அவன் எத்தனையோ தடவைகள் அவளைத் தூக்கியெறிந்த போதிலும், எடுத்தெறிந்து பேசிய போதிலும் காலை சுற்றும் நாய்க்குட்டியாக அவனையே சுற்றிச் சுற்றி வரவேண்டிய அவசியம் என்ன?
கேள்விகள் மனதில் எழத் தொடங்க விடைகளை தேடத் தொடங்கினான்.
அனைத்துப் புதிர்களும் விடுவிக்கப்பட்டு, அவன் வாழ்வில் நடக்கும் இந்தப் போராட்டத்துக்கு ஒரு முடிவு வரவேண்டுமாயின், ஆதியோடு அந்தமாக மித்ரா வாழ்க்கையில் நடந்தவைகள் அனைத்தும் அவனுக்குத் தெரியவேண்டும். அது தெரிந்த ஒரே ஆள் சத்யன்! உடனேயே அவனுக்கு அழைத்தான்.
அழைப்பை ஏற்றவனோ வேலை விசயமாக பெர்லினில் இருப்பதாகச் சொல்ல, இவனுக்கோ காத்திருந்து கேட்டுக்கொள்ளும் பொறுமை இல்லை.
“மிகவும் அவசரம் என்றால் இப்போதே சொல்லுங்களேன்..” சாதரணமாகக் கேட்க முயன்றாலும், ஏதும் நல்ல விசயமோ என்று மனம் பரபரத்தது சத்யனுக்கு.
“அது செல்லில் பேசமுடியாது. நீ உடனேயே இங்கே வா!” என்று கட்டளையாகச் சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்தான் கீர்த்தனன்.
என்ன, ஏது என்று எதிர்பார்ப்பில் மனம் ஆர்பரிக்க முடிந்தவரை வேகமாக வேலைகளை ஒதுக்கிக்கொண்டு அந்த சனியே ‘பொன்’னுக்கு புறப்பட்டான் சத்யன்.
அன்று காலையில் எழுந்ததுமே மகனை அழைக்கச் செல்லும் சாக்கில் மித்ராவைப் பார்க்க மனம் துடித்தது கீர்த்தனனுக்கு. ஆனாலும், இனியாவது அனைத்தையும் ஆதியோடு அந்தமாக அறிந்துகொண்டு ஒரு உறுதியான முடிவை எடுத்துவிட்டுத்தான் அவளைப் பார்ப்பது என்று உறுதிபூண்டான்.
அதனால் பவித்ராவோடு சென்று, “நீபோய் சந்துவை கூட்டிக்கொண்டு வா பவி. வெளியே எனக்கு ஒரு வேலை இருக்கிறது. ஒரு மணித்தியாலம் கழித்து வந்து உங்கள் இருவரையும் அழைத்துப்போகிறேன்.” என்றான்.
“எதற்கு அவ்வளவு நேரம் அண்ணா? நான் இப்போதே சந்துவை கூட்டிக்கொண்டு ஓடிவருகிறேன்.” என்றாள் பவி.
“உன் அ.. அவள் மித்ரா அவ்வளவு விரைவாக உன்னை விடமாட்டாள். அதனால் ஒரு மணித்தியாலம் கழித்தே வருகிறேன்.” என்றவன், அவளை இறக்கி விட்டுவிட்டுச் செல்ல, மித்ரா வீட்டுக்குச் சென்றாள் பவித்ரா.
அழைப்புமணி ஓசை கேட்டபோது, ஆர்வத்துடன் ஓடிவந்து திறந்தவளின் முகம் பவித்ராவைக் கண்டதும் வாடினாலும், அவள் தன் வீட்டுக்கு வந்திருக்கிறாள் என்றதும் மீண்டும் மலர்ந்தது.
“ஹேய் பவி! வாவா.. உள்ளே வா..” என்று கைபிடித்து உள்ளே அழைத்துச் சென்றாள்.
சட்டப்படியாக பிரிந்த கணவனின் தங்கையை இவ்வளவு அன்போடு வரவேற்கும் அவளை எண்ணி உள்ளூர ஆச்சர்யம் எழுந்தாலும், “அது அண்ணி.. நான் சந்துவை கூட்டிக்கொண்டு போக வந்தேன். எங்கே சந்து?” என்றாள், மித்ரா என்ன சொல்வாள் என்பதை அறியும் விதமாக.
“அது எப்படி? முதன் முறையாக வீட்டுக்கு வந்தவளை உடனேயே அனுப்ப முடியுமா? நான் உன் அண்ணாவிடம் சொல்கிறேன். நீ இரு .” என்று அவளை சோபாவில் அமர்த்தி தானும் அருகில் அமர்ந்துகொண்டாள் மித்ரா.
கையோடு கைபேசியை எடுத்து, ‘பவித்ரா இங்கே கொஞ்சநேரம் இருக்கட்டும்..’ என்று மெசேஜையும் கீர்த்தனனுக்கு அனுப்பிவைத்தாள். அவர்கள் இருவருக்குள்ளும் இருக்கும் ஒற்றுமையை எண்ணி வெளிப்படையாகவே வியந்துபோய் பார்த்தாள் பவித்ரா.
“என்ன அப்படிப் பார்க்கிறாய்?” புன்னகையோடு மித்ரா கேட்க, “ஒன்றுமில்லை அண்ணி.” என்று சமாளித்தாள்.
சந்தோஷை பவித்ரா உரக்க அழைக்க, அதுவரை அறைக்குள் எதையோ விளையாடிக்கொண்டு இருந்த சந்தோஷும், “அத்தை..” என்றபடி ஓடிவந்தான். அவர்கள் மூவருக்குமான அதன்பிறகான நேரம் வெகு இனிமையாகக் கழிந்தது.
இலங்கையை பற்றி, அவர்களின் ஊரை பற்றி, அவளின் படிப்பை பற்றி இப்படி என்னென்னவோ பேச்சுக் கொடுத்தபடி அவசரமாய் சமையலை முடித்த மித்ரா, பவித்ராவுக்கு தன் கையால் ஆசை ஆசையாக உணவுகொடுத்த பிறகே மகனோடு அனுப்பிவைத்தாள்.
கீர்த்தனனை பார்க்கும் ஆவலில் ஓடிப்போய் பால்கனியில் நின்றுகொண்டாள்.
கடைசியாக நீக்கோவை சந்தித்த அன்றுதான் பார்த்தாள். அதன்பிறகு அவனை பார்க்கும் சந்தர்ப்பங்களை அவன் அவளுக்கு வழங்கவே இல்லை. இன்றாவது பார்த்துவிட ஆவல்கொண்டவளை ஏமாற்றாது, அங்கே காரிலிருந்து இறங்கிக்கொண்டிருந்தான் கீர்த்தனன். அவனது கம்பீரமான தோற்றத்தை, களையான முகத்தை, மகனின் கன்னங்களில் அவன் கொடுத்த முத்தங்களை எல்லாம் தன் ஆழ்மனதில் பொக்கிஷமாக சேகரித்துக்கொண்டாள். இந்த முத்தம், அணைப்பு, அன்பு அனைத்துமே அவளுக்கு இனி இல்லை.
அவன் விழிப் பார்வையாவது கிடைக்குமா? ஏக்கத்தோடு அவனையே நோக்கினாள். அவனோ திரும்பியும் பார்க்கவில்லை!
அவள் பால்கனியில் இருந்து பார்ப்பாள் என்று தெரிந்தும், நிமிர்ந்தும் பாராமல் போகிறான். இந்தப் புறக்கணிப்பு எல்லாம் அவள் சிறுவயதில் இருந்து அனுபவித்துத்தான்.
அப்படியே அவள் வாழ்க்கை போயிருந்தால் இதெல்லாம் ஒரு பெரிய பாதிப்பை உண்டாக்கியே இருக்காது. வாழ்க்கையில் அடி வாங்கி வாங்கியே மரத்துப் போயிருந்தது மனம்.

