“இப்போதுதானே எல்லாம் புரிகிறது. இந்தக் கேவலத்தை மறைக்கத்தான், அந்தக் கண்ணீரும் உருக்கமான பேச்சுமா? அன்றே நான் யோசித்து இருக்கவேண்டும், கட்டிய புருசனிடம் மறைக்குமளவுக்கு அப்படி என்ன நடந்திருக்கும் என்று. ஆனால், நான்தானே நீ என்ன சொன்னாலும் நம்பும் மூடனாக இருந்தேன்.” என்றவன், எதைக் குறித்துப் பேசுகிறான் என்பதையே சிந்திக்க இயலாதவளாய் உறைந்துபோய் நின்றிருந்தாள் மித்ரா.
அவளின் அந்த தோற்றம் அவனுக்குள் வெறியை கிளப்பியது. “எதற்கடி இந்த அப்பாவி நடிப்பு? இன்னும் என்னை ஏமாற்றவா? போ வெளியே!” என்றான் கையை கதவுப் பக்கமாக நீட்டி.
அவளால் அசையக்கூட முடியவில்லை. நடுங்கிக்கொண்டு நிற்க, “இனிமேல் என் அறைக்குள்ளோ, என் கண்முன்னாலோ நீ வரவே கூடாது! வந்தாய்… உன்னை கொன்றே போடுவேன்!” என்று, ஆட்காட்டி விரலை நீட்டி உறுமியவனின் உறுமலில் அவள் நடுங்க புயலென அங்கிருந்து வெளியேறினான் அவன்.
நின்ற இடத்திலேயே தொய்ந்து விழுந்தவள், சிந்திக்கும் திறனைக்கூட இழந்தவளாக அப்படியே கிடந்தாள்.
கீர்த்தனனுக்கோ நெஞ்சு வெடிக்கும் போலிருக்க, தாய் மடியை தேடும் சேயாக அன்னைக்கு அழைத்து கதறத் தொடங்கினான். தான் பட்ட அவமானத்தை, தனக்கு நடந்த நம்பிக்கை துரோகத்தை, கல்லாய் கனத்த நெஞ்சின் பாரத்தை அன்னையிடம் கொட்டித்தீர்த்தான்.
அதன் பிறகு வந்த நாட்களில் கீர்த்தனன் முற்றிலுமாக மாறிப்போனான். அவளை ஒரு மனுஷியாகவோ.. ஏன் உயிருள்ள ஒருத்தியாகவோ மதிக்கவே இல்லை. அவள் எத்தனையோ தடவைகள் பேச வந்தபோதும், தன் நிலையை விளக்க வந்தபோதும் முகமே கொடுக்காமல் விலகிப் போனான்.
அவனுடைய இந்த புறக்கணிப்பை தாங்க முடியாமல், அவன் சொன்னதையும் மீறி ஒருநாள் அவன் அறைக்குச் சென்றாள் மித்ரா.
தேகம் விறைக்க ஆத்திரத்தோடு நிமிர்ந்தவனிடம், யாசகமாக கைகள் இரண்டையும் ஏந்தி கண்ணீர் வழியும் விழிகளால் இறைஞ்சி, “தயவுசெய்து நான் சொல்வதை ஒருமுறை கேளுங்கள் கீதன்..” என்றவளின் பேச்சை வேகமாக இடைமறித்தான் கீர்த்தனன்.
“வெளியே போ!” என்று உறுமினான்.
“ப்ளீஸ் கீதன்.” கண்களில் கண்ணீரோடு அவள் இறைஞ்ச,
“இந்த வீடு நீயும் நானும் சேர்ந்துதான் வாங்கியது. அந்த உரிமையில், நீ இப்படி என் முன்னால் வந்து வந்து நின்று நீலிக்கண்ணீர் வடிப்பாய் என்றால் நான் வெளியில் போய்விடுவேன். உன்மூலம் கிடைத்த விசாவுக்குப் பதிலாக இந்த வீட்டை நீயே வைத்துக்கொள். கடனை நானே கட்டுகிறேன்.” என்று அவன் சொன்னபோது,
“இல்லையில்லை. அப்படி எதுவும் செய்துவிடாதீர்கள். இனி நான் உங்கள் முன்னிலையில் வரவே மாட்டேன்.” என்று அவசரமாகச் சொல்லிவிட்டு, அழுதுகொண்டு அங்கிருந்து வெளியே ஓடியேபோனாள் மித்ரா.
அடுத்த நாளே மாடிக்குத் தன் பொருட்களோடு குடிபோனான் கீர்த்தனன்.
“அண்ணா.. அண்ணா, இவ்வளவு நேரமாக உள்ளே என்ன செய்கிறீர்கள்? கதவைத் திறவுங்கள், எனக்கு பயமாய் இருக்கிறது.” திடீரென்று ஒரு குரல் ஒலிக்கவும், நினைவுகள் கலைய நிதர்சனம் உறைத்தது அவனுக்கு.
“இதோ.. இதோ வருகிறேன் பவி..” என்று குரல் கொடுத்துவிட்டு, நீண்ட நெடிய மூச்சுக்களை இழுத்து விட்டுவிட்டு வெளியே வந்தான்.
வந்தவனின் கண்களில் தெரிந்த சிவப்பில், “என்னண்ணா? ஏன் ஒரு மாதிரி இருக்கிறீர்கள்?” என்று கேட்டாள் பவி.
“ஒன்றும் இல்லைமா. கொஞ்சம் பழைய நினைவுகள்.” வறண்ட குரலில் சொன்னான்.
கேட்கலாமா வேண்டாமா என்று தடுமாறிவிட்டு, “அண்ணா, அது அண்ணி மேல் இருந்த கோபம் இன்னும் போகவில்லையா?” என்று கேட்டவளிடம் என்ன சொல்வது என்று தெரியாமல், மனதை மறைத்து புன்னகைத்தான் கீதன்.
இன்று மன்னிக்கத்தான் மனம் துடிக்கிறது.. அவள்மேல் இரக்கமும் சுரக்கிறது. ஆனால் ஒழுக்கத்தை உயிராக மதிக்கும் ஒரு ஆண்மகனின் மனமாக இன்னொரு பக்க மனம் முரண்டியது.
தங்கை தன் பதிலுக்காக ஆவலோடு காத்திருப்பது தெரிய, “பவிம்மா ப்ளீஸ்… இப்போதைக்கு இதைப்பற்றி எதுவும் பேசாதே.” என்று பேச்சை முடித்தான் அவன்.
அவளிடம் சுலபமாக பேச்சை முடித்தவனால் தன் மனதை, அது மித்ராவுக்காக சிந்திப்பதை தடுக்கவே முடியவில்லை.
அன்று அவள் சொல்லவந்த விளக்கத்தை தான் கேட்டிருக்கலாமோ? கேட்டிருக்க இவ்வளவு தூரத்துக்கு வந்திருக்காதோ என்று நினைக்கையிலேயே, அன்று அது தன்னால் முடிந்திருக்காது என்று விளங்கியது.
உயிராய் நினைத்த மனைவி, பொய்த்துப் போனாள் என்பதே அன்று பெருத்த அடி அவனுக்கு. இதில் மனைவியிடம் நீ இன்னொருவனோடு வாழ்ந்தாயா என்று கேட்கும் நிலையில் தான் நிற்கிறோம் என்பதே அவனைக் கொன்றது. இதெல்லாம் போதாது என்று அவள் வேறு அதற்கு ஆம் என்று சொல்லி, அவனது மொத்த நம்பிக்கையையும் அல்லவோ குழிதோண்டிப் புதைத்திருந்தாள்.
அது மட்டுமா, அத்தனை நாட்களாக இன்பமாக கழிந்த தாம்பத்யத்தின் மீதும் சேற்றை வாரி அடித்திருந்தாளே. அன்று அவன் எப்படித் துடித்தான். அன்றென்ன.. இதோ இன்று நினைக்கையில் கூட அவன் நெஞ்சம் படும்பாடு.. அதை யாரால் உணர முடியும்?
ஆனாலும், இன்று ஆத்திரமும் அவமானமும் சமன்பாட்ட நிலையில், அந்த வலியையும் தாண்டிய நேசம் அவளுக்காக சிந்திக்கத் தூண்டியது. அவள் வாழ்க்கையில் நடந்த பிசகுகளுக்கான காரணங்களை ஊகிக்க முற்பட்டான்.
இயல்பிலேயே தவறானவளாக இருந்திருக்க, அவன் சட்டப்படியாக அவளைப் பிரிந்தபிறகும் தவம் போன்ற இந்தத் தனிமை வாழ்க்கைக்கு அவசியம் இல்லையே. இன்றுவரை அவனைக் கண்டதும் உருகிக் கரையவும் தேவையில்லையே!

