தனிமைத் துயர் தீராதோ 31 – 4

அவனை அழைத்தால் அது அவளையும் அழைத்தது போல்தான் என்கிறான்! முகம் மலர, “சரி போவோம். எத்தனை மணிக்கு?” என்று கேட்டாள்.

 

“பன்னிரண்டுக்கு..”

 

“பண்ணிரண்டுக்கா? இப்போதே மணி பத்து. எழும்பு நீக்கோ.. குளித்துத் தயாராகவே சரியாக இருக்கும்..” இருவரும் தயாராகி அங்கே சென்றபோது, நள்ளிரவு வரைக்கும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று மிகவும் மகிழ்ச்சியாகக் கழிந்தது நேரம்.

 

திரும்பி வரும்போது, நீக்கோ காரை செலுத்திக்கொண்டிருக்க மித்ரா அவன் தோளில் சாய்ந்திருந்தாள்.

 

இருவருமே எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அங்கு சென்றதிலிருந்து ஒருவரின் அருகாமையை விட்டு மற்றவர் பிரியாதபோதும், மற்ற நண்பர்களுடன் கலந்துபேசிச் சிரித்தாலும், அவர்களுக்குள் எப்போதும் இருக்கும் எந்தத் தங்கு தடையும் அற்ற பேச்சு, அந்தக் கிண்டல், சிரிப்பு, ஒருவரை ஒருவர் வாருவது அதெல்லாம் நின்றிருந்தது.

 

மித்ராவுக்கோ கெவின் நடத்திய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்ட அந்த எளிமையான திருமண விருந்து மிகவுமே பிடித்திருந்தது. அதை நீக்கோவிடமும் பகிர எண்ணி, “நம் திருமணமும் இப்படி எளிமையாக நடக்கவேண்டும் நீக்கோ. நண்பர்கள் மட்டுமே போதும்.” என்றாள்.

 

சடாரென்று பிரேக்கை அழுத்திக் காரை நிறுத்திவிட்டு, “நம் திருமணமா?” என்று அதிர்ச்சியோடு கேட்டான் நீக்கோ.

 

அந்த அதிர்ச்சி உள்ளே சென்று தாக்க, அவன் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திகைத்துவிட்டு, “ஆ..மாம். நம் திருமணம் தான்.” என்றாள் மித்ரா.

 

“நாம் நண்பர்கள். காதலர்கள் இல்லை. நமக்குள் திருமணமா?”

 

இதென்ன பேச்சு?

 

“அப்..போ இரவு நடந்தது? அது.. நண்பர்கள் செய்வது இல்லையே.”

 

அவன் முகத்தில் புன்னகை மலர்ந்தது. ”ஹேய் ஏஞ்சல்!” என்றபடி அவளது இடையை வளைத்து, “இரவு நடந்தது ஒரு அழகான விஷயம். அதற்காக திருமணம் செய்வதா?” என்றான் அவன் சிறுபிள்ளைக்கு எடுத்துரைப்பது போன்ற குரலில்.

 

அதிர்ச்சியோடு நண்பனைப் பார்த்தாள் மித்ரா. “பின்னே?” சிரமப்பட்டு அந்த ஒற்றை வார்த்தையை உதிர்த்தாள்.

 

“இப்படியே வாழ்வோம். என்றைக்கு சலிக்கிறதோ அன்று விலகிக்கொள்வது தானே.” இலகுவாகச் சொன்னான் அவன்.

 

திருமணம் நடந்தால் கடைசிவரைக்கும் அவளோடு இருப்பான் என்று நினைத்தாளே! சலித்துவிட்டது என்று அவன் விலகிப்போனால் மீண்டும் அவள் தனித்துப்போவாளே!

 

அவளின் உயிர் நண்பனா மீண்டும் அவளைத் தனிமைத் துயரில் தள்ளப் பார்க்கிறான்? நம்ப மறுத்தது அவளது சின்ன இதயம். “நீ சு..ம்மா விளையாட்டுக்கு தானே பேசுகிறாய் நீக்கோ?” கேட்கையிலே குரல் நடுங்கியது.

 

அவளை ஆதரவாக அணைத்துக்கொண்டான் அவன். “ஏஞ்சல்..! இங்கே பார். என்றைக்குமே நீ என் உயிர் தோழி. அது மாறாது. அதற்காக திருமணம் செய்ய முடியுமா? நமக்கு அந்த வயதும் வரவில்லை. எனக்கு அதில் நாட்டமும் இல்லை. பிடிக்கும்வரை சேர்ந்திருப்போமே, அதற்கு எதற்கு திருமணம்?”

 

இல்லை என்றது அவள் மனது! இன்றைக்கு அவனது பிரிவைத் தாங்க முடியாமல் சம்மதித்துவிட்டு, எப்போது போய்விடுவானோ என்று பயந்து பயந்து வாழ முடியுமா?

 

அன்று சண்முகசுந்தரம் ‘இந்த வீட்டில் நீ இருக்க வேண்டுமானால் முழுச் சம்பளத்தையும் என்னிடம் தரவேண்டும்!’ என்று சொன்னபோது, தற்காலிக சந்தோஷத்துக்காக அவள் சம்மதித்திருக்க இன்றைய முன்னேற்றம் அவளுக்கு கிட்டியே இருக்காது. அன்றும் உயிரை துடிதுடிக்க வைத்த துன்பத்தோடுதான் வெளியேறினாள். இன்றும் அப்படி ஒரு முடிவை எடுக்கும் நிலையில் அவளை நிறுத்தியிருக்கிறது விதி!

 

என்றோ நடக்கப் போகும் பிரிவை இன்றே நிர்ணயித்துவிட்டால் பாதிப்பு குறையுமல்லவா!எந்த உறவுமே அவளுக்கு நிரந்தரமில்லை. யாருமே அவளுக்காக இல்லை.

 

உள்ளம் தணலில் விழுந்த புழுவாய் துடிதுடிக்க, “இல்லை! இப்படியான ஒரு நட்பை என்னால் தொடர முடியாது நீக்கோ.” என்றாள் உறுதியான குரலில்.

 

நிமிர்ந்து முடிவுகளை சொல்வதில் அவள் வல்லவள்தான்!

 

அந்த மறுப்பை எதிர்பாராதவன் அதிர்ச்சியோடு பார்த்தான். விழிகளில் திரண்ட நீரோடு, “கடைசியில் நீயும் என்னை ஏமாற்றிவிட்டாய்.” என்றாள் மித்ரா.

 

மறுத்துத் தலையசைத்தான் அவன். “உன்னிடமிருந்து இந்தப் பதிலை நான் எதிர்பார்க்கவில்லை. அதற்காக என்னை ஏமாற்றிவிட்டாய் என்று சொல்ல முடியுமாß அப்படித்தான் என் பதிலும்.” என்றவன் காரை மித்ராவின் வீட்டுக்கு முன் நிறுத்தினான்.

 

அமைதியாகவே இருவரும் வீட்டுக்குள் செல்ல, சற்று நேரத்தில் தன் பாக்குடன் தயாராகி வந்தான் நீக்கோ.

 

அப்போ போகவே போகப் போகிறான் என்கிற தவிப்பை, அகன்ற விழிகளில் அடக்க முயன்றபடி அவள் பார்க்க, பாக்கை நிலத்தில் வைத்துவிட்டு வந்து அவளை அணைத்துக்கொண்டான் நீக்கோ.

 

“நீ கவலைப்படுகிறாயே என்பதற்காக திருமணம் புரிந்தால் இருவருக்குமே அவஸ்தைதான். இப்போது யோசிக்கையில் நேற்றைய சம்பவம் நடக்காமல் இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. ஆனால்.. இனி அதை மாற்ற முடியாது. என்றும் நீ மகிழ்ச்சியோடு இருக்கவேண்டும் என்று நினைக்கிற நானே உன்னை நோகடித்துவிட்டேனோ என்று நினைக்கையில் வருத்தமாக இருக்கிறது. அதற்கு திருமணமும் முடிவல்ல. இந்தப் பிரிவுதான் இருவருக்குமே நல்லது. அதனால் இப்போது நான் போகிறேன். மீண்டும் சந்திக்கலாம்.” என்றவன், அவள் நெற்றியில் தன் இதழ்களை பதித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

 

error: Alert: Content selection is disabled!!