சண்முகசுந்தரத்துக்கு நடந்ததே இங்கேயும் நடந்தது. அவன் வீட்டை விட்டு உடனடியாக வெளியேற்றப்பட, “உன்னை விடமாட்டேண்டி! என் குடும்பத்தையே கெடுக்கப் பார்க்கிறாயா? இதற்கு உன்னை பழிவாங்காமல் விடமாட்டேன். ‘ஏன்டா அவன் வாழ்க்கையில் தலையிட்டேன்’ என்று உன்னைக் காலாகாலத்துக்கும் கண்ணீர் வடிக்க வைக்காவிட்டால் என் பெயர் விஸ்வா இல்லை!” என்று அவளிடம் உறுமிவிட்டுப் போனான் அவன்.
நெஞ்சம் குலுங்க, நொறுங்கிப்போய் நின்றாள் மித்ரா. இதென்ன பழி?! ஏன் இந்தச் சாபம்? படுவதே போதாதா! நெஞ்சம் வெடிக்கும் போலிருக்க வாயை கையால் பொத்திக்கொண்டு தன் வீட்டுக்குள் அவள் ஓட, அவளைப் பின்தொடர்ந்து ஓடினான் நீக்கோ.
வீட்டுக்குள் சென்றதுமே அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு கதறத்தொடங்கிவிட்டாள் மித்ரா.
“நான் அப்படி என்ன பிழை செய்தேன் என்று இப்படி ஆளாளுக்கு என்மேல் கோபப் படுகிறார்கள்? அந்தப்பெண் செத்துவிடுவேன் என்று சொன்னதால் தானே போலிசுக்கு அழைத்தேன். அன்றைக்கும் வித்யா அடிதாங்க மாட்டாள் என்றுதான் அழைத்தேன். அப்பா எனக்கு இன்னும் எத்தனை அடி அடித்திருந்தாலும் அதை செய்திருக்க மாட்டேன் நீக்கோ.. ஏன் எல்லோருமே என்னை வெறுக்கிறார்கள்? என்னை பெற்ற அப்பாவை எனக்கு நினைவே இல்லை. அவரை நான் பார்த்தே இல்லை. அம்மா.. அருகில் இருந்தும் என்னை பாசமாக பார்த்துக் கொண்டதே இல்லை.. வெறுப்போடு பார்ப்பார். இல்லை சுமையாக நினைப்பார். இப்போது இவன்.. அப்படி என்னதான்டா நான் பாவம் செய்தேன். என் மேல் பாசம் காட்ட, அக்கறை காட்ட எனக்கென்று யாருமே இல்லை நீக்கோ..”
அடிபட்ட மானின் கதறலாய் அவள் கதறியபோது தேற்றும் வழியறியாமல் திண்டாடிப்போனான் நீக்கோ.
“ஏஞ்சல்.. அழாதே! நீ செய்தது மிகச்சரி. அன்றைக்கு நானே உன்னிடம் சொன்னேன் தானே போலிசுக்கு அழை என்று. அவன் என்னவோ சொன்னால் நீ அதற்கு அழுவாயா? என் ஏஞ்சல் தைரியமான பெண்ணாயிற்றே..” இப்படி அவன் எவ்வளவோ ஆறுதல் சொன்னபோதும், அதையெல்லாம் விளங்கிக்கொள்ளும் சக்தியற்று அத்தனை வருட ஆறாக்காயத்தை, மனரணத்தை கதறித் தீர்த்துக் கொண்டிருந்தாள் மித்ரா.
வாய்ப்பேச்சு கைகொடுக்காமல் போனதில், அவளை அணைத்து, ஆறுதலாக முதுகை தடவிக்கொடுத்து, கன்னம் வருடி, கண்ணீரை துடைத்துவிட்டு என்று ஆரம்பித்த நீக்கோவின் பயணம், இதமாக நெற்றியில் இதழ் ஒற்றலில் வந்து நின்றது.
அதை உணரக்கூட மாட்டாமல் அவள் அழுகையில் கரைய, நெற்றியில் ஆரம்பித்த அந்தப் பயணம் எப்படி எங்கே சென்றது.. என்ன நடந்தது என்று தெரியாமலேயே இரு உடல்களின் சேர்க்கையில் சென்று முடிந்தது.
சில அசம்பாவிதங்களுக்கு காரணங்களை தேடவோ, கண்டறியவோ முடியாது. இதுவும் அப்படித்தான். இங்கே யாரும் எதையும் திட்டமிடவில்லை. மனதிலும் அழுக்குப் படியவில்லை. காதலில் யாரும் கரையவும் இல்லை. உணர்வுகளின் பிடியில் சிக்கிக் கொள்ளவுமில்லை. ஆனாலும் தேகங்கள் சங்கமித்தன.
இதை வயதின் கோளறு என்பதா? பருவக் கவர்ச்சி என்பதா? அல்லது வாழ்க்கையின் கோட்பாடுகளை அறியாத அறிவிலிகளின் செயல் என்பதா? ஏதோ ஒன்று! ஆனால், மித்ராவின் வாழ்வில் மிகப்பெரிய அசம்பாவிதம் நடந்தேறியிருந்தது!
மனதின் அதிர்ச்சியோடு உடலுக்கு உண்டான அதிர்வும் சேர்ந்துகொள்ள ஆழ்ந்து உறங்கிப்போனாள் மித்ரா. நடு இரவில் கண்விழித்தபோது, நடந்ததை எண்ணியவளின் தேகமும் நெஞ்சமும் குலுங்கியது. நடந்ததை என்ன விதமாக எடுத்துக்கொள்வது என்று தெரியாமல் குழம்பித் தவித்தாள்.
ஆனாலும் மனதில் ஒரு திடம் வந்திருந்தது!
அவளுக்காக அவள் உயிர் நண்பன் இருக்கிறான்! இனி என்றைக்கும் அவளோடு இருப்பான் என்கிற நம்பிக்கை. அந்த நம்பிக்கை கொடுத்த துணிவோடு அவனை அணைத்துக்கொண்டு மீண்டும் உறங்கிப்போனாள் மித்ரா. அடுத்தநாள் காலையில், நீக்கோவின் கைபேசியின் அலறலிலேயே கண் விழித்தனர்.
எடுத்தது அந்த ஊருக்கு அவன் தேடிவந்த நண்பன்!
“ஹாய் நீக்கோ. நான் வீட்டுக்கு வந்துவிட்டேன். இன்று நம் நண்பன் கெவினுக்கு திருமணநாள். உன்னிடமும் சொல்லச் சொன்னான். இன்று மதியவிருந்து இருக்கிறது. பன்னிரண்டு மணிக்கு வருகிறாயா? நாம் இருவருமே ஒன்றாகப் போவோம்.” என்று கேட்டான்.
அருகில் படுத்திருந்து தன்னையே பார்த்துக்கொண்டிருந்த மித்ராவை பார்த்துவிட்டு, “எங்கே என்று அட்ரெஸ்சை நீ எனக்கு அனுப்பிவிடு. நாம் அங்கே சந்திக்கலாம்.” என்றுவிட்டு அலைபேசியை வைத்தான் அவன்.
சற்று நேரம் அமைதி. இருவருக்குமே பேச்சை ஆரம்பிக்க தயக்கம். அதையும் மீறி ஆரம்பிக்க நினைத்தாலும் என்ன பேசுவது என்று தெரியவில்லை. அழகான நட்பு என்பதைத் தாண்டி தாங்கள் அடுத்த படிக்கு போய்விட்டோம் என்பதை இருவரும் உணர்ந்ததில், அதுநாள் வரை அவர்களுக்குள் இருந்த சகஜ நிலை மாறி சங்கடம் ஒன்று சூழ்ந்தது.
மீண்டும் நிமிடத்துளிகள் அமைதியில் கழிய, அவளைப் பார்த்துப் புன்னகைத்து, “இன்றைக்கு ஒரு திருமண விருந்து இருக்கிறது. போவோமா?” என்று கேட்டான் நீக்கோ.
“எனக்கு அழைப்பு இல்லையே. அதோடு யார் என்றும் தெரியாது.” என்றாள் மித்ராவும் சகஜமாக உரையாட முனைந்தவளாக.
“எனக்கு அழைப்பு இருக்கிறதே..” என்றான் அவன்.

