தனிமைத் துயர் தீராதோ 32 – 3

ரோஜா மொட்டிதழ்களை அசைத்து, மொழியறியா அழகான சங்கீதம் ஒன்றை இசைத்தபடி முகத்தை சற்றே அசைத்துக்கொண்டான் அவளது அருமை மைந்தன்.

 

மார்பின் மேலே கிடந்த மகவின் அசைவு நெஞ்சுக்குள்ளே நிறைந்து கிடந்தவனின் நினைவுகளைக் கிளறிவிட, மித்ராவின் செவியோரங்கள் கண்ணீரால் நனைந்தன.

 

அதுவரை நேரமும் தாய் சேயினது அன்புப் பரிமாற்றத்தைக் கண்டு ரசித்தபடி இருந்த தாதிப்பெண் வந்து அவள் தலையை தடவிக்கொடுத்தாள்.

 

“எப்படி இருக்கிறாய்?”

 

உலர்ந்திருந்த உதடுகளை நம்ப மறுத்து தலையை மட்டும் ‘பரவாயில்லை’ என்பதாக அசைத்துவைத்தாள் மித்ரா.

 

“கொஞ்சம் வலி அதிகமாகத்தான் இருக்கும். அதற்குக் காரணமும் நீதான். எவ்வளவு ஆபத்தான வேலை பார்த்திருக்கிறாய். வீட்டில் யாரும் இல்லை என்றால் ஆம்புலன்சுக்கு அழைத்திருக்கலாம் தானே. உன் கணவர் எங்கே?” என்று அவள் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதில்கள் அற்றுப்போக, கண்களில் கண்ணீர் பெருகியது.

 

எத்தனையோ விதமான பிரசவங்களை பார்த்துப் பழகிய அந்தப் பெண்மணி அவளின் கண்ணீரைக் கவனித்துவிட்டு இதமான குரலில் பேசினார். “சந்தோசமான நேரத்தில் எதற்கு அழுகிறாய்? இனி நீ அழகான ஆண் குழந்தைக்கு அம்மா. உன் மகனைப்பார். கறுத்த சுருள் முடிகளும் குண்டுக் கன்னங்களும், கருமணி விழிகளுமாக அப்படியே உன்னைப்போல் இருக்கிறான்.” என்று அவளின் எண்ணங்களை மகனின் புறமாகத் திருப்பினாள்.

 

உண்மைதான்! அவள் பெற்ற மகன் அச்சு அசல் அவளைப்போலவே இருந்தான், கணவன் ஆசைப்பட்டது போன்று!

 

பிள்ளை பிறக்கும் நேரத்தில் அவன் அருகிலேயே நிற்க வேண்டும், பிள்ளைபெறும் வலியை அவனது கைப்பிடியில் கடக்க வேண்டும், தொப்புள் கொடியை கணவனே கத்தரிக்க வேண்டும், குழந்தை பிறந்ததும் இருவருமாக சேர்ந்துதான் முதன் முதலில் முத்தமிட வேண்டும் என்று அவர்கள் பேசிக்கொண்டது என்ன? நடந்தது என்ன?

 

கண்களை கண்ணீர் நனைக்க, செல்லை எடுத்துப் பார்த்தாள். கீர்த்தனன் அழைத்ததற்கான எந்த அறிகுறியையும் காணோம்! திரும்பவும் தானே அழைத்தாள். அப்போதும் கைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

 

‘உங்களுக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறான் கீதன்..’ என்று மெசேஜ் அனுப்பிவிட்டு, சத்யனுக்கு அழைத்து விஷயத்தை சொல்ல, விழுந்தடித்துக்கொண்டு ஓடிவந்தான் அவன்.

 

வந்தவனுக்கோ, அனாதைபோன்று தமக்கை தனியாகக் கிடப்பதைக் கண்டபோது, தான் மாமாவாகி விட்டோம் என்பதையும் மீறிக்கொண்டு அழுகையும் ஆத்திரமும் சேர்ந்தே வந்தது.

 

“அந்தாள் எங்கே அக்கா?”

 

“அவரை மரியாதை இல்லாமல் பேசாதே சத்தி.”

 

“வேறு எப்படிச் சொல்வதாம்? மனிதன் என்றால் மனதில் கொஞ்சமாவது ஈரம் இருக்கவேண்டும். உன்னோடு என்ன கோபம் என்றாலும் இப்படியா தனியாக விடுவார்?” என்றபடி அவன் கீர்த்தனனுக்கு அழைக்க முயல, அதை தடுத்தாள் மித்ரா.

 

“பிள்ளை பிறந்திருப்பது அவருக்கு தெரிந்திருக்காது.” என்றாள் மெல்லிய குரலில்.

 

“நீயேன் சொல்லவில்லை?”

 

“சொல்லத்தான் எடுத்தேன். அவர் கதைக்கவில்லை. இப்போது மெசேஜ் அனுப்பி இருக்கிறேன்.”

 

“நீ எந்த நிலையில் இருந்தாய் என்று தெரியும். அப்படி இருந்தும் அழைப்பை ஏற்கவில்லை என்றால் என்ன அர்த்தம்? பொறு.. நானே கேட்கிறேன்.” என்று அவன் திரும்ப செல்லை எடுக்க,

 

அதை தடுத்தபடி, “தப்பு என்பேரில் தான் என்று சொன்னேனே சத்தி.” என்றாள் மித்ரா.

 

“அப்படி என்ன செய்து தொலைத்தாய் அக்கா நீ? அத்தான் இப்படி அக்கறை இல்லாமல் இருக்க மாட்டாரே. கேட்டாலும் சொல்கிறாய் இல்லை, அவரோடு கதைக்கிறேன் என்றாலும் விடுகிறாய் இல்லை.” என்ற தம்பியை கலங்கிய விழிகளோடு பார்த்தாள் மித்ரா.

 

அன்று, கீர்த்தனன் மேல்மாடிக்கு தன் பொருட்களோடு சென்றதும், அடுத்தநாள் சத்யனுக்கு அழைத்து ஒரு பூங்காவுக்கு வரச்சொன்னவள், தனக்கும் கீதனுக்கும் சின்னப் பிரச்சனை என்றும் அது தீரும் வரைக்கும் வீட்டுக்கு வரவேண்டாம் என்றும் சொல்லியிருந்தாள்.

 

“அத்தானுக்கும் உனக்கும் சண்டையா?” நம்பமாட்டாமல் கேட்டான் சத்யன்.

 

கலங்கிய விழிகளை கட்டிப்படுத்த முயன்றுகொண்டே தலையை அசைத்தாள் மித்ரா.

 

“என்ன சண்டை அக்கா?” என்று கேட்டவனிடம் என்னவென்று சொல்வாள்?

 

“நீ சின்னவன் சத்தி. அதெல்லாம் உனக்கு வேண்டாம். கொஞ்ச நாட்கள் போக எல்லாம் சரியாகிவிடும். அதுவரை எனக்காக அத்தானிடம் எதையும் நீ கேட்கக் கூடாது. காரணம் தப்பை செய்தது நான்.” என்று மட்டும் சொன்னாள்.

 

அவளுக்காக எதுவும் செய்வானே அவளது தம்பி. அத்தானை பார்க்காமல், அவரோடு கதைக்காமல் எப்படி இருப்பது என்று உள்ளம் கேள்வி எழுப்பினாலும் சரியென்று தலையாட்டினான்.

 

 

error: Alert: Content selection is disabled!!