ஒருபக்கம் மனதில் தாங்கமுடியாத வலி என்றால், காலையில் எழும்போதே வயிற்றில் என்னவோ செய்வது போலிருந்தது. முதுகில் வேறு வலித்தது. நடக்கவே முடியாது போல, என்னவோ அடைப்பது போலத் தோன்றவும் அப்படியே கட்டிலில் சாய்ந்துகொண்டாள். பெரிய வயிறு வேறு இட்டுமுட்டாக, மூச்சு எடுக்கவும் முடியாமல் பெரும் சிரமப்பட்டாள்.
மெல்ல மெல்ல உயிரே போய்விடுமோ என்கிற அளவுக்கு வலி எடுக்கத் தொடங்க, பயந்துபோனவள் உடனேயே கணவனுக்கு அழைத்தாள். அழைப்பு துண்டிக்கப்பட்டது.
இந்த நேரத்தில் கூடவா கோபத்தை பிடித்து வைப்பீர்கள் கீதன். இங்கே எனக்கு உயிபோகும் போல் வலிக்கிறதே.. தாங்க முடியவில்லையே.. நெஞ்சம் அரற்ற, திரும்பத் திரும்ப அவள் அழைத்தபோதும் அழைப்பை ஏற்கவேயில்லை கீர்த்தனன்.
வயிற்று வலி கணவனின் வருகைக்காக காத்திருக்கும் அவகாசத்தை கொடுக்க மறுக்க, மீண்டும் அவள் அவனுக்கு அழைத்தபோது, இப்போது கைபேசி அணைக்கப் பட்டிருந்தது. உடலின் வலியையும் மிஞ்சிக்கொண்டு நெஞ்சு வலித்தது.
அவன் அருகாமைக்கு, பயப்படாதே என்று சொல்லும் ஆறுதல் வார்த்தைக்கு, அவனது கனிவான பார்வைக்கு, அவளின் கையைப் பற்றி உனக்கு நானிருக்கிறேன் என்கிற தைரியத்துக்கு, வெட்கம் விட்டுச் சொல்லப் போனால் அவனின் இறுகிய அணைப்புக்கு, ஒரு இதழ் முத்தத்துக்கு என்று அனைத்துக்குமே அவள் மனம் ஏங்கியது. தான் வேதனையில் துடிக்கும் நிலை அறிந்தாவது அவன் மனம் இளகாதா என்று அவள் காத்திருக்க அவனோ அவளுக்கு ஏமாற்றத்தை மட்டுமே பரிசாகக் கொடுத்தான்.
தாய்மை அடைந்ததற்கே நெஞ்சில் வைத்துத் தாங்கிய கணவன் இந்த நேரத்தில் அவளை எப்படியெல்லாம் கவனித்திருப்பான். அவளது வலியை தன்னதாக உணர்ந்து துடித்திருக்க மாட்டானா? கண்ணுக்குள் வைத்துக் காத்திருக்க மாட்டானா?
அதை பறிகொடுத்தது யார் தப்பு? அவளது அல்லவா! மனதில் ஆத்திரம் எழுந்தது. நெஞ்சம் ஆவேசம் கொண்டது! ஒழுக்கம் கெட்டுப் போனாய் தானே. அனுபவி!
ஒருவன் அணைத்தான் என்றதும் அதற்கு இசைந்தாய் அல்லவா! சுயபுத்தி இல்லாமல் போனாய் தானே! உனக்கு இது வேண்டுமடி! இது மட்டுமில்லை. இன்னும் வேண்டும்!
தனக்குள்ளேயே ஆங்காரம் கொண்டவள் உயிர்போகும் பிள்ளைப்பேற்று வலியை உதட்டைக் கடித்துப் பொறுக்க முயன்றாள். மனதின் வேதனைக்கு, அங்கிருந்த காயத்துக்கு இந்த வலி ஒருவித சுகத்தைக் கொடுப்பது போலிருந்தது.
ஆம்புலன்சுக்கு அழைத்தால் அடுத்த நிமிடமே வந்து நிற்பார்கள் தான். ஆயினும் அழைக்கவில்லை அவள். இது தண்டனை! அவளுக்கு அவளே கொடுத்துக்கொள்ளும் தண்டனை! அனுபவித்தே ஆகவேண்டும்!
மெல்ல எழுந்து வீட்டை விட்டு வெளியே வந்தவள் தன் காரில் ஏறி அமர்ந்தாள். அடிவாயிற்றை அடைத்துக்கொண்டு வலித்தது. மூச்சே எடுக்கமுடியவில்லை. காரில் அமர முடியாமல் என்னவோ வந்து தடுத்தது. கால்களை நீட்டவே முடியாமல் துடித்தாள். ஆனாலும் அருகிலிருக்கும் செல்லை எடுத்து ஆம்புலன்சுக்கு அழைக்கவே இல்லை! பெல்ட்டை கூட மாட்ட முடியவில்லை. இன்றோடு செத்துப் போனாலும் பரவாயில்லை, தப்பு செய்த எனக்கு தண்டனை என்று எண்ணி காரை மெதுவாக ஹாஸ்பிட்டல் விட்டாள்!
வலி வலி வலி..!
ஹாஸ்பிட்டலை நெருங்கிய நேரத்தில் ஈரத்தை உணர்ந்தாள். கைகால்கள் நடுங்கத் தொடங்கின. கண்கள் மெல்ல மெல்ல இருட்டத் தொடங்கினாலும் ஒருவழியாக ஹாஸ்பிட்டல் வாசலில் காரை விட்டவளால் இறங்கவே முடியவில்லை. கதவை மட்டும் தள்ளித் திறந்தவள் அருகே நடந்து சென்றவரின் கையை எட்டிப் பிடித்தபடியே மயங்கிச் சரிந்தாள்.
அதன் பிறகான நிகழ்வுகள் அத்தனையும் புகை மண்டலத்தின் நடுவே நடந்த காட்சிகளாக மட்டுமே அவள் கருத்தில் பதிந்தன.
கண்விழித்துப் பார்த்தபோது, தான் இன்னும் உயிருடன் இருப்பதும், தன் நெஞ்சில் குழந்தை கிடத்தப் பட்டிருப்பதும் தெரிந்தது. வயிறோ புண்ணாக வலித்தது. நெஞ்சமோ அதற்கும் மேலாய் புண்ணாகிக் கிடந்தது.
அதையெல்லாம் தாண்டிக்கொண்டு தாய்மையின் பூரிப்பில் உடலும் உள்ளமும் விம்மிச் சிலிர்க்க, அவளின் அருமை மைந்தனை வாரி அணைத்தாள். தன் உதிரத்தில் உதித்த மகனின் பட்டான நெற்றியில் இதழ்களை மிக மிக மெதுவாக ஒற்றி எடுத்தாள்.
தேகமெல்லாம் சிலிர்த்துப்போனது. அவளின் பிறந்த தினத்திலேயே அவள் பெற்றெடுத்த பிஞ்சின் கதகதப்பு காயம்பட்ட உள்ளத்தை தடவிக் கொடுத்ததில் மீண்டும் மீண்டும் பல முத்தங்களை பதித்தாள்.

