபடி, “என்ன ஆகும்?” என்று அலட்சியமாக அவன் கேட்க, “இது இலங்கை இல்லை கீதன். சட்டென்று யார் மேலும் கைவைக்கக் கூடாது. அப்படி அடிக்கும் அளவுக்கு என்னதான் நடந்தது?” என்று விடாமல் வினாவினாள் மித்ரா.
சற்றே கண்டிப்பானவனே தவிர அவன் கோபக்காரன் அல்ல! நிதானமானவன், பொறுமையானவன் என்பதை அவனோடு வாழ்ந்து உணர்ந்துகொண்டவளுக்கு, அடிக்குமளவுக்கு போயிருக்கிறான் என்றால் விஷயம் அவன் சொல்வதுபோல் ஒன்றும் இல்லாதது அல்ல என்பதும் விளங்கியது.
“அதுதான் ஒன்றுமில்லை என்று சொன்னேனே. பிறகும் திரும்பத் திரும்ப அதையே நோண்டினால் என்ன அர்த்தம்?” என்று விஸ்வா மேலிருந்த எரிச்சலில் அவள்மேல் எரிந்து விழுந்தான் கீர்த்தனன்.
மித்ராவின் தேகமே ஒருகணம் நடுங்கியது! எப்போதும் கனிவையும் காதலையும் மட்டுமே காட்டும் கணவனின் கோபத்தில் கண்ணீர் கண்களில் நிறைந்துவிட, அடிவாங்கிய குழந்தையாக அவனிடமிருந்து விலகினாள்.
அவனுக்கே ஒருமாதிரி ஆகிவிட்டது. தரம் கெட்ட ஒருவனின் பேச்சை கேட்டு, வயிற்றில் பிள்ளையோடு இருப்பவளிடம் கோபத்தை காட்டிவிட்டானே! மீண்டும் தன் மேலேயே அவளை சாய்த்துக்கொண்டு முதுகை இதமாக வருடிக்கொடுத்தான். “ஏற்கனவே எரிச்சலில் இருக்கிறேன். இதில் நீ விடுத்து விடுத்துக் கேட்டதும்.. அதுதான்.” என்றான் தன் கோபத்துக்கான காரணத்தை சொல்கிறவனாக.
அவளும் கண்ணீர் அடங்கிப் புன்னகைக்க, இப்படி தன்னுடைய சின்னக் கோபத்தை கூட தாங்க முடியாமல் கண்ணீர் உகுப்பவளா அப்படி ஒரு செயலைச் செய்திருப்பாள் என்று மனதுக்குள் மருகியவன், தாங்க முடியாமல், “உன்னைப் போய் அப்படிச் சொல்லிட்டானே! எனக்கு வந்த கோபத்துக்கு அவனை கொன்றே போட்டிருப்பேன். அர்ஜூன் தான் தடுத்துட்டான். திரும்பப்போய் அவனை அடித்து நொறுக்கிவிட்டு வந்தால் என்ன என்று இருக்கிறது.” என்றவனின் முகத்தில் ஜொலித்த கோபத்தில் சற்றே பயந்துபோனாள் மித்ரா.
அதை அடக்கிக்கொண்டு, “என்னைப் பற்றியா? யார் என்ன சொன்னது?” என்று வினவினாள்.
“அது.. விஸ்வா என்று ஒருத்தன் அர்ஜூனின் நண்பன்…” எனும்போதே மித்ராவின் முகத்தில் மெல்லிய திகில் பரவத் தொடங்கியது.
அதைக் கவனியாதவனோ, “அவன் சொல்கிறான் நீ கல்யாணத்துக்கு முதலே தப்பாக நடந்தவளாம். யாரோ ஒருத்தன் கூட.. ச்சே.. அதையெல்லாம் என் வாயால் சொல்லவே பிடிக்கவில்லை மித்து. இதைப்பற்றி நாம் என்றைக்குமே பேசவேண்டாம். நீயும் இனிக் கேட்கக் கூடாது!” என்றபடி அவளின் முகத்தைப் பார்த்தவனின் விழிகள் அங்கேயே தங்கியது.
விழிகளில் அச்சம் எட்டிப் பார்க்க, முகமெல்லாம் கலக்கம் நிறைந்திருக்க மித்ராவின் மேனி நடுங்கிக்கொண்டு இருந்தது. அதோடு, அவள் இதயத்தின் படபடப்பு அவனுக்கே கேட்டது.
அந்தப் பதட்டமும் படபடப்பும் அவனுக்குள்ளும் தொற்ற, “என்ன மித்து? ஏன் இப்படி இருக்கிறாய்? உடம்புக்கு ஏதாவது செய்கிறதா? இதற்குத்தான் ஒன்றுமில்லை என்று சொன்னேன். விடாமல் என் வாயை பிடுங்கினாயே” என்று, அப்போதும் மனைவி தன்மேல் சுமத்தப்பட்ட அபாண்டமான பழியில் தவிக்கிறாள் என்றெண்ணியே பதறினான் அவள் கணவன்.
உடம்பெல்லாம் நடுங்க, “அவ..ன் சொ..ன்ன..து உண்மைதான்.” என்று சொன்னவளின் குரல் அச்சத்தில் நடுங்கியது!

