தனிமைத் துயர் தீராதோ 3 – 3

கண்ணீரைத் துடைத்துக்கொண்டு அவனைப் பார்த்து புன்னகைத்தாள். இந்த நடிப்பொன்றும் அவளுக்குப் புதிது அல்லவே! பலவருடப் பழக்கம் அன்றோ!

ஆனால், அந்த நொடியில் அவள் மனம் என்ன பாடுபடும் என்பதை அறிந்தவனும், அந்த நேரத்தில் ஒன்றும் செய்ய இயலாமல் தான் நின்றான்.

அதோடு, அவசரப்பட்டோ ஆத்திரப்பட்டோ தீர்க்கக்கூடிய காரியமும் அல்லவே தமக்கையின் துயர்!

வரமாட்டேன் என்று சொன்னவளை வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு வந்த தன்னையே நொந்தபடி, “தேவையானதுகளை எடுத்துவிட்டாய் என்றால் வா போகலாம்.” என்றான்.

“வாங்கியதே போதும். வண்டிலில் இருப்பதற்கு மட்டும் பணத்தைக் கொடுத்துவிட்டு வித்தியையும் கூட்டிக்கொண்டு வா. நான் சந்தோஷோடு காருக்குப் போகிறேன்..” என்றவள், அவனிடம் கார் சாவியை வாங்கிக்கொண்டு மகன் இருந்த இடத்துக்கு நடந்தாள்.

அதேநேரம், அங்கே குழந்தைகளுக்கான ஆடைப்பகுதியில் நின்ற கீர்த்தனனுக்கு அங்கிருந்த ஒரு முழுக்கை ‘டி-ஷர்ட்’ மகனுக்கு நன்றாக இருக்கும் என்று தோன்றிவிட, ஆவலோடு அதை எடுத்துப் பார்த்தான். அதன் நெஞ்சுப் பகுதியில் ஒரு குழந்தை பந்தினை காலால் அடிப்பது போன்று இருந்த படத்தைக் கண்டதும், மகனின் நினைவில் அவன் முகம் மிருதுவாயிற்று!

அதைச் சற்றே உயர்த்திப் பிடித்து எதிரே இருந்த கண்ணாடியின் ஊடாக மகனுக்குப் பொறுத்தமாக இருக்குமா என்று பார்த்தவனின் விழிகள் ஆச்சரியத்திலும் சந்தோசத்திலும் விரிந்தது. காரணம், அவன் பின்னே இருந்த தொலைக்காட்சியின் அருகில் வெகு மும்முரமாக மூழ்கிப்போய் இருந்த மகன் கண்ணாடியில் தென்பட்டான்.

வாயில் நீலநிற சூப்பி(நிப்பிள்) இருக்க, அதை மிக ஆர்வமாகச் சூப்பியபடி, கருவண்டு விழிகளை விரித்தபடி டிவியையே வைத்த கண் வாங்காது பார்த்திருந்த மகனின் செயலில் சிரிப்பும், அவனை அப்படியே அள்ளியெடுத்து அணைத்து முத்தமிடும் ஆசையும் ஒருங்கே தோன்றியது அவனுக்கு.

இங்கே எங்கே வந்தான்? யாரோடு? என்று எண்ணியதும், அவனை அறியாமலேயே ஒரு பரபரப்புத் தொற்ற, அந்த இடத்தை வேகமாக விழிகளால் அலசினால். பணம் செலுத்துவதற்கு நின்றுகொண்டிருந்த சத்யனைக் கண்டதும் மனதினில் மெல்லிய ஏமாற்றம் படர்ந்தது.

அந்த ஏமாற்றத்தினால் தன்னையே வெறுத்தவன், அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு மகனிடம் மிக வேகமாக விரைந்தான்.

“சந்துக்குட்டி…” என்று அவன் அழைக்கையிலே, “சந்தோஷ்…” என்று அழைக்கும், மென்குரல் ஒன்று அவன் செவிகளில் மோதியது.

தேகமெல்லாம் சிலிர்க்க, விழிகள் அவனை அறியாமலேயே அந்தக் குரல் வந்த திசையை நோக்கின.

அங்கே, அவளும் எதிர்பாராமல் அவனைச் சந்தித்ததில் உண்டான ஆனந்த அதிர்ச்சியில் முகமெல்லாம் விகசிக்க அவனையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள்.

யாரின் நினைவுகள் அவளை இன்னும் உயிர்ப்போடு நடமாட வைக்கிறதோ.. யாரின் எண்ணங்கள் அவளின் இதயத்தின் மூளை முடுக்கெல்லாம் நிறைந்து வழிகிறதோ.. அவனைக் கண்டதில் அவளை அறியாமலேயே இதழ்கள், “கீதன்…” என்று மிக மிக மென்மையாக, உயிரை வருடும் குரலில் உச்சரித்தன.

ஒருகணம் தன்னை மறந்து, அவர்களுக்குள் இருந்த பிணக்குகளை மறந்து, அந்த அழைப்பில் உறைந்துபோனான் மித்ராவின் கீதன்!

மித்ராவுக்கோ, அவளின் ஊனிலும் உயிரிலும் கலந்தவனை, அல்லும் பகலும் அவளது நினைவுகளில் நின்று ஆட்சி செய்பவனை, கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்குப் பிறகு பார்த்ததில் நெஞ்சு விம்மிப் பூரித்தது.

சற்றுமுன் அவன் அன்னை சொன்னது நினைவினில் இருந்தாலும், அவனைக் கண்டதும் உருகும் உயிரையும் உள்ளத்தையும் அவளால் ஒன்றுமே செய்ய இயலவில்லை. அவனருகில் தன் வசமிழப்பது தானே அவள் இயல்பே!

ஆனால், அவனுக்கு மட்டும் பலநூறு பெண்களில் அவளும் ஒருத்திதான் போலும்! எந்தவித தடுமாற்றமும் இன்றி ஊடுருவும் பார்வையோடு அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

அதுசரி! அவன் எதற்கு அவளைப் பார்த்து தடுமாற வேண்டும்? அவன் மனதில் தான் இன்னொருத்தி இருக்கிறாளே! அதுவும் ஆறு வருடங்களாக!

அந்த நினைவு வந்ததும் அதுவரை பொங்கிய அனைத்து உணர்வுகளும் அப்படியே வடிய, நெஞ்சமெல்லாம் விரக்தியும் வேதனையும் குடிகொண்டது. மலர் முகம் கசங்க, ஆற்றாமையோடு அவனைப் பார்த்தவளுக்கு, அவனருகில் தான் தன் கட்டுப்பாட்டை இழந்துகொண்டு இருப்பது தெரிந்தது. உடனேயே பார்வையை விலக்கிக்கொண்டாள்.

உயிரைக் கொல்லும் வலியையும், இதயத்தைக் கசக்கிப் பிழியும் வேதனையையும் தொண்டைக் குழிக்குள் விழுங்கிக்கொண்டு சென்று, மகனைக் கைகளில் தூக்கி நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள். அவள் வாழ்க்கையில் இனி அவன் மட்டும்தான் என்று தோன்றிடவும் அழுகையில் துடித்த இதழ்களால் மகனின் கன்னத்தில் ஈர முத்தம் ஒன்றை அழுத்தமாகப் பதித்தாள்.

இறுக்கி அணைத்துக்கொண்ட மகனின் அருகாமையில் தன்னைத் திடப்படுத்த முயன்றபடி எதிரில் நின்றவனை நிமிர்ந்து பார்த்தாள். “உங்களின் தி..திருமணத்துக்கு என்னுடைய வா..ழ்த்துக்கள்!! நானும் என் மகனும் உங்..கள் சந்தோசத்துக்கு இடையூறாக என்றைக்குமே வ..ரமாட்டோம்.” திடமாகச் சொல்ல முயன்று தோற்றாள்.

உயிரினும் மேலாக நேசிப்பவனை இன்னொருத்திக்கு விட்டுக் கொடுப்பது ஒன்றும் அவ்வளவு இலகு அல்லவே! சொன்ன வார்த்தைகளின் கனம் தாங்க முடியாமல் கீழுதட்டைப் பற்களால் பற்றியபடி, அதற்குமேலும் அவன் முன்னால் நிற்கமுடியாமல் அங்கிருந்து வேகமாக மகனோடு விரைந்தாள்.

தாயின் தோள் வளைவுக்கால் தெரிந்த தந்தையைக் கண்டுவிட்ட சந்தோஷின், “மம்மா… பப்பா…” என்ற மழலைக் குரல் இருவரின் உயிரையும் சென்று ஒருங்கே தாக்கியது.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock