முற்று முழுதாகச் சிறுவர்களுக்கு என்றே உருவாக்கப்பட்டிருந்த அந்தக் கடையில் குழந்தைகளுக்கான உடைகள் முதல்கொண்டு, உண்ணும் உணவுவகைகள் தொடங்கி, விளையாட்டுப் பொருட்கள் என்று எல்லாமே கிடைக்கும் என்பதால் அங்குக் காரை விட்டான் சத்யன்.
கடைக்குள் சென்றதுமே, எப்போதும் அங்கு வந்து பழகிய சந்தோஷ் ஒரு இடத்தைக் கையால் காட்டி, மாமனிடம் இருந்து விடுபட முயற்சிக்கவும்,
“டேய் கள்ளா! வந்ததும் வராததுமாக உனக்குக் கார்ட்டூனா?” என்று சிரிப்போடு கேட்டான் சத்யன்.
குழந்தைகளுடன் கடைக்கு வரும் பெற்றவர்கள் சிரமமின்றிப் பொருட்களை வாங்குவதற்கு இலகுவாக ஒவ்வொரு தளத்திலும், தனியாக ஒரு பகுதி பிரிக்கப்பட்டு, அங்கே தொலைகாட்சி பொருத்தப்பட்டு, சிறுவர்களுக்கு ஏற்ற வகையில் இருக்கைகளும் போட பட்டிருந்தது.
அங்குச் செல்லும் ஆசையில் தலையை மேலும் கீழும் அசைத்த அந்தக் கள்ளனும் மாமனிடம் மயக்கும் புன்னகையைச் சிந்த, “அக்கா, நீ தேவையானதுகளை வாங்கு. நான் இவனை டிவியின் முன்னால் இருத்திவிட்டு வருகிறேன்.” என்றுவிட்டு சத்யன் செல்ல, ஒரு தலையசைப்போடு வண்டிலை தள்ளிக்கொண்டு சென்றாள் மித்ரா.
அவள் உணவுப் பொருட்கள் பக்கம் செல்லவும், வித்தியின் பார்வையோ ஆடைகள் பக்கம் சென்றது. “நீ இங்கே பார் அக்கா. நான் சந்துவுக்கு ‘ஸ்பைடர் மான்’ உடைகள் ஏதாவது புதிதாக வந்திருக்கிறதா என்று பார்க்கிறேன்.” என்றபடி அகன்றாள் அவள்.
சுவிசில் இருக்கும் மகள் கவிதாவின் ஒன்பது மாத பெண் குழந்தைக்கு ஏதாவது வாங்கலாம் என்று மகனோடு அதே கடைக்கு வந்திருந்தார் பாக்கிலட்சுமி. அடுத்தவாரம் அங்குச் செல்கையில் வெறும் கையோடா போக முடியும்?
அவரைக் கூட்டிக்கொண்டு வந்தவனோ, “உங்களுக்குப் பிடித்ததைப் பாருங்கள் அம்மா. காசைப் பற்றி யோசிக்க வேண்டாம்.” என்றுவிட்டு வேறுபக்கம் சென்றுவிட்டான்.
தங்கை முதன் முதலாக ஒரு பெண் குழந்தையைப் பெற்று எடுத்திருக்கிறாள். தாய்மாமன் என்று இருப்பவன், அந்தக் குழந்தைக்குப் பார்த்துப் பார்த்து ஆசையாசையாக நகை, உடை, செருப்பு என்று வாங்கித்தள்ள வேண்டாமா? அதை விட்டுவிட்டுக் காசைப் பற்றி யோசிக்காதீர்கள் என்று சொன்னால் மட்டும் ஆயிற்றா? என்று புளுங்கியவருக்கு, அவன் ஆண் குழந்தைகளுக்கான பகுதியில் நிற்பதைக் கண்டதும் இன்னும் எரிச்சல் தான் வந்தது.
கூடப்பிறந்தவளின் குழந்தையை விட எவளோ பெற்ற பிள்ளைதான் பெரிதாகத் தெரிகிறதா என்று பொருமியபடி திரும்பியவரின் பார்வையில் பட்டாள் மித்ரா.
பட்டநொடி புசுபுசு என்று ஆத்திரம் பொங்கியது.
இவளால் தானே இவ்வளவு பிரச்சினையும்! இல்லாவிட்டால் யமுனாவை நல்ல சீதனத்தோடு பெண் எடுத்திருப்பாரே! அவரின் திட்டங்கள் எல்லாவற்றையும் குலைத்து, மகனின் வாழ்க்கையையும் சீரழித்தது போதாது என்று, ஒரு பிள்ளையைப் பெற்றுப்போட்டு இனியும் அவரின் திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் முட்டுக்கட்டை போட்டுவிட்டாளே!
ஜாலக்காரி!
இனி சுவிசுக்குப் போனால் ஜெர்மனிக்கு திரும்ப வரும் சந்தர்ப்பம் அமையாது. ஆக, இவளுக்குச் சூடாகக் குடுப்பதற்கும், இவளிடம் இருந்து என் மகனைப் பிரிப்பதற்கும் இதை விட்டால் நல்ல சந்தர்ப்பம் அமையாது என்று எண்ணியவர், ஆத்திரத்தோடு அவளிடம் விரைந்தார்.
“என் மகனை வளைத்துப் பிடித்து அவன் வாழ்க்கையையே நாசமாக்கினாய். ஏதோ ஒரு நல்லகாலம் வேலை செய்யப்போய் அவன் உன்னிடம் இருந்து தப்பி வந்துவிட்டான் என்று பார்த்தால், விடாது சனி என்பதாக இன்னும் அவனைப் பிடித்துத் தொங்குகிறாயே, நீயெல்லாம் ஒரு பெண்ணா?” என்றார் ஆவேசமாக.
மகனுக்குத் தேவையான உணவு வகைகளை ஆராய்ந்து கொண்டிருந்தவள் முதுகுக்குப் பின்னால் கேட்ட கோபக் குரலில் திடுக்கிட்டுத் திரும்பினாள்.
அங்கே பாக்கியலட்சுமியை கண்டதே அதிர்ச்சியாக இருந்தது என்றால், அவர் சொன்னது பிறகுதான் புத்தியில் பட, இதென்ன அநியாயமான குற்றச்சாட்டு என்று திகைத்தாள்.
“எ..ன்ன சொல்கிறீர்கள்?”
“ம்.. நீ போடும் நாடகத்தைச் சொல்கிறேன். என் மகனை வாழவிடாமல் செய்யும் உன் கீழ்த்தரமான குணத்தைப் பற்றிச் சொல்கிறேன். உன் கெட்டித்தனம் எந்தப் பெண்ணுக்கும் வராதடியம்மா!” என்றார் அப்போதும் ஆத்திரமாக.
“நான் அப்படியானவள் இல்லை அ.. அம்மா. உங்கள் மகனுக்குப் பிடிக்கவில்லை என்றதும் விலகிவிட்டேனே. பிறகும் ஏன் இப்படியெல்லாம் பேசுகிறீர்கள்?” என்றாள் வேதனை நிறைந்த குரலில்.
“உன் மகனை அனுப்பி அவனை வாழவிடாமல் செய்துகொண்டு, அவனிடம் இருந்து விலகிவிட்டேன் என்று என்னிடமே சொல்கிறாயே, எவ்வளவு சாமர்த்தியம்? அதுசரி, நாடகமாட உனக்குச் சொல்லியா தரவேண்டும்? அதையெல்லாம் கரைத்துக் குடித்தவள் ஆயிற்றே நீ!”
கடவுளே…! நெற்றிப்பொட்டை அழுத்திவிட்டாள்.
அவள் என்ன நாடகம் ஆடினாள்? என்ன நடித்தாள்? உள்ளதை சொல்லப்போனால் தம்பி தங்கை முதல்கொண்டு அனைவரிடமும் பொய்யாகப் புன்னகையைப் பூசி நடிப்பவள் அவனிடம் மட்டும் தானே உண்மையாக இருந்தாள். அவனிடம் மட்டும் தானே மடை திறந்த வெள்ளமாக நேசம், பாசம், காதல் என்று அனைத்தையும் கொட்டினாள். அவன் அவளை வெறுத்து ஒதுக்கிய பிறகும் அவனுடைய மகன் தானே அவளுக்கு எல்லாமாகிப் போனான்.
அப்படியிருக்க இப்படிப் பேசுகிறாரே இவர்?
உள்ளம் வேதனையில் துடிக்க, “சந்தோஷ் உங்கள் மகனுக்கும் மகன்தான்..” என்று தழுதழுத்தவள், யாராவது வேடிக்கை பார்க்கிறார்களா என்று கலங்கிய விழிகளால் சுற்றுமுற்றும் பார்வையைச் சுழற்றினாள்.
“நிச்சயமாக இருக்காது! உன் பிள்ளை எங்கள் வீட்டு வாரிசாக இருக்கவே முடியாது!” என்றார் அவர் ஆங்காரமாக.
அதிர்ந்துபோய் அவரைப் பார்த்தாள் மித்ரா. எவ்வளவு நிச்சயமாக மறுக்கிறார். அந்த மறுப்பின் பின்னால் மகனின் பிறப்பல்லவா சந்தி சிரிக்கிறது.
அப்போது எதேர்ச்சையாகத் தமக்கையிடம் திரும்பிய சத்யன், அங்கு நின்ற பாக்கியலட்சுமியை கண்டதும் மித்ராவின் அருகில் விரைந்து வந்தான்.
“என் அக்காவோடு உங்களுக்கு என்ன பேச்சு?” என்று அவரை அதட்டினான்.


