“இவளோடு பேசவேண்டும் என்று எனக்கென்ன வேண்டுதலா? எப்படியோ பெற்ற பிள்ளையை வைத்து என் மகனை திரும்பவும் வளைக்கப் பார்க்கிறாளே, இவளிடம் சொல்லிவை. இனி அந்த வீட்டுப்பக்கம் இவள் பெற்ற பிள்ளை வரக்கூடாது என்று!” என்றார் அவர்.
ஆத்திரத்தில் முகம் இறுக, “வார்த்தைகளை அளந்து பேசுங்கள்! இல்லாவிட்டால் நடப்பதே வேறு!” என்று விரல் நீட்டி எச்சரித்தான் சத்யன்.
ஆட்கள் நிறைந்திருக்கும் கடையில், அதுவும் சற்றுத் தள்ளி மகன் நிற்கிற துணிவில் அவனுடைய எச்சரிக்கையை அலட்சியம் செய்து மித்ராவிடம் திரும்பினார் பாக்கியலட்சுமி.
“உன்னால் அவன் காதலித்த பெண்ணைக் கைப்பிடிக்க முடியாமல் நிற்கிறான். அவளோ ஆறு வருடமாக அவனுக்காகக் காத்திருக்கிறாள். இப்படி ஒரு பெண்ணின் பாவத்தைச் சம்பாதித்து நீ எப்படி நன்றாக இருப்பாய்? அவனை விட்டுத் தொலை. உனக்குப் புண்ணியமாகப் போகும். உனக்குத்தான் இந்த ஊரில் எத்தனையோ பேர் கிடைப்பார்களே.” என்று அவர் சொல்லி முடிக்க முதலே,
“ஏய்! வாயை மூடு! வயதில் பெரியவள் என்றும் பாராமல் அறைந்து விடுவேன்..” என்றபடி கையை ஓங்கிக்கொண்டு போன தம்பியின் மற்ற கையைப் பிடித்துத் தடுத்தாள் மித்ரா.
உள்ளுக்குள்ளோ நொருங்கிக்கொண்டிருந்தாள். அவன் இன்னொருத்தியை காதலித்தானா?
“விடக்கா என்னை!” என்று ஆவேசம் கொண்டு நின்றவனிடம், நனைந்த விழிகளோடு மறுப்பாகத் தலையை அசைத்தாள்.
அதற்குக் கட்டுப்பட்டாலும், பாக்கிலட்சுமியிடம் திரும்பி, “இன்றைக்கு உன் குடும்பமே வாழும் இந்தப் பணக்கார வாழ்க்கை என் அக்கா போட்ட பிச்சை! அதை மறந்துவிட்டு அவளைப் பற்றி ஏதாவது பேசினால் கொன்றே போடுவேன்! பணத்துக்காகப் பெற்ற மகனின் வாழ்க்கையையே நாசமாக்க நினைத்த உனக்கெல்லாம் என் அக்காவோடு பேசும் தகுதி கிடையாது. வாயை மூடிக்கொண்டு ஓடு. இல்லையானால்…!” என்று வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான் சத்யன்.
சத்யனின் சீறலை எதிர்பாராத பாக்கியலட்சுமிக்கு, சற்றுப் பயமும் தொற்றிக்கொண்டது . பின்னே, வாட்டசாட்டமாக நிற்கும் ஒரு இளைஞன் அறைந்தால் அவர் நிலை என்ன? மகன் கூப்பிடு தூரத்தில் நிற்கிறான் என்றாலும் அறை வாங்கிய பிறகுதானே அவன் வருவான்.
இருந்தாலும், நடுக்கத்தை மறைத்துக்கொண்டு, “இனியாவது உன் மகனின் உண்மையான அப்பாவை தேடு!” என்று மித்ராவின் மேல் மேலுமொரு அம்பை எய்துவிட்டு, அந்த இடத்தைவிட்டு வேகமாக அகன்றார். இல்லையில்லை ஓடினார்!
“பார் அது பேசுகிற பேச்சை.. விடக்கா என்னை…” என்றவனின் கை இன்னும் மித்ராவிடமே சிக்கியிருந்தது.
அந்தப் பிடியிலிருந்து விடுபடுவது எல்லாம் அவனுக்கு ஒரு விசயமே அல்ல. ஆனால், அது அன்பின் பிடியல்லவோ! தமக்கை கிழித்த கோட்டை என்றுமே தாண்டாதவனால் இன்றும் அது முடியவில்லை.
இதற்கு முதலும், ஆத்திரம் கொண்டும் ஆவேசம் கொண்டும் அவன் கொதித்தெழுந்த போதெல்லாம் வேண்டாம் வேண்டாம் என்று சொல்லி அவனை மறித்துத்தானே இன்று இந்த நிலையில் நிற்கிறாள். அன்றே இவர்களைத் தட்டிக் கேட்டிருக்க இன்று இந்த நிலை வந்திருக்குமா? என்று மனதுக்குள்ளே கோபம் கொண்டு கொந்தளித்தபோதும் அதை அவனால் தமக்கையிடம் காட்ட முடியவில்லை.
ஆனாலும் அந்தக் கொதிப்பினால் உண்டான சினத்தோடு அவன் அவளைப் பார்க்க, அவளோ சமைந்த சிலையாக அப்படியே நின்றாள். மனதுக்குள் மட்டும் பெரும் பிரளயமே நடந்து கொண்டிருந்தது.
அவரின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் நெருப்புத் துண்டங்களாய் அவளைத் தாக்கியதில் அனலில் விழுந்த புழுவாகத் துடித்துக்கொண்டிருந்தாள்.
இப்படி எதற்காக அவள் பெற்ற சிசுவை எல்லோருமாகச் சேர்ந்து பந்தாடுகிறார்கள்? அவனைப் பெற்ற வயிறும், நித்தமும் சுமக்கும் நெஞ்சமும் பற்றி எரிந்தது.
அவள் செய்தது பிழைதான். பெரும் தப்புத்தான். அதற்காக இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படி ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் கேட்பது? அபாண்டமான பழிச்சொற்களை எல்லாம் சுமப்பது? தெரியாமல் செய்த பிழைக்கு மன்னிப்பு என்பதே கிடையாதா?
“அக்கா.. அக்கா..! இங்கே பார். அந்த மனுஷி ஒரு லூசு. அதன் கதையை நீ காதிலேயே வாங்காதே.” சிலையாகி நின்றவளை பதட்டத்தோடு உலுக்கினான் சத்யன்.
அவனைத் திரும்பிப் பார்த்து வெறித்தாள் மித்ரா.
மனம் திகிலுற, “அக்கா…!” என்றவனின் கண்களில் தெரிந்த பரிதவிப்பிலும் வேதனையிலும், அதுவரை நேரமும் விழிகளில் அணைகட்டியிருந்த கண்ணீர் உடைப்பெடுக்க, “எனக்கு மட்டும் ஏன் சத்தி இப்படியெல்லாம் நடக்கிறது? அப்படி என்னடா பாவம் செய்தேன்?” என்று கேட்டவள், அதற்கு மேலும் தன் உடலை தானே சுமக்க முடியாதவளாக, தம்பியின் தோளில் சாய்ந்து விம்மினாள்.
அதே கேள்விதான் அவன் மனதிலும்! பதிலை யாரிடம் கேட்பது?
“அழாதேக்கா. நீ எந்தப் பாவவும் செய்யவில்லை. உன்னைத் தூக்கி எறிந்தவர்களுக்கு உன் அருமை தெரியவில்லை.” என்று தேற்றியவன், கூடப்பிறந்தும் அவளின் வேதனையைப் போக்கும் வகையற்று, கையாலாகதவனாக நிற்கிறேனே என்று தன்னையே வெறுத்தான்.
இனியும் அதே கையாலாகா தனத்துடன் இருக்க முடியாது. ஏதாவது செய்யவேண்டும்! செய்தே ஆகவேண்டும். ஆனால் என்ன செய்வது?
சிந்தனை ஓடத் தொடங்கவும், சிந்திக்கும் நேரம் இதுவல்ல என்று உணர்ந்து, தமக்கையின் தோள்கள் இரண்டையும் பற்றி, அவளைத் தன்னிடமிருந்து பிரித்தான்.
அவள் விழிகளையே பார்த்து, “அக்கா, இங்கே பார். இப்போது எதற்கு இந்தக் கண்ணீர். இப்படி அழும் அளவுக்கு என் அக்கா ஒன்றும் கோழை இல்லையே. எதையும் எதிர்த்துப் போராடி வாழத் தெரிந்தவள். அதனால் அழக்கூடாது! தான் நினைத்தது நடக்கவில்லை என்கிற கோபத்தில் கத்திவிட்டுப் போகிறது அந்த மனுசி. பெற்ற மகனையே என் பிள்ளை இல்லை என்று சொன்னவரின் தாய் இதைவிட மேலாக இருக்க முடியாது. தகுதியற்றவர்களுக்காக நீ கண்ணீர் சிந்தக் கூடாது.” என்று, அதட்டலையும் கனிவையும் கலந்து தமக்கையை நிலைப்படுத்தினான் சத்யன்.
அவன் பேச்சில் மனம் ஆறாதபோதும், அவள் பட்டது ஒன்றும் ஆறும் காயமல்ல என்று தெரிந்தாலும், ஒருநிமிடம் கட்டுப்பாட்டை இழந்திருந்தவள் உடனேயே தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.


